மருத்துவமனை மரணங்கள்

கண்ணுக்குத் தெரியாத விவரங்களுக்குக்
கவலைப்படவேண்டியிருக்கிறது மருத்துவமனை மரணங்கள்

மன்னித்துவிடுங்கள் என்னால் முடிந்தவரை முயன்று விட்டேன்
மருத்துவரின் ஒற்றை வார்த்தையில்

உறவினர்களின் எத்தனை உழைப்பு முடங்கி இருக்கும்

அறுவைப் பண்டுவத்திற்கு வாங்கிய கடனின் அழுத்தம்
அடக்கச் செலவுக்கு எங்கே போவேன்
என் வருத்தம்

பணத்தைக் கொடுத்தால்தான்
பிணத்தைக் கொடுப்பேன் என்று பிணக்கு
பிணவறை வாசலில் பிணமாக நான்

கண்ணுக்குத் தெரியாத உயிர் எப்போது போகும் என்று
யாருக்கும் தெரிவதில்லை மருத்துவருக்கும்
பிறகு எதற்கு இந்தப்
பித்தலாட்டத்தனம்

காவல்நிலைய மரணங்கள் கூடச்
சட்டத்தின் கட்டுபாட்டுக்குள்
விசாரணை வளையத்திற்குள்

மருத்துவமனை மரணங்களில் மருமங்கள் மட்டும்
மலையாய்க் குவிந்து கிடக்கின்றன
சத்தியமாய்ப் புரியவில்லை
சட்டத்தின் விடைதான் என்ன?

முதியோர்களைத் துரத்தி விட்ட இன்றைய இளைய தலைமுறையினரின்
நோயின் தீவிரம் முற்றிப் போகிறது

ஆங்கில மருத்துவமா நம்மை ஆண்டு கொண்டிருந்தது
பாட்டியை மட்டுமல்ல பாட்டி வைத்தியத்தையும்
புறக்கணித்து, குணமாக வேண்டிய நாம்
பிணமாகிப் போகிறோம்

இயற்கை உணவுகளை அருந்துங்கள் என்று
இறுமாப்போடு சொல்லமுடியவில்லை
செயற்கை உரங்களை நம்பித்தான்
இயற்கையே இன்று செழிக்கிறது

மருத்துவமனையின் விளம்பரங்கள் வேறு
முழு உடல் ஆய்விற்கு முன்னுரிமை

ஆசையும் அச்சமும் மட்டும்தான் ஆயுளின் எமன்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்

ஆசையைத் தூண்டி விட்டால்
அவனை வீழ்த்தி விடலாம்
பயத்தைத் தூண்டி விட்டால் அவனைப்
பாடையில் ஏற்றி விடலாம்

சில மருத்துவர்களைக்
கைராசி மருத்துவர்கள் என்பார்கள்
அவர்கள் மருந்தைவிட மனிதத்தைப் படித்தவர்கள்

அவர்கள் நாடி பிடித்துப் பார்க்கும் போதே
ஓடிவிடும் உங்கள் பயம்
கைபிடித்துப் பார்ப்பதில் கனிவு இருக்கும்
நோயாளியின் மனத்தில் துணிவு பிறக்கும்

ஆடை பாதி ஆள் பாதி என்பதைப் போலத்தான்
மருத்துவம் பாதி மனோதத்துவம் பாதி2003 – கால் தவறி கீழே விழுந்ததில்
எனது இடக் கை தோள்பட்டை இடம் மாறியது.
அறுவை சிகிச்சை இன்றி பொருத்தப்பட்டது
மருத்துவர் அறிவுரை வழங்கினார்
ஆறுமாதத்திற்கு அசையவே கூடாது
இப்படியே கையையும் வைக்க வேண்டும்.
தசைகள் எல்லாம் துண்டிக்கப்பட்டதாகப் பயமுறுத்தினார்

ஆறு நாட்களில் என் பணியைச் செய்யத் தொடங்கினேன்
இருசக்கர வாகனம் ஓட்டக் கூடாது என்றார் அதையும்

நாவை அடக்கினாலே
சாவைத் தள்ளிப் போடலாம்
நாவை அடக்கு
நல வாழ்விற்கும் நீண்ட வாணாளுக்கும்
எதை வேண்டுமானாலும் உண்ணுங்கள்
பசி எடுத்த பிறகு சுவைத்து உண்ணுங்கள்
பசித்துப் புசியுங்கள்

உலக வாக்காளர் நாள் கொண்டாட வேண்டா
உலக சீக்காளர் நாள் கொண்டாடுங்கள்
உலக நலவாழ்வு நாள் கொண்டாட வேண்டா
உலகச் சுரண்டல் நாளைக் கொண்டாடுங்கள்

உங்கள் வேலைகளை
நீங்களே செய்யப் பழகுங்கள்
உங்கள் தேவைகளை
நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
யாராலும் எதுவும் முடியாதது அல்ல

மலச்சிக்கலும் மனச்சிக்கலும் மனிதனுக்குப் பெரும் சிக்கல்
தேவையில்லாதவற்றை உண்ணுவதால் மலச்சிக்கல்
தேவையில்லாதவற்றை எண்ணுவதால் மனச்சிக்கல்

இரண்டையுமே செய்யாதீர்கள் நீண்ட வாணாள் நிச்சயம்
நடை பழகுங்கள் விடைபெறும் நோய்கள் மெலிந்திடும் யாக்கை

பொறாமை வஞ்சம் வேண்டா
பொசுங்கிப் போகும் உங்கள் நலவாழ்வு
பொறுமை கொள்ளுங்கள் பொன்னாய் மின்னும் உடல்

விதியை நொந்து பயணிக்காதீர்
சாலை விதிப்படி பயணியுங்கள்
மோதல்கள் தவிர்க்கப்படும்

நம் கை இழந்து போனாலும் வாழ முடியும்
நம்பிக்கை இழந்து போனால்
சாகத்தான் முடியும்

தீராத நோய் என்று ஏதும் இல்லை உன்னைத் தீர்த்து விட்டுப் போக
தீராத சந்தேகம் மாறாமல் இருக்கிறது
தீர்ப்பு எழுதும் முன் யோசியுங்கள்

மருத்துவமனை மரணங்களை
மறு ஆய்வு செய்யுங்கள்

மருத்துவமனை கூடக் கூட மயானங்களில் இடமில்லை
எரியும் பிணத்தோடு எரிகிறது என் சந்தேகம்
எரியாமல் எலும்புகளை என் தேகம்

சட்டத்தை இயற்றுங்கள்
சஞ்சலத்தைப் போக்குங்கள்

இவண்
ஆற்காடு க. குமரன்
9789814114