கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 தொடர்ச்சி)
கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்
சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும்
துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும்
மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்!
மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்!
வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே
வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை!
அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும்
அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19)
கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக்
கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா?
புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப்
பொய்யகற்றப் புதுநெறியைப் போதித் தாரா?
செவிசேர்க்கத் தீங்கவிகள் தெரிந்த தாரா,
தெவிட்டாதக் கவியாறா? செல்வத் தாரா?
அவைகேட்க அளித்தாரா? அகிலம் தாரா
அறமழையைப் பொழிந்தாரா? அதுநம் பேறா? (20)
– சந்தர் சுப்பிரமணியன்
கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்
(தொடரும்)
Leave a Reply