(மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார், தொடர்ச்சி)

 

தலைப்பு-மாணவர் ஆற்றுப்படை-சி.இலக்குவனார் ; thalaippu_maanavar-aatrupadai

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

3/6

ஆயினும்                                                                                          70

பாரியும் ஓரியும் வாழ்ந்த பாரில்

உற்றுழி உதவும் நற்றவ வள்ளலார்

அற்றோர் அல்லர்; ஆதலின் செல்வாய்

அணி புதுக் கோட்டை; அண்ணன் வீடு

எங்குள தெனநீ எவரை வினவினும்                                  75

அன்புடன் அங்கு அழைத்துச் செல்வர்

கலைபயில் சிறார்கள் களிப்புடன் அமர்ந்து

செய்தி இதழ்களும் செந்நெறி நூல்களும்

பயின்றிட அண்ணனும் பக்கம் இருந்து

ஐயமும் விளக்கி அறிவுரை பகர்ந்து                                80

கட்டுரை திருத்திடும் காட்சியும் காண்பாய்;

ஏழை மாணவர் எவரே யாயினும்

இன்னுரை புகன்று இயல்வன உதவுவர்.

தாழ்த்தப் பட்டோர் தம்குலச் சிறார்க்கு

காந்தி புரத்தில் கல்வி புகட்டிட                                         85

இரவுப் பள்ளியும் இலங்கிடச் செய்து

விளக்கும் பிறவும் விரும்பி அமைத்து

ஐயமும் போக்கிட ஆசான் அமர்த்தி

வகுப்பில் முதன்மையாய் வரவும் செய்து

பிறவியில் எவரும் பேதையர் அல்லர்                          90

‘வாய்ப்பும் வசதியும் வாய்க்கப் பெற்றால்

எவரும் பெரியராய் இனிதே உயரலாம்.’

என்னும் உண்மையை எவரும் தெரிந்திடப்

பரிசும் நல்கிடும் பண்பும் தெரிவாய்.

கால்நூற் றாண்டாய்க் கல்வித் தொண்டே                  95

கடவுள் தொண்டாய்க் கருத்துடன் ஆற்றி

ஒழுக்கம் புலமை உயர்நலப் பண்பு

மிக்கோர் தம்மை வெளிவரச் செய்துளர்.

மாணவர் எவரும் வருந்திடக் காணின்

பால்நினைந் தூட்டும் தாயினும் பரிந்து                    100

பிறர்அறி யாத பெற்றியில் உதவுவர்

தமக்குள ஊணும் தந்தநாள் பலவே

ஈட்டும் பொருளெலாம் ஈந்து மகிழ்பவர்;

ஏடும் இதழும் இனிய நூல்களும்

பற்பல பெற்றே பரிவுடன் அளிப்பர்;                              105

வீட்டின் திண்ணை விரும்புவோர் பள்ளியாம்

“நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு” என்ற

வள்ளுவர் வாய்மொழி வடிவம் அவரே!

 

– பேராசிரியர் சி.இலக்குவனார்