மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து
நஞ்சுண்டு மடிந்த முதல் “மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து நினைவு நாள் 4.2.1965
ஆதிக்க இந்தி மொழிக்கு எதிராக சனவரி 25 இல் மாணவர்கள் பற்ற வைத்த சின்னத் தீப்பொறி காட்டுத் தீயாகப் பரவி தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்க நாதனும் தங்கள் தேக்குமர உடலுக்குத் தீ வைத்து மாண்ட செய்தி கீரனூர் முத்துவை அலைக்கழித்தது. இவனுக்கு இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று என்பது உயிரோடும், உணர்வோடும் கலந்திருந்தது. 1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளித் தோழர்களோடு மொழி உணர்வு பற்றிச் சினம் கொப்பளிக்கப் பேசினான் என்பது பலருக்கு வியப்பாகத்தான் இருந்திருக்கும். அது மட்டுமல்ல- அந்த மாணவன் தன் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள கோயில் மண்டபச் சுவர்கள், சத்திரங்களின் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் இரும்புக் கம்பியால் சுரண்டி, “இந்தி ஒழிக”, “தமிழ்வாழ்க” என்று தன் உணர்ச்சியைப் பதிவு செய்து வைத்தான். புதுக்கோட்டை மாவட்டம் (அப்போது தஞ்சை மாவட்டம்) அறந்தாங்கி வட்டம், பாலைவனம் பகுதியைச் சேர்ந்த சின்னச் சுனையக்காடு ஊரில் 1943ஆம் ஆண்டு முத்து பிறந்தான். தந்தை பெயர் நடேச(சேர்வை). குடும்பத்தின் வறுமை காரணமாகப் படிக்க முடியாத நிலையிலும் முத்துவின் தமிழார்வம் குறையவில்லை. தந்தைக்கு உதவியாக உழவு வேலை பார்த்த போதும் தன் உள்ளத்தில் தமிழுணர்வைத்தான் அவன் பயிரிட்டுக் கொண்டிருந்தான். 1964ஆம் ஆண்டு புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் உள்ள கீரனூரில் விடுதிப் பணியாளராகச் சேர்ந்த போதும் முத்துவின் தமிழ்ப்பணி நின்ற பாடில்லை. மொழிப்போர் ஈகியர் மரணச் செய்திகளைத் தாளேடுகளில் படிக்கப் படிக்கப் பீறிட்டு வந்த சினமும் வேகமும் கீரனூர் முத்துவை அடங்கச் செய்ய மறுத்தது. இத்துணை ஈகத்தையும் துச்சமென மதித்த காங்கிரசுத் தலைவர்களும், அமைச்சர்களும் “இந்தியைத் திணித்தே தீருவோம்!” என்று கொக்கரித்தனர். இதையெல்லாம் நாளேடுகளில் படித்த முத்து அன்றைய முதல்வர் பக்தவச்சலத்திற்கு “இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்” என்றும், அண்ணா அவர்களுக்கு “தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்” என்றும், மடல்கள் எழுதி அந்த மடல்களைத் தன் மடியில் சுமந்தபடியே நஞ்சுண்டு இறந்து கிடந்தான். எந்த விதமான செல்வாக்கும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்த முத்து தன் உயிரைத் தாய்மொழிக்குக் கொடுத்து வரலாறானான். நன்றி: “தீயில் வெந்த தமிழ்ப்புலிகள்” நூலிலிருந்து.
– கதிர்நிலவன் முகநூல் பக்கத்தில் இருந்து
Leave a Reply