விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! – ‘வாசல்’ எழிலன்

 

அழகும் தமிழும் ஒன்றே தானாம்
அறிவைச் சேர்க்க அதுவே தேனாம்
பழகும் பாங்கில் பணிவே சீராம்
பண்பை உரைக்கும் பகுத்தறி தேராம்
உழவர் உணவை ஈட்டல் போல
உணர்வைத் தமிழே உலகுக் கீட்டும்
மழலை போல மகிழ்வைக் காட்டி
மலரும் முல்லைபோல் மணத்தைஈட்டும்

இளமை இனிமை இணைந்தே இருக்கும்
இன்பம் துன்பம் ஒன்றாய்ப் பிணைக்கும்
இலக்கை நோக்கும் இதயம்கொடுக்கும்
இல்லற வாழ்வை என்றும் மிடுக்கும்
கலக்க மில்லா நெஞ்சை நிறைக்கும்
கலையாய் அறத்தைக் காத்திட உரைக்கும்
விளக்காய் ஒளிரும் விந்தைத் தமிழாம்
விருந்தாய் எண்ணி விரும்பிப் போற்று.

‘வாசல்’ எழிலன்