(இராவண காவியம்: 1.7.26 – 1.7.30தொடர்ச்சி)

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்

வேறு வண்ணம்

        31.     குஞ்சோ ரைந்தின் மூன்றொழியக் கோலென் றலறுங் குருகேபோல்

               வஞ்சாய் நீயுன் பொருளிழந்து மண்மே டாவா யென்றலற

               அஞ்சா தக்கா ராழிபினும் ஐந்நூற் றோடீ ராயிரத்தே

               எஞ்சா நின்ற பெருவளத்தோ டிந்திரப் பேரின் றாக்கியதே.

        32.     அந்தோ முன்போற் றமிழ்மக்க ளானார் வடபா லடைவாகிக்

               கொந்தார் கானக் குலமுண்டு கொழுதே யடிமைக் குடியாக

               நந்தா வாய்மைத் தமிழ்நாடர் நலனுண் டகலா நிலைகொண்ட

               வந்தே றிகளைத் தீயாழி மண்வாய்க் கொண்டே வென்றதுவே.

கொச்சகம்

        33.     தொன்றுள்ள நகரிழந்த தூயதமிழ்ப் பாண்டியனும்

               இன்றுள்ள குமரிமுனைக் கிருநூறு கற்றெற்கில்

               குன்றுள்ள மலரவருங் குமரியாற் றங்கரையில்

               நின்றுள்ள தென்மதுரை நெடுகரம் புக்கிருந்தான்.

        34.     தென்மதுரை குடிபுகுந்த செய்யதமிழ்ப் பாண்டியனும்

               தன்மையுட னேயிரண்டாஞ் சங்கமது தான்கண்டு

               நன்மையொடு தமிழாய்ந்து நன்னூல்கள் பலசெய்து

               முன்மையினும் பன்மடங்கு முறைபுரந்தாங் கினிதிருந்தான்.

        35.    அடைக்கழகத் தலைநகரை யலைமூடப் புதிதாக

               இடைக்கழகங் கண்டாரவ் விடந்தனையுங் கடல்கொள்ளக்

               கடைக்கழகங் கண்டதனாற் கலைத்தமிழின் பெருவளர்ச்சி

               உடைக்கழகந் தொடர்பகலா தொருங்குநடை பெற்றதுவே.

(தொடரும்)

இராவண காவியம் – புலவர் குழந்தை

குறிப்பு :

31. தி.மு. 2500. தி. மு. திருவள்ளுவருக்குமுன்; திருவள்ளுவர் பிறப்பதற்கு

முன். குருகு – குருவி.