மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு!
மழலையர் பாலுக்கு அழுது ஏங்க,
மறுசிலர் மதுவினால் வயிறு வீங்க,
முதியவர் நோய்நீக்கும் மருந்து வாங்க,
முடியாமல் முதுமையில் சுருண்டு தூங்க,
முடைநாற்ற அரசியல் செழித்து ஓங்க,
மங்கையர் மனத்துயர் மேலும் ஓங்கும்!
மண்குடிசை வீட்டுக்குள் பாம்புகள் ஓட,
மாளிகை முற்றத்தில் தோகைமயில் ஆடும்!
மழைவளம் இல்லாமல் மண்வயல் வாட,
மந்திரிகள் வீட்டிலோ பொன்னூஞ்சல் ஆடும்!
மனநலம் திரிந்துலவி மேன்மக்கள் வாட,
மணிமுடி தரித்தவர் மீத்தேனை நாட,
மட்கலம் போலுடைந்து நொறுங்கும் தமிழா!
மதிமலர் வாடாமல் எழுந்து வா! வா!
முட்புதர் போல்வளர்ந்த அரசியல் காட்டை,
மைவிரல் வாள்வீசி வீழ்த்தலாம் வா! வா!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Leave a Reply