வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 3.தாய்தந்தையரைத் தொழுதல்
மெய்யறம் (மாணவரியல்)
[வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]
3.தாய்தந்தையரைத் தொழுதல்
- தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம்.
நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர்.
- அவரிற் பெரியர் யாருமிங் கிலரே.
அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை.
- 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக.
நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும்.
- அவர்பணி யெல்லா மன்பொடு செய்க.
அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும்.
- அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க.
அவர்களின் அறிவுரைகளை அறிந்து கடைப்பிடித்தல் வேண்டும்.
- அவர்பொருள் செய்தற் காந்துணை புரிக.
அவர்கள் பொருள் ஈட்டுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தல் வேண்டும்.
- அவர்நட் பெல்லா மவர்போற் கொள்ளுக.
பெற்றோர்களின் நண்பர்களை அவர்களைப் போன்றே மதிக்க வேண்டும்.
- அவர்பகை யெல்லா மவர்போற் றள்ளுக.
அவர்தம் பகைவர்களை அவரைப்போல் தவிர்க்க வேண்டும்.
- அவர்பெயர் விளங்கிட வறிவமைந் தொழுகுக.
அவர்கள் புகழ் விளங்குமாறு விவேகத்துடன் நடத்தல் வேண்டும்.
- இல்வாழ் வரசிற் கியைந்தவ ராகுக.
இல்வாழ்க்கைக்கு ஏற்ற தகுதிகளை உடையவராதல் வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
Leave a Reply