(தமிழ்த்தாய் வணக்கம் 6-10 தொடர்ச்சி)

 

தமிழ்த்தாய் வணக்கம் 11-  15

 

நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்றால்

புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்றார்-வல்ல

தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில்

அமிழுந் துயரை அகற்று.   (11)

 

பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென

நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத்

தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச்

சிந்தை செலுத்து சிறிது.  (12)

 

அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற

இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப்

பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால்

ஆடுகின்ற தென்றன் அகம். (13)

 

தென்னகத்தைச் சேர்ந்திருக்கும் செந்தமிழர் வாழ்க்கையிலே

முன்னேறும் போதெல்லாம் மூளுகின்ற-இன்பத்தை

இங்குன்னை விட்டிங்கே யார்க்குரைப்பேன்; ஆற்றுக்குப்

பொங்கு கடலே புகல்.(14)

 

வள்ளுவனைப் பெற்று வளர்த்த மடிதனிலே

துள்ளிவிள யாடும் துடிப்புடைய-பிள்ளைநான்

தோன்றியதை எண்ணுங்கால் தோன்றும் பெருமையிலே

ஊன்றி நிலைத்த துவப்பு. (15)

(தொடரும்)

-பாவலர் நாரா. நாச்சியப்பன்