சந்தனத் தமிழன்
– கவிஞர் முருகு சுந்தரம்
அமிழ்தமாம் தமிழைக் காக்க
ஆருயிர் நெருப்பில் தந்த
தமிழவேள் சின்னசாமி
தமிழர்க்குப் பெரிய சாமி!
உமியினைப் போன்று மக்கள்
உலகினில் பலபேர் வாழ
இமயத்தைச் சிறிய தாக்கி
இவன் புகழ் எழுப்பி விட்டான்!
மக்களும் மறவன்; ஆட்டு
தக்கைகள் நடுவே மின்னும்
தனித்தவோர் தங்கக் கூர்வாள்;
சக்கைபோல் தமிழ ருக்குள்
சந்தனத் தமிழன்; அஞ்சிப்
பக்கத்தில் பதுங்கி டாமல்
பாய்கின்ற சிங்கக் குட்டி.
கொழுந்துவிட் டெரியும் தீயில்
குந்திய அப்பா அன்று
செழுந்தமிழ்த் துணையி னாலே
செவ்வுடல் காத்துக் கொண்டார்!
அழிகின்ற உடலி தென்றே
அருந்தமிழ்ச் சின்ன சாமி!
முழுகினாய் இன்று செந்தீ
முத்தமிழ் காக்க வேண்டி!
குயிலெலாம் உன்பேர் கூவும்!
குன்றத்துத் தென்றல் கூட
வெயில் மறைந் திருக்கும் மாலை
வேளையுன் புகழை வீசும்!
மாயல்தரும் தமிழ நங்கை
மாக்கவி வாணர் நாவில்
பயிலுறும் காலமெல்லாம்
பாடல்நீ பெற்று வாழ்வாய்!
– குறள்நெறி பங்குனி 02.1995 / 15.03.1964
Leave a Reply