dog01

சொல் காப்பியம் : அன்றும் இன்றும்

ஞெமலி மகிழ்தரு” என்ற சொல்லை ஆக்கி இச்செய்யுளை நான் எழுதியமைக்கு 01.12.2014 அன்று ஒரு நடு இரவில் படித்த “அகநானூற்றுப்பாடல்” (மணிமிடைபவளம்)தான் கரு. அதில் “மகிழ்” என்ற சொல் நாய் குரைத்தலை குறித்தது.கூரிய பற்களை உடைய நாய் “மகிழ”த் (குரைக்க) தொடங்கியதைப் புலவர் வெகு நுட்பத்துடன் எழுதியிருந்தார்.

அப்போது தான் என் ஐயம் கூட தீர்ந்தது.”கூரிய பற்கள் போல் இதழ்கள் கொண்ட பூவுக்கு “மகிழம்பூ” எனப் பெயர் ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டேன்.சொல் பூவிலிருந்து நாயின் பற்களுக்குத் தாவியதா இல்லை நாய் குரைத்தலே புலவருக்கு மகிழம்பூ இதழ்களை நினைவூட்டியதா என்று தெரியவில்லை. நம் தொன்மைத்தமிழின் சொல் ஆழத்தில் பற்பல மொழிகள் ஏன் இப்படி கிடக்கக்கூடாது? என்ற சிந்தனை என்னுள் எழுந்தது.

 

 

பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்

துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் 

இலங்குவேல் இளையர் துஞ்சின் வையெயிற்று 

வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் 

அரவவாய் ஞமலி மகிழாது மடியின்

பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின்

அகல்வாய் மண்டிலம் நின்றவிரி யும்மே 

அகநானூறு(மணிமிடைபவளம்): செய்யுள் 122 

பரணர் பாடியது. குறிஞ்சித்திணை.

இரவின் கொடிய பிடியில் துயர் உற்ற‌ தலைவியின் கூற்று.

 

  மகளின் நினைப்பில் ஒரு நோயால் பீடிக்கப்பட்ட அன்னை ஒருவழியாய் தூங்கினாலும், தூங்காமல் கடுமையாய் விழித்திருக்கும் கண்களோடு நகரக்காவலர்கள் வலம் வருவார்கள். அப்படியே வேல் ஏந்திய அந்த இளமை பொருந்திய காவலர்கள் கண் அயர்ந்தாலும் கூரிய பல்லும் வலஞ்சுழியாய் எப்போதுமே சுருண்டுகொண்டிருக்கும் வாலும் உடைய நாய் குரைக்கும். எப்போதும் சத்தம்போட்டுக் கொண்டிருக்கும் நாய் கூட குரைக்காமல் இருந்து தூங்கிவிட்டால் கூடப் பகல்போல் ஒளிவீசும் நிலவின் வெம்மை மிகுந்த கதிர்கள் விண்முழுதும் சூடேற்றி ஒரு வழியாய் அகன்ற விடியலாய் விரிந்து படரும்.

 

  இந்த வரிகள் இரவின் அமைதி, ஒலிகளால் சல்லடை ஆக்கப்படுவதை  விவரிக்கின்றன. இதில் வரும் “மகிழும்” “மகிழாது”என்ற சொற்கள் முறையே குரைக்கும் குரைக்காது என்று பொருள் உரைக்கப்படுகின்றன. கூரியபற்களோடு நாய் குரைப்பது புலவருக்கு “மகிழம்பூவை”க் கண் முன் கொண்டு வந்திருக்குமோ.இந்த எழுத்துக்குள் குகை வைத்து நான் நீண்ட தூரம் சென்றேன். அதன் குடைச்சலே நான் எழுதிய சங்க நடைக்கவிதை இந்த “வெள் நள் ஆறு”.

 வெள் நள் ஆறு

ஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு

நீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்

அல்கு பொலம்வரி அணியிழை நெகிழ‌

மைபொதி விசும்பு விரியுளை அன்ன‌

மஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா

நோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.

ஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்

வரிமணல் கீற வடியிலை எஃகம்

பசும்புண் பிளப்ப வெஞ்சமர்  கூர‌

அலமரல் ஆற்றா அளியள் ஆகி

கம்பலை உற்று கண்மழைப் படூஉம்

மடமும் பயிர்ப்பும் உடைபடுத்தாங்கு

ஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ

பொடிபட வீழ்க்கும் சேக்கை கண்ணே.

பொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி

பொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்

யாது ஆற்றினை?அழியுமென் அணிநிறை.

அரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்

ஆகுவன் அறிதி. வீடத்தருதி.

மலைபடு ஊர! மல்லல் சீர்த்து.

 53ruthra