(அகரமுதல 101 ஐப்பசி 01, 2046 / அக். 18.10.2015 தொடர்ச்சி)

attai_ezhilarasi03

  1. கரையிடை யிட்ட காட்டா றிரண்டு

கலந்தொன் றாகிக் கரைகடந் தோட

எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின்

குலமுங் குடியும் கொடிய சாதியும்

உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும்

  1. எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே

இருவருங் கரந்தனர் எய்தின ரின்பம்

இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர்

“மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில்

உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்”

  1. என்றறிந் திருவரும் எவருங்காணா

இயல்பினி லொழுகி இன்பந் துய்த்தனர்

இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்

எவரும் கொண்டிட ஏது வின்றி

எழிலர சியுமே இவனைப் பலர்முன்

  1. உருத்தே யிகழ்வள் “ஒன்றுமறியான்

விலக்குமின் இவனை; வேறொரு கணக்கன்

தேடுமின் திறனுடன் செய்வான்” என்பள்

தீங்கனி வாயால் செவியி லின்பம்

திளைக்குமாறு செப்புவள் வசையாய்

  1. புற்றராத் துணையை பொய்யாய்க் கடிப்பபோல்

அவள்தம் முன்னோர் அவளிடம் அணுகி

“தங்காய் இவனே தத்துவ முணர்ந்தோன்

ஒருவழி நில்லா ஒருபெருஞ் செல்வம்”

நம்மிடம் நிலைபெற நாடுவோன் என்றும்

  1. பகைவரும் இவனின் பண்புடை மொழிகளால்

நட்பின ராகி நமக்கா வனசெய

முயல்வ ரென்றற்பின் மொழியவும் வேண்டுமோ

இவனுடைத் திறலை; இவன் றுணை யின்றேல்

உலகிற் பெரும் பொருள் உற்றும் பயனிலை

  1. தங்காய் அவனை நலிவுறுத் தேலினி

அன்பா யொழுகு அவனு மொருவனே

நம்மைக்காக்க நாடி யுழைப் போன்”4

என்றலும் அவளும் இசையாதவள் போல்

தோற்றம் விளைத்து “சொல்லிய வுண்டேல்

  1. நன்றே யாகுக யானும் அவ்விதம்”

என்றே கூறி நன்றே யவனுடன்

கரவிற் கூடிக் காதலிற் கட்டுண்

டின்பந்துய்த் தனள்; எவரு மறிந்திலர்

(எழில் கூடும்)

padam_photo_Dr.S.Ilakkuvanar

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது

படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)

+++