வெற்றிச்சிங்கம் இலக்குவர்

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன …… தனதான

சட்டத்துறை நீதித் துறை பொறியியல்

நுட்பத்துறை ஆட்சித்துறை அறிவியல்

ஒட்பம் பல தேர்ந்திடும் மருத்துவம் எனவோதும்

புத்தம்புது கல்வித்துறைகளில்

தித்தித்திடும் தமிழ்மொழி இடம்பெற

நித்தம் வற் புறுத்திநம் அரசுடன் –போராடி

பக்தவத்சலரது ஆட்சியில்

மக்கள்திரள் தெருவினில் கூட்டியே

தெள்ளத்தெளி தமிழில் பரப்புரை – செய்தாரே

உச்சிக்கதிர் வெப்பச் சருகென

மக்கள்நலன் கெட்டுத் தொலைந்திட

ஒற்றைத்தனி மொழியா என இவர் —- கிளர்ந்தாரே

விட்டுக் கொடுத்திடின் நாம் வடவர்க்குக்

கட்டுப்படும் அடிமையாய் என்றுமே

சற்றும் உரிமையிலா அகதியாய்த் திரிவோமே

கட்டாயமாம் இந்தித் திணிப்பினை

தட்டிக் கேட்காமலே இருந்திடின்

விட்டோம் என விடுதலை உரிமையை —இழப்போமே

செற்றத்துடன் இந்தியை அகற்றியே

கொற்றத்தினை வெற்றித் திருவொடு

பெற்றுத்தமிழ்மொழியினை அரியணை — நிலைநாட்ட

சுற்றும் படை மாணவர் சூழ்ந்திட

வெற்றிச்சிங்கம் இலக்குவர் முழங்கிட

பெற்றார் கடுமைச் சிறைவாசமாம்—வேலூரே

  • பேராசிரியர்  முனைவர் மறைமலை இலக்குவனார்

[தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மறைந்த நாள் 0309.1973]