தலைப்பு-இறைவர் விரும்பும்தமிழ்வழிபாடு : thalaippu_iraivar viumbum_thamizhvazhipaadu

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்!

கதைப்பாத்திரங்கள்:

சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர்

[திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்]

நாரதர்: சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா!

முருகன்: நாரதர் வருகிறார் பின்னே! தாரகம் வருகிறது முன்னே! ஏதோ சிறப்பு இருக்க வேண்டும்.

பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள்.

முருகன்: பூலோகமா? அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா?

சிவன்: [சிரித்து] முருகா! அவசரப்படாதே! பூலோகத்தில் நாரதர் எங்கு சென்றார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

[நாரதர் சம்போ மகாதேவா!எனக் கூறிக்கொண்டு நந்தியின் அருகே வருகிறார்.]

நந்தி: நாரதரே வருக! தங்கள் வரவு நல்வரவாகட்டும். ஏன் இவ்வளவு களைத்து வருகிறீர்?

நாரதர்: உலகம் இப்போது மாறிவிட்டது. முன் போல் பயணம் செய்ய முடியவில்லை. எங்கும் ஒரே தடங்கல். பரவெளியின் தூய்மைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் உடல் சோர்வடைந்துள்ளது.

நந்தி: [குரலைத் தாழ்த்தி] சிவனே, சிவனே என்றிருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்? அம்மையப்பர் தங்கள் வரவை எதிர்பார்த்திருக்கின்றனர்.

நாரதர்: அப்படியா? மகிழ்ச்சி! நான் வந்த செய்தி மிக எளிதாகிவிடும். சம்போ மகாதேவா!

[நாரதர் உள்ளே செல்கிறார்]

சிவன்: வருக நாரதரே! வருக! பூலோகம் எப்படி இருக்கிறது?

பார்வதி: [இடைமறித்து] எங்கு சென்றீர் நாரதரே?

நாரதர்: தாயே! நீங்கள் அறியாததா? இலண்டனுக்குச் சென்றேன்.

பார்வதி: இறையனாரே தமிழ் ஆராய்ந்த தமிழ்நாட்டையும் நாரதமுனிக்கு நயம்பட உரைத்த நாவானான இராவணன் வாழ்ந்த ஈழத்தையும் புறக்கணித்து இலண்டன் சென்றீரா! இது என்ன வேடிக்கை!

நாரதர்: பெருமாட்டியே! ஈழத்தமிழர்கள் இலண்டனில் சைவசமயமாநாடு நடத்துவதாகவும் அதில் தமிழக அறிஞர்களும் கலந்து கொள்வதாகவும் எனக்கு ஓர் அழைப்பிதழ் வந்தது.

சிவன்: ஓ!! சைவசமயமாநாடு, அதுவும் தமிழர்கள் இலண்டனில் செய்திருக்கிறார்கள். நான் தமிழை ஆராய்ந்ததை விட, அவர்கள் என்னைப்பற்றி ஆராய்ந்திருப்பார்கள். அப்படித்தானே நாரதா?

நாரதர்: ஆம்! ஆம்! அதற்கு என்ன குறைவு? ஆனால்…………….

பார்வதி: என்ன ஆனால்……….

நாரதர்: வந்து…. .. அந்த மாநாட்டில் தமிழர்கள் கிணறு வெட்ட நச்சுப் பூதம் புறப்பட்டிருக்கிறதாம்.

[நாரதர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த முருகன் வியப்புடன்]

முருகன்: என்ன நச்சுப் பூதமா?

[நாரதர் முருகனுக்கு அருகே ஓடிச்சென்று]

நாரதர்: முருகா! நீரும் இங்கா இருக்கிறீர்? தமிழ்க் கடவுளே! உமக்கு மிக்க மகிழ்ச்சி தரும் செய்தியுடனே வந்துள்ளேன்.

[முருகன் சினத்துடன்]

முருகன்: நாரதரே! முதலில் பூதம் என்றீர். இப்போது எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்கிறீர். இதில் எது சரி? என்ன தடுமாற்றம்?

நாரதர்: தடுமாற்றம் எனக்கல்ல. ஈழத்தமிழர்கள் எதை எப்படிச் செய்வது என்று தடுமாறுகிறார்கள். பழைய கலை பண்பாட்டை உட்கொண்டு வாழவும் அச்சம். புதிய கலை பண்பாட்டை உருவாக்கி வழிநடத்தவும் அச்சம். அதனால் வரும் கேடுகள் பல. அதனை அவர்கள் உணர்கிறார்கள் இல்லை. அவர்களுக்குப் பழைய கலை பண்பாட்டின் பெருமை புரிகிறது. ஆனால் அது உண்மையாக என்ன கூறியது என்பதை ஆரய்ந்து அறிய விரும்பாது, பண்டைய தமிழைப் படித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாக, கடவுள் கொள்கையில் தம்மிலும் அறிவு குறைந்தோர் சொல்வதைக் கேட்பவர்களாக இருக்கிறார்கள். தமிழைப் படித்தவர்களும் உண்மையைக் கூறுகிறார்கள் இல்லை. ஈழத்தமிழர்கள் மேலோட்டத்திற்குத் தமிழர்களாக வாழ்ந்து கொண்டு, புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் பண்பாட்டில் தங்கள் குழந்தைகள் தொலைந்து போகக் கூடாது என்ற அடிப்படை எண்ணத்தில் இருதோணியில் கால்வைத்தபடி வாழ்க்கைப் பயணம் செய்கிறார்கள்.

முருகன்: நாரதரே! பண்பாட்டுத் தடுமாற்றத்திற்கும் பூதத்திற்கும் என்ன தொடர்பு?

நாரதர்: சைவமும் தமிழும் பிரிக்க முடியாதன. தமிழர் கண்ட பெருநெறி, சைவத் திருநெறி. சைவசமயத்தைத் தமிழிலிருந்து வேறாக்கிய போது பிறநெறிகள் தமிழர் வாழ்வில் புகுந்தன. அந்த நேரத்தில் சமயக்குரவர் தோன்றி மீண்டும் சைவசமயத்தைத் தமிழுடன் பிணைத்தனர். அப்பிணைப்பை சேக்கிழார் உறுதிப் படுத்தினார்.

பார்வதி: ஆமாம். திருஞானசம்பந்தரை ‘முத்தமிழ் வாசகர்’ என்றும், திருநாவுக்கரசரைத் ‘தமிழ்மொழித் தலைவர்’ என்றும் சுந்தரரை ‘நற்றமிழ் நாவலர் கோன்’ என்றும் சேக்கிழான் பாராட்டினான்.

நாரதர்: முற்றிலும் உண்மை தாயே! தமிழும் சைவமும் ஒன்றில் ஒன்று தங்கி அன்றைய தமிழரின் வாழ்வியலைப் பண்படுத்தியது. இன்றைய தமிழன் அவற்றைப் பிரிப்பதால் அவன் வாழ்க்கை நெறி தடுமாறுகின்றது. இலண்டன் சைவசமய மகாநாட்டில் கோயில்களில் தமிழில் அருச்சனை செய்ய வேண்டும் என்றும், தமிழ் தோத்திர மொழி, ஆரியமே பூசைகுரிய மொழி ஆதலால் ஆரியத்திலேயே அருச்சனை செய்ய வேண்டும் என்றும் இரு வேறு குரல்கள் பிறந்தன.  பெரும்பான்மையர் இவற்றுள் எதைச் செய்வது என்று தடுமாறுகிறார்கள். முருகா! ஆரியம், தமிழ் என்று அவர்களிடம் கிளம்பிய இந்த நச்சுப்பூதம் உனக்கு மகிழ்ச்சி தரும் என்றே நான் நினைத்தேன். தமிழில் அருச்சனை செய்வது புதுச்செய்தி என்கிறார்களே! அது சரிதானா?

முருகன்: தமிழில் அர்ச்சனை செய்வது புதுச்செய்தியா?

சிவன்: ஆகா! பழைமையே புதுமைக்கு வித்து என்பதைத் தமிழர்கள் உணர்ந்துவிட்டார்கள். தொடரட்டும் அவர்கள் வாதம். பொறுத்திருந்து பார்ப்போம்.

முருகன்: தந்தையே! அது தவறு. எது உண்மை என்பதைத் தமிழர்கள் பழைய சமய, இலக்கிய நூல்கள் மூலம் அறியலாமே. ஆரியர் வரும்முன் தமிழரிடம் தெய்வவழிபாடு இருக்கவில்லையா? தமிழர் ஐவகை நிலத்திற்கும் ஐந்து தெய்வங்களை [குறிஞ்சி – முருகன், முல்லை – திருமால், மருதம் – வேந்தன், நெய்தல் – வருணன், பாலை – கொற்றவை] வைத்து வணங்கவில்லையா? சைவசமய மகாநாட்டினருக்குத் தமிழ் இலக்கியம் தெரியாவிடினும் நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படை ஆயினும் தெரிந்திருக்க வேண்டுமே.

நாரதர்: திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் வருவதல்லவா? அது  சைவசமய நூலாகுமா?

முருகன்: ஆம். அது என்னை வழிப்படுத்துவதால் அதற்குத் திரு என்னும் அடைமொழி கொடுத்து அதனைப் பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாகிய பதினொராம் திருமுறையில் சேர்த்திருக்கிறார்கள். தமிழர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எப்படித் தெய்வவழிபாடு செய்தார்கள் என்பதை நக்கீரன் கூறியுள்ளான். தமிழன் தன் பழைமையை அறிய வேண்டுமானால் சங்கத் தமிழைப் படிக்கவேண்டும்.

நாரதர்: ஆறாம் திருமுறையிற்றான் முதன் முதலில் தமிழன் என்ற பதம் வருகின்றதாம். அதற்கு முந்திய திருமுறைகளில் தமிழர் என்ற குறிப்பு வரவில்லையா?

[முருகன் வாய்விட்டு பலமாகச் சிரிக்கிறார், பின் நாரதரைப் பார்த்து]

முருகன்: சொல்வோர் சொன்னால் கேட்போருக்குப் புத்தி எங்கே போய்விட்டது? அது சரி, பன்னிரு திருமுறைகளும் தமிழில் தானே இருகின்றன. இன்றைய தமிழர் முதலாவது திருமுறை கூடப்படித்ததில்லையா? முதலாவது திருமுறையின் முதலாவது பதிகத்தையும் படிக்காமலா இலண்டனில் இத்தனை கோயில்களைக் கட்டிச் சைவசமய மகாநாடுகளை நடாத்துகிறார்கள்?

முதலாவது திருமுறையின் முதலாவது பதிகத்தின் பதினொராவது தேவாரத்தில்

ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறிய தமிழ் வல்லார்

 தொல்வினை தீர்தல் எளிதாமே

என வருகின்றதே! இந்தத் திருநெறிய தமிழ்வல்லார்யார்? தமிழரா? ஆரியரா? தமிழ் படித்த ஆரியராய் இருப்பரோ?

முதலாவது திருமுறையின் ஆறாவது பதிகத்தின் எட்டாவது தேவாரத்தில்

அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய

மந்திர வேதங்கள் ஓதுநாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கந்தம் அகில் புகையே கமழும் கணபதீச்சரம் காமுறவே

இதில் வரும் செந்தமிழோர்கள் யார்?

  நாரதரே பாரும், “அடி முடி தேடிய நான்முகனும் திருமாலும் அறியமுடியாதவனாய், மந்திர வேதங்களைச் சொல்கின்றவனாய் திருமருகலில் இருக்கும் அழகனே! செந்தமிழ் பேசும் தமிழர்கள் வணங்கிப் போற்ற செங்காட்டங் குடியில் இருக்கும் கணபதீச்சரத்தில் காட்சி கொடுக்கும் காரணத்தைச் சொல்” என்று என் தந்தையைப் [சிவனைப்] பார்த்து இத்தேவாரத்தில் திருஞானசம்பந்தன் கேள்வி எழுப்பி உள்ளான். சும்மா தமிழர் என்று கூறவில்லை. மிக உயர்வாகசெந்தமிழோர்கள்என்றல்லவா கூறியிருக்கிறான். இதைவிடவா தமிழுக்கும் தமிழருக்கும் புகழ் வேண்டும்?

  முதலாம் திருமுறையின் பதினொராம் பதிகத்தின் நான்காவது தேவாரத்தில் திருஞானசம்பந்தன் தந்தையைப்பற்றி

பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழ் அவையும்

உண்ணின்றதோர் சுவையும் உறுதாளத்து ஒலி பலவும்

மண்ணும் புனல் உயிரும் வருகாற்றும் சுடர் மூன்றும்

விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிம்மிழ லையே

எனக் கூறியிருக்கின்றான்.

 தமிழும் தமிழரும் இன்றி தமிழவை உருவாகுமா?  தந்தையை [சிவனை] பலவோசைத் தமிழ் அவை என்றல்லவா சம்பந்தன் போற்றியுள்ளான்!

 நாரதர்: முருகனே! சிவனாரைத் தமிழ் அவை என்று கூறியதாகச் சொல்கிறீர்கள். அவர்களோ, சிவன் ‘வேதம் ஓதி, வெண்ணூல் பூண்டு’ வருவதாகச் சம்பந்தனும், ‘புரிவெண்ணூல் திகழப் பூண்ட அந்தணன்’ என அப்பரும் கூறுவதால் அந்தணர் பூசை செய்வதா? எனக்கருதுவோர் அந்தணனாகவே காட்சி தரும் சிவனையும் கோயிலில் இருந்து அகற்றிவிடவேண்டும் என்கிறார்கள்.

தலைப்பு-நாரதர் : thalaippu-naarathar

குறிப்பு: அருச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன என்று திரு க உமாமகேசுவரன் அவர்களால் எழுதப்பட்டு 23ஆவது கலசம் இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மறுப்பாகக் கலசம் 25ஆவது சிறப்பு மலரில் [தை 1999இல்] இதனை எழுதினேன். அவர் குறிப்பிட்ட பெரியபுராணத்திலும் திருமுறைகளிலும் இருந்து எனது கருத்துக்கான ஆதாரங்களைத் தந்துள்ளேன்.

(தொடரும்)
 
இனிதே, 
தமிழரசி

தங்களூர் தமிழா? – பகுதி 1

27.05.2014

முத்திரை - இதழ் : muthirai_ithazh