வெல்வோம் நாமென உறுதியெடு! – இரவி இந்திரன்
வெற்றி நமக்கென முழக்கமிடு!
வெல்வோம் நாமென உறுதியெடு!
வல்லவனே வாழ்வான்
வரலாறு சொல்கிறது.
வெல்பவனே வாழ்வான்
வெளிப்படை உண்மை.
கொல்வோம் என்றொரு போர்க்குணம் கொண்டு
எல்லையில் நிற்கிறது சிங்களம் இன்று
வெல்வோம் நாமென வேங்கைகள் கூட்டம்
பகை வென்றே காக்கிறார் எங்களின் தேசம்
தருமம் என்றொரு அடிப்படை உண்டு
தமிழனின் பக்கம் எப்போதும் உண்டு
வெற்றி என்றொறு மந்திரம் உண்டு
எங்கள் தலைவனுக்கது சொந்தம் என்றும்
இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் செய்!
இரத்தம் சிந்தும் யுத்த அரசியல் செய்!
அப்போது தான் நீ வாழ்வாய்!
என நிகழ்காலம்; சொல்லிநிற்கின்றது
காலத்தைக் கையிலெடு
கடமையை நெஞ்சிலெடு
நடப்பது என்னவென்று
நீ முதலில் தெளிவு கொள்
இனி என்னநடந்தாலும்
நீ அதற்குத் தயாராயிரு
உன் பணி என்னவென்று
நீ முதலில் தெரிந்து கொள்
உன் பணி இதுவென்று
உன் உறவுக்குப் பின் சொல்லிக்கொடு
எல்லாரும் பணிசெய்தால்
தேச விடியல் விரைவு பெறும்
உரிமைக்குரல் உரத்தொலிக்கட்டும்
உரிமைப் போர்க்கது உரம் சேர்க்கட்டும்
வெல்வோம் நாமென உறுதியெடு
வெற்றி எம் பக்கம் வந்து விடும்
உரிமையை வென்றுவிட
களங்கள் விரியட்டும்
சோகத்தை மாற்றிவிட
போராட்டம் தொடரட்டும்
களம் பல களமும்
புலம் பல களமும்
தினம் தினம் காண்போம்
நாளொரு பொழுது நமக்கென புலர
திடமது கொண்டு அத்தனையும் வெல்வோம்
வெற்றி நமக்கென முழக்கமிடு!
வெல்வோம் நாமென உறுதியெடு!
Leave a Reply