(அகல் விளக்கு – மு.வரதராசனார். 59. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 24 தொடர்ச்சி


“வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்.”

“அண்ணன் சந்திரன்?”

“அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்.”

“அய்யோ குடும்பமே! இந்த நிலைமைக்கா வரவேண்டும்?

“இவள் என்ன செய்வாள்? நல்லவள்; சூது வாது அறியாதவள்.”

அப்போது அம்மா வந்து, “போனது போகட்டும் அப்பா. இப்படி நடப்பது உண்டுதான். நீ போய் அவளுடைய வீட்டுக்காரரைப் பார்த்துத் தக்கபடி சொல்லி அழைத்து வா. எப்படியாவது கணவனும் மனைவியுமாக வாழும்படியாகச் செய். கருப்பமாக இருக்கிற பெண் அடிக்கடி கண்ணீர் விட்டுக் கலங்குவது நல்லது அல்ல. கற்பகத்தின் அப்பாவுக்கும் தீராத கவலையாகிவிட்டது. மகனால் ஒரு பங்கும், மருமகனால் ஒரு பங்கும். அப்பனும் மகளுமாய் வீடு வாசல் நிலபுலம் எல்லாவற்றையும் மறந்து இங்கே வந்து கலங்கி நிற்கிறார்கள்” என்றார்.

சோழசிங்கபுரம் போய் மாலனைக் கண்டு பேசி முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். “அப்படியே செய்கிறேன் அம்மா” என்றேன். அதற்குள் முழுச் செய்திகளும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

தோட்டத்தை நோக்கிச் சென்றேன். அங்கே பாக்கியம் பருப்பில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தார். கற்பகம் பக்கத்தில் உட்கார்ந்து தொலைவில் உள்ள எதையோ பார்ப்பதுபோல் ஒரே பார்வையாக இருந்தாள்.

பாக்கியம், என்னைப் பார்த்து “நீ ஏதாவது கேட்டாயா, தம்பி?” என்றார்.

“ஆமாம் அக்கா. எனக்கு உண்மை தெரிந்தால்தானே நான் அவரைக் கேட்க முடியும்?” என்றேன்.

“இதைவிட உங்களுக்கு என்ன உண்மை வேண்டும்? நிறையச் செல்வத்தோடு வந்தால்தான் வாழலாம் என்கிறார். இல்லையானால் வரவேண்டா என்று சொல்கிறார்” என்று கற்பகம் சட்டென்று சொன்னாள்.

இதுதான் நல்ல வாய்ப்பு. இப்போதே அவளுடைய வாயிலிருந்து செய்திகளை வருவிக்க வேண்டும் என்று எண்ணினேன். “எவ்வளவு செல்வம் வேண்டுமாம்? எதற்காகவாம்?” என்றேன்.

“எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று கேட்டார். அப்பா அதற்கு இசையவில்லை. ஐந்து காணி நன்செய் நிலம் எழுதி வைத்திருக்கிறார். அதையும் அவரோ நானோ விற்க உரிமை இல்லாமல் எழுதி வைத்திருக்கிறார். அதற்கு மேல் பணமாகக் கேட்டால் இல்லை என்கிறார்.”

“நிலம் எழுதி வைத்தது அவருக்குத் தெரியுமா?”

“தெரியும். கடிதம் எழுதியாயிற்று. ஆள் வாயிலாகச் சொல்லியும் ஆயிற்று. அங்கிருந்து அவரும் சொல்லி அனுப்பினார் பணம்தான் வேண்டும் என்று.”

“இந்தப் பணப் பைத்தியம் அவருக்கு எப்படி வந்தது?”

“அது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும்.”

பழைய அம்பே முன்போல் என்னைப் புண்படுத்தியது.

“நீ நான்கு ஆண்டுகள் பழகியிருக்கிறாயாமே அப்போது இப்படிக் கெட்டவராகத் தெரியவில்லையா” என்று பாக்கியம் கேட்டார்.

“இல்லையே அக்கா. பிறகுதான் அவர் எப்படியோ மாறிவிட்டார்.”

“அப்புறமும் மாறியிருக்க மாட்டார். இவர் முந்நூறு, நானூறு, சம்பளம் வாங்குகிறார். இவரைப்போல் அவரும் ஆகியிருந்தால் ஒருவேளை நல்லவராகவே இருந்திருப்பார். அல்லது இவராவது பெரிய வேலைக்குப் போகாமல் அவரைப் போலவே நூறு ரூபாய்ச் சம்பளத்திலேயே இருந்தால் அவருடைய மனம் கெட்டிருக்காது.”

இப்படிக் கற்பகம் பச்சையாகச் சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை. என்மேல் மாலன் பொறாமை கொண்டிருந்தது.

“உங்களுக்குள் குடும்பத்தில் வேறு எந்தக் காரணத்தாலும் மனக் கசப்பு இல்லையே” என்று கேட்டேன்.

“உண்டு. எல்லாம் பணத்தின் காரணமாக வந்தது தான்.”

“எப்படி?”

“நகைகளை ஒவ்வொன்றாய்க் கேட்டார். மறுத்து வந்தேன். அதனால், முதலில் என்மேல் வெறுப்பு ஏற்பட்டது. பிறகு ஒவ்வொன்றாய்க் கொடுக்கத் தொடங்கினேன். பிறகும் அவருடைய மனம் அமைதியடையவில்லை என்மேல் வெறுப்பு வளர்ந்தது.”

“பணத்தைக் கொண்டு என்ன செய்தார்?”

“அதை ஒருநாள் பிடிவாதமாய்க் கேட்டேன். அன்று என்னை – வேண்டா. அதை எல்லாம் கேட்காதீர்கள்” இவ்வாறு சொல்லிக் கற்பகம் கண்ணீர் விட்டாள்.

எடுத்ததற்கெல்லாம் அழுது கண்ணீர் விடுவதால் பயன் இல்லை. அஞ்சாமல் போரிடவேண்டும். அல்லது அடியோடு பணிந்து அடங்கிப்போகவேண்டும். இரண்டும் இல்லாமல் இப்படி அழக்கூடாது” என்றேன்.

“நீ கேள் தம்பி. நான் சொல்கிறேன்” என்றார் பாக்கியம்.

“பணம் நகை எல்லாம் என்ன செய்தார்?”

“குறுக்கெழுத்துப்போட்டி முதல் குதிரைப் பந்தயம் வரையில் வழிகள் இல்லையா?”

“குதிரைப் பந்தயமா?” என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.

“அது அவ்வளவாக இருக்காது. இவளுக்கு எப்படித் தெரியபோகிறது? அதுபோன்ற தீமைகள் உண்டு என்று சொல்லலாம். இவள் கண்ணாரப் பார்த்தது ஒன்று. யாரோ சாமியார் ஒருவரை அழைத்துவந்து அவருக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்திருக்கிறார். பித்தளையைப் பொன் ஆக்குவதற்கு, இரும்பைப் பொன் ஆக்குவதற்கு என்று சொல்லி அந்தச் சாமியார் காசைக் கரி ஆக்கியிருக்கிறார். அதை இவளே பார்த்திருக்கிறாள். இவள் பார்த்து இரண்டு நாள் நடந்தது. பார்க்காமல் இருபது நாள் நடந்திருக்கும். அது ஒரு காரணம். இவளை அடித்துத் துரத்தியதற்கு, இவள் இல்லாவிட்டால் எங்காவது இருந்துகொண்டு எந்த வித்தையாவது செய்துகொண்டிருக்கலாம் அல்லவா?

“அடித்தா துரத்தினார்? உண்மையாகவா?” என்று துன்புற்றுக் கேட்டேன்.

“இல்லை” என்றாள் கற்பகம்.

என் மனம் ஒரு சிறிது ஆறுதல் அடைந்தது.

“அடித்திருந்தாலும் இவள் சொல்லமாட்டாள். குடும்பத்துக்குச் செய்த தீங்கைச் சொல்வாளே தவிர, தனக்குச் செய்த தீங்கைச் சொல்லமாட்டாள். கண்ணகியும் அப்படித்தானே பொறுத்து நடந்தாள்?” என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே, “அதோடு உனக்குப் பிறகு அவருக்கு வேறொரு நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் ஆவியுலகத்தில் எல்லாரோடும் பேச வல்லவராம். இறந்துபோன திலகர், கோகலே, பாரதியார், திருவள்ளுவர், ஒளவையார், ஐந்தாம் சியார்சு, விக்குடோரியா எல்லாரும் அந்த நண்பரோடு வந்து பேசுகிறார்களாம். உலகம் இப்படி இப்படி ஆகப்போகிறது என்று அவரிடம் மறைக்காமல் வந்து சொல்கிறார்களாம்” என்றார்.

“இவர்கள் எல்லாம் இன்னுமா தனித்தனியாக அப்படியே இருக்கிறார்களாம்?” என்றேன்.

“என்னவோ? அப்படி ஒரு நண்பர் கிடைத்து அவருக்கு ஆசையூட்டுகிறாராம்” என்றார் பாக்கியம்.

“இருக்கும். இதை நம்புகிறேன்” என்றேன்.

“எதை? ஆவியுலகத்தையா நீ நம்புகிறாய்?” என்று பாக்கியம் கேட்டார்.

“இல்லை அக்கா, கற்பகத்தின் வீட்டுக்காரர் இதை எல்லாம் நம்பக்கூடியவர். இப்படி ஏமாறக்கூடியவர் என்று நம்புகின்றேன். ஏன் என்றால், படிக்கும்போதே அவருக்கு ஆயிரத்தெட்டு மூடநம்பிக்கைகள் இருந்தன” என்றேன்.

“எல்லாவற்றிற்கும் சேர்த்து இப்போது பயன் விளைகிறது” என்று மின்வெட்டு போல் பேசினாள் கற்பகம்.

“அந்தத் தொழிலிலேயே இருந்து கிடைப்பது போதும் என்று எளிய வாழ்க்கை வாழலாமே! அதையும் விட்டு விட்டாரே!” என்றேன்.

“நீங்களும் பக்கத்திலேயே இருந்து அதே தொழிலில் நீங்களும் இருந்திருந்தால் ஒருவேளை விடாமல் ஒட்டி இருந்திருப்பார். முதலிலேயே அரை மனத்தோடு சேர்ந்தார். எந்த ஆவி வந்து என்ன சொல்லியதோ அந்த வேலையை விட்டு விட்டார். அதைப்பற்றி என்னிடம் சொல்லவே இல்லை. தாய் வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி தெரிந்தது” என்றாள்.

“ஊரில் நெல் ஆலை வைக்கிறாராம். அதற்காகக் கொஞ்சம் பணமாவது கொடுத்து உதவியிருக்கலாம்” என்றேன்.

பாக்கிய அம்மையார் மறுமொழி சொன்னார். “அப்படிச் செய்திருக்கலாம் என்று நானும் எண்ணினேன். கற்பகத்தின் அப்பா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இப்படிப்பட்டவர் நாளைக்கு எல்லாவற்றையும் அடகு வைத்து விற்றுக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போய் விடுவார். நம்ப முடியாது.

“மகன் தன்னால் கெட்டான். மகள் நல்லவள். அவளும் நடுதெருவில் நின்று கலங்க வேண்டுமா?”  ஒருக்காலும் நிலத்தை விற்றுப் பணமாகக் கொடுக்கமாட்டேன் என்கிறார். மகளை வைத்துக் கொண்டு வாழாவிட்டாலும் சரி நிலம் விற்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார். அவர் சொல்வதும் ஒரு வகையில் நல்லதாகத் தெரிகிறது. நாளைக்கு என்ன துன்பம் வந்தாலும், பேரப் பிள்ளைகளுக்கு விற்க உரிமை வைத்து எழுதியிருப்பதால், அந்த ஐந்து காணி நன்செய் நிலமாவது கற்பகத்தைக் காப்பாற்றும், அவளுடைய குழந்தைகளைக் காப்பாற்றும், மனம் திருந்தி வந்தால் அவளுடைய கணவரையும் காப்பாற்றும்” என்றார்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு