இரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்?

“புலி வருகிறது புலி வருகிறது” எனப்  பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார் இரசினி. இப்பொழுது ”வாசலில் நிற்கிறது, நான் சொல்லும் பொழுது வரும் என்பதுபோல் கட்சி தொடக்கம் குறித்து அறிவித்துள்ளார். இதற்கே ஆதரவு, எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.

சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் போட்டியிடப்போகும் அவர் கட்சியானது சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புவந்த்தும் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததும் முடிவெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு விரைவில் வந்தால்,  போதிய கால வாய்ப்பு இல்லை என்று பின்வாங்கலாம். கழுவும் மீனில் நழுவும் மீனாக உள்ள அவருடன் இணைவதற்கும் பலர் முன்வருகின்றனர். வெறுப்பில் இடம் மாறக்கூடாது என்பதற்காகத் தன் அன்பர்களைக் கட்டிப் போடுவதற்ன உத்திதான் இவ்வறிவிப்பு என்றே  தோன்றுகிறது.

ஆன்மிக அரசியலை நடத்த கட்சி தொடங்கியுள்ளேன்“ என்று இரசினி அறிவித்துள்ளார். ஆன்மிகம் என்பதை என்ன பொருளில் இவர் கையாண்டுள்ளார் எனத் தெரியவில்லை. சமயம் சார்ந்தது எனில் தமிழ்நாட்டில் இக்கருத்து எடுபடாது. இறைநெறி என்பது தனியர் சார்ந்தது. இதனைப் பொதுவில் கையாளப் பெரும்பான்மைத் தமிழக மக்கள் விரும்புவதில்லை.  எனவேதான் பெரியார்மண்ணில் இந்தப் பருப்பு வேகாது எனப் பலர் கூறுகின்றனர்.

பெரியார்மண் என்றால் இறைமறுப்பு மண் என எண்ண வேண்டா. இறை மறுப்பு என்பது பெரியார் கொள்கைதான். ஆனால் அவரின் கொள்கைகளில் அதுவும் ஒன்றே தவிர, அதுமட்டுமே அவர் கொள்கை அல்ல. பழந்தமிழ் மக்கள் நிலத்திணைகளையும் அதற்கேற்ற கடவுட் கொள்கையுடனும் வாழ்நதவர்கள். வழிவழியாக அக்கடவுட்  கொள்கையும் தமிழ் மக்களிடையே ஊறி  உள்ளது. இடையே ஆரியமாயைகள் தமிழக மக்களிடம் படிந்து விட்டன. இவற்றால், பகுத்தறிவின்மையும் மூடநம்பிக்கைகளும் பெருகிவிட்டன. திருவள்ளுவர், கபிலர், சித்தர்கள் முதலானவர்கள் ஆரிய எதிர்ப்பை வலியுறுத்திய வழியில் வள்ளலார் முதலானவர்களும் கண்ம்மூடிப்பழக்கம் மண்மூடிப் போக வேண்டினர். இவர்கள் வழியில் வந்த தன்மானம், தன்மதிப்பு முதலியனவே பெரியார் மண்ணின் அடையாளங்கள். பெரும்பான்மையர் சமயப் பொறுமையை விரும்புபவர்கள். நடிகர் இரசினிக்குத் திரையன்பர்கள் மிகுதியானவர்கள் இருப்பினும் கட்சித்தலைவர் இரசினிக்கு அத்தகைய ஆதரவு இருக்கும் என எதிர்பார்ப்பது அறியாமையாகும். அதுவும் பாசகவின் சார்பாளராக அறிமுகமாகிறார் என மக்கள் நம்புவதால் எதிர்பார்க்கும் பயன் விளையாது.

துணிவும் வலிமையும் உள்ள யாவரும் கட்சி தொடங்கலாம் என்னும் பொழுது கட்சி தொடங்குவது அவரது விருப்பம். இந்த நேரத்தில் அவரின் நடிப்பு வாழ்க்கை,  போலிச்செயல்பாடு, தமிழக மக்களின் போராட்டங்களில் பங்கேற்காமை, தமிழக மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமை, அவரது மாநிலமாகச் சொல்லப்படும் கருநாடகம் அல்லது மராத்தியில் தமிழர்கள் துன்புறுத்தப்படும் பொழுது வாய்மூடி அமைதி காத்தல், ஈழத்தில் பன்னூறாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்பட பொழுதும் பிற நாடுகளில் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளானபோதும் தனக்குத் தொடர்பு இல்லாததுபோல் நடந்துகொண்டமை என்பனபோன்றவற்றால், அவருக்கு  எதிராகப் பலரும் குரல் கொடுக்கின்றனர். இவை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டுமே  தவிர அவரை ஏசுவானேன்?

அவரது அன்பர் மன்ற இணையத் தளத்தில் ”வாழ்க தமிழ்! வெல்க தமிழ்க்குடி!” என்னும் முழக்கம் உள்ளது. (ஒற்றுப்பிழையைத் திருத்தியமைக்குப் பாராட்டுகள். பிற எழுத்துப் பிழைகளையும் திருத்துக.) எனவே, தமிழக மக்களின் வாக்குகள் வேண்டுமென்றால் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவர் உணர்ந்துள்ளார் எனலாம். எனவே வாக்குகளுக்காகவாவது தமிழர்நலன் குறித்து வாய்திறக்கலாம். ஆனால், உண்மையிலேயே கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிடும்பொழுதுதான் வாய்திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதுவரை பூச்சாண்டிதான் காட்டிக் கொண்டிருப்பார்.

தமிழ்நாட்டில் தமிழர்தாம் ஆட்சிப்பொறுப்புகளுக்கு வரவேண்டும் என்னும் தமிழ்த்  தேசிய உணர்வுள்ளோர் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதில்தான் கருத்து செலுத்த வேண்டும். அவரது அன்பர்கள் அவரைக் கட்சிக்கு அழைப்பதன் காரணம் அதன் மூலம் தங்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கும் என்ற ஆசைதான். பிற கட்சியின் வரவேற்பு அவருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கணக்கிற்காகத்தான். சில கட்சிகளின் பொறுப்பாளர்கள் அல்லது பிறர் அவருடன் இணைய விரும்புவதன் காரணம் பொறுப்புகள் கிடைக்கும் என்ற பேராசையே!

ஆசையின் காரணமாகக் கட்சிதொடங்குவதை வரவேற்பவர்களையும் ஊடகங்களையும் தவிரப் பிறர், அவரது கட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அவர் கட்சி தொடங்குவதற்குக் காரணங்களாகக் கூறும் தருமம், உண்மை, வெளிப்படைத்தன்மை ஆகிய பண்புகள் அவரிடம் உள்ளனவா என மக்களை எடை போடச் செய்வதில் ஈடுபடாமல் அவரைத் திட்டிப் பயனில்லை.

மொழிவாரி மாநிலப் பகுப்பின்பொழுது தமிழ்நாட்டில் தமிழர் தலைமைச்செயலாளராக இல்லாமையால்தான், தமிழ்நாட்டின் பல பகுதிகளைப் பிற மாநிலங்களிடம் பறிகொடுத்தோம். தமிழர்நலன் தொடர்பான  எந்தச் சிக்கலாக இருந்தாலும்  அது குறித்து முடிவெடுப்போர் தமிழரல்லாதவர் என்பதால்தான் தமிழர்நலன் புறக்கணிக்கப்பட்டு இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். மீனவர்கள் உயிர்கள், உடைமைகள் இழப்பு, ஈழத்தமிழர்க்கு உதவ இயலாமை போன்றவற்றிற்கும் முதன்மைக் காரணம் தமிழரல்லாதவர் முடிவெடுக்கும் இடங்களில் இருப்பதுதான். இவற்றை மக்களிடம் உணர்த்தித் தமிழரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உணர்த்த வேண்டும். மாறாக, இதுவரை பிறமொழியினர் தலைமையில் அடிமைப்பட்டுக்கிடந்துவிட்டுப் புதிதாக அடிமைப்படுத்த வருபவரைத் தூற்றிப் பயனில்லை.

ஆரவாரப் பேச்சுகளும்,  அடுத்தவர் உரைகளுக்கு வாயசைப்பதும் ஆள்வதற்குரிய தகுதிகள் அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். இரசினியின் கட்சி முயற்சிக்குத் தோல்வியைப் பரிசாகத் தந்தால்,  பிறருக்கும் பாடமாக இருக்கும் என உணர்ந்து செயல்படத் தமிழக மக்களை வேண்டுகிறோம்!

நாட்டுமக்கள்மீது அன்பும்  நாட்டுமொழி அறிவும் நாட்டையும் மொழியையும் முன்னேற்றும் திறமையும் பதவிகள் மீது பேராசையின்மையும் உடையவர்களைத் தேர்வு  செய்ய வேண்டும்.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 513)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல 219, மார்கழி 16 – மார்கழி 22,  2048 /   திசம்பர் 31  – சனவரி 06, 2018