தலைப்பு-மாணவர் ஆற்றுப்படை-சி.இலக்குவனார் ; thalaippu_maanavar-aatrupadai

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

1/6

“இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும்

தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய்

வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல்

வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்”

எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே                          …5

“அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச்

சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்;

பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்;

முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில்

ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்!                        …10

கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை;

உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்;

செல்வரை நாடின் சினந்து துரத்துவர்;

மேடையில் அழகாய் விரிவுரை ஆற்றிடும்

மாந்தரை வேண்டின் மதிப்பதும் செய்திலர்.                         …15

பிறர்க்கென வாழ்வதாய்ப் பேசிடும் அவர்கள்

கையை விரித்து மெய்ந்நடுக் குற்று

இல்லை என்றே ஏசிக் கடிந்தனர்.

இரக்க நினைந்தே எவரிடம் செல்லினும்

ஏச்சும் பேச்சும் இரக்க உரையும்                                   …20

பெற்றனே அன்றி உற்றிலேன் பிறவே!

அரசினர் உதவி அடையும் தகுதி

உண்டெனக் கெனினும் ஒருகல் லூரியில்

சேர்ந்த பின்னரே சிலபல திங்கள்

கழிந்திட வேண்டும்; காசும் அற்றயான்                             …25

என்செய இயலும்? எங்கு நோக்கினும்

சாதியும் மதமும் சார்ந்த கல்லூரிகள்

பொருள்மிக உடையோர் புகும்கல் லூரிகள்

என்செய் கோயான்! எனக்குறு இடமிலை

கற்கும் திறனும் கருத்தும் இருந்தும்                               …30

வீணே திரிந்து வெந்துயர் அடையும்

எனக்குறு களைகண் எங்கும் கண்டிலேன்!”

 

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

 

– பேராசிரியர் சி.இலக்குவனார்