under-the-sea01

 

அமிழ்ந்துறையும் மணிகள்

 ஆழ்கடலின் கீழெவர்க்கும்

     அறியமுடி யாமல்

அளவிறந்த ஒளிமணிகள்

     அமிழ்ந்துறையும், அம்மா!

 பாழ்நிலத்தில் வீணாகப்

     பகலிரவும் பூத்துப்

பலகோடிப் பனிமலர்கள்

     பரிமளிக்கும், அம்மா!

கடல் சூழ்ந்த உலகுபுகழ்

     காவியம்செய் யாமல்

கண்மூடும் கம்பருக்கோர்

     கணக்கில்லை, அம்மா!

 இடமகன்ற போர்முனைதான்

     ஈதென்னக் காணா

திறக்கின்ற வில்விசயர்

     எத்தனைபேர், அம்மா!

(வேறு)

 தக்க திறனிருந்தும் – நல்ல

     தருணம் வாய்த்திலதேல்,

மிக்க புகழெய்தி – மக்கள்

     மேன்மை அடையாரம்மா!

சூழ்நிலை வாய்த்திலதேல் – சூரனும்

     சோம்பி மடிவானம்மா!

பாழ்நிலத் திட்டவிதை வளர்ந்து

     பயன்மர மாமோ?

kavimani-thesiyavinakam01– கவிமணி தேசிக விநாயகம் (பிள்ளை)