நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே!

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ யார் இவரோ?
ஆராரோ நிலம் பறிக்க
ஆராரோ அழுகின்றோம்.
கண்ணே நீ விழித்து விடு
கண்ணீரை விட்டு விடு
காலம் எங்கள் வசமாகும்.
அழுவதை நிறுத்தி விடு
சொந்த மண்ணில் படை வரலாம்
வெந்த புண்ணில் சீழ் வரலாம்
ஆர் ஆற்றி தீருமம்மா
ஆறாத எம் துயரம்?
எமக்காக குரல் கொடுக்க
எவர் குரலும் இரங்கவில்லை
எதிர்காலம் இருண்டிடினும்
எதிர் கொண்டு வெல்வோமடி!
கண்ணே நீ எழுந்திடம்மா
கண் விழித்துப் போராடு
கண்ணுறங்க நேரமில்லை
காலம் எம்மை அழைக்கிறது
ஆராரோ யார் இவரோ?
தாய் மானம் காப்பவரோ?
தாய் நாடு மீட்டிடவே
தாலாட்டை மறந்தவரோ?
நாளை ஒரு காலம் வந்து
நம் நிலத்தில் உறங்கிடலாம்
நல்லவளே எழுந்திடடி
சூரியனை மீட்டிடவே!
தேசத்தின் இருள் எல்லாம்
தேகத்தின் உழைப்பாலே
தேய்த்து அழித்திடுவோம்
தேனிலவே எழுந்திடம்மா!
ஆராரோ ஆர் இவரோ?
ஆரிங்கு இரங்குவாரோ?
ஆரின்றி போனாலும்
ஆற்றிடுவோம் எம் துயரம்!
கண்ணே என் கண்மணியே
கண் விழித்துப் பார்த்திடடி
கண்ணான தேசம் மீட்க
கண்மணியே விழித்தெழடி!

– செந்தமிழினி பிரபாகரன்