ma.ila.thangappa 1

உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால்

  உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை

குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்!

  குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ?

 

தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை

  தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே!

உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில்.

  உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே!

 

பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப்

  பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்!

மறவுணர்ச்சி முழுதழிந்தான்;  மானங்  கெட்டான்;

  வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே!

 

நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும்

  நீறாகிப் போனபின்னர் ஊதி ஊதி . . .

வெறுப்புத்தான் வருகுதையா! பயனும் இல்லை!

விட்டிடவும் மனமில்லை! வழி சொல்வீரே!

தரவு : பேரா. அறிவரசன்