பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
காட்சிதர மறுப்பதுமில்லை
ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்
அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்
நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்
நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்
உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்
உள்ளமதில் வந்துநின்றிடுவான்
தெளிவுடனே நாளும்தேடுங்கள் – அவன்
விரைவினிலே உதவவந்திடுவான்
ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்
எங்களுடன் இணைந்துநின்றிடுவான்
தோழமையாய் இருந்துபாருங்கள் –அவன்
துயர்துடைக்க வந்துநின்றிடுவான்
கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்
கருணைமழை பொழிந்துநின்றிடுவான்
கண்ணீரால்நனைத்துப்பாருங்கள் – அவன்
காலமெலாம் உதவிநின்றிடுவான்
சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்
தனைமறந்து பக்கம்வந்திடுவான்
தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்
இனிமையெலாம் தந்துநின்றிடுவான்
காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்
கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்
ஒளியென நினைத்துப்பாடுங்கள் – அவன்
நலமனைத்தும்தந்துநின்றிடுவான்
நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்
நீதிதர மறுப்பதுமில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
பூரணமாய் தந்துநின்றிடுவான்
தரவு – முதுவை இதயத்து
Leave a Reply