peshawar-attack01

மாய்ப்பதுவா மதவேலை?

முனைவர் க.தமிழமல்லன்ka.thamizhamallan

பாக்கித்தான் பெசாஅவரில் பள்ளிக்குள் சுட்டார்கள்

பயனென்ன? நுாற்றுக்கும் மேல்குழந்தை உயிர்பறிப்பால்?

ஆக்கித்தான் பார்க்கின்ற அரும்பணியில் இறங்காமல்

அறியாத குழந்தைகளை அழித்ததனால் என்னபயன்?

போக்குவதால் பல்லுயிரைப் புதுவளர்ச்சி மதம்பெறுமா?

போர்க்களத்தில் காட்டாத பெருவீரம் பேதைமையே!

நீக்குங்கள் வன்முறையை நிலையான நல்லன்பை

நிலவுலகில் விதையுங்கள்! நிலைக்காது மதவெறிகள்!

நல்வாழ்க்கை மக்களுக்கு நல்கத்தான் பன்மதங்கள்,

நாட்டோரை அச்சத்தால் நடுக்குவது மதப்பணியா?

கொல்லாத நற்பரிவைக் கொடுப்பதுதான் நன்மதங்கள்,

கொலைக்களமாய்ப் பள்ளிகளைக் குலைப்பதுவா மதவேலை?

பொல்லாத மதப்பிணியால்  கொல்நெஞ்சம் ஆகாமல்

புத்தன்பு நீர்கொண்டு புதுக்கிவிடல் மதமன்றோ?

வெல்லத்தான் இராமலிங்கர் மேன்மையாகச் சொல்லிவைத்தார்

மேய்விலங்காய்ப் பிஞ்சுகளை மாய்ப்பதுவா  மதவேலை?

கல்லார்க்கு நற்கல்வி கனிந்துதவல் மேன்மையடா!

கற்கின்ற பிஞ்சுகளைக் கருக்கிவிடல் தீமையடா!

இல்லார்க்குத் தேவைகளை இடுவதுதான் பெருமையடா,

இளங்குழவிக் கூட்டத்தைச் சுடுங்கொடுமை கயமையடா!

முல்லைக்கே தேரீந்த மென்னெஞ்ச உலகத்தில்,

மொட்டான குழந்தைகளைச் சுட்டானே கொடுமையடா!

வெல்லத்தான் வேண்டுமெனில் கொல்வதனால் முடியாது,

வேடுவரால் ஒருபோதும் விளைவேதும் கிடையாது!

 

chenjoalai-massacre01நினைவிற்காக :  செஞ்சோலைப் படுகொலை