அகல் விளக்கு – மு.வரதராசனார்: 61
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 60. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 24 தொடர்ச்சி
நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், “அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை” என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே.
பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல் வந்து உட்கார்ந்தேன். சந்திரனோடு விளையாடியும் படித்தும் காலம் போக்கியது நினைவுக்கு வந்தது. கற்பகம் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லையே, அவனுடைய குற்றம் குறைகளைப் பற்றிப் பேசவில்லையே. ஒருகால், அவனுடைய கதை பழங்கதையாய்ப் போயிருக்கலாம். திருத்த முடியாதவன் என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்.
உடனே கற்பகத்தின் தந்தையைப் பார்க்கவேண்டுமே என எண்ணி, நேரே அந்த வீட்டை நாடிச் சென்றேன்.
அங்கே அவருடைய பேரன் திருவாய்மொழி சில குச்சிகளையும் நெருப்புப் பெட்டிகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவர் ஒரு மூலையில் எதையோ ஆழ்ந்து சிந்தனை செய்தபடி உட்கார்ந்தவாறே சாய்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், “வாப்’பா, கற்பகம் சொன்னாள். நான் வந்து பார்க்கலாம் என்று இருந்தேன். அதற்குள் இவனை என்னிடம் விட்டுவிட்டு அவளே அங்கே போனாள்” என்றார்.
“இங்கே வந்திருக்கிறீர்கள்” என்றேன்.
“என்ன செய்வது? பிள்ளையையும் பெண்ணையும் பெற்று வளர்த்து விட்டுவிட்டு, அவள் சுகமாகப் போய்விட்டாள். கவலை எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. பிள்ளையால் துன்பப்பட்டால் பெண்ணால் சுகப்படலாம் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டு வகையிலும் துன்பமே. ஊரில் இருக்க முடியவில்லை. பையனுடைய நடத்தை குடும்பத்திற்கே பழியாகிவிட்டது. உனக்குத் தெரிந்திருக்கும். அவனுடைய உடம்பும் கெட்டுவிட்டது; அது தெரியுமா?” என்றார்.
“தெரியாதே” என்றேன்.
“தொழுநோய் போல வந்துவிட்டது. உடம்பெல்லாம் பரவிவிட்டது. நாட்டு மருந்து சாப்பிட்டுப் பயன் இல்லை. இப்போது அடிக்கடி இராணிப்பேட்டைக்குப் போய் ஊசி போட்டுக்கொள்கிறானாம். அது எப்படியாவது போகட்டும் என்றால், அவனுடைய மனைவி – நல்ல பெண் – அவனிடத்தில் அகப்பட்டுக்கொண்டு சிறுமைப்படுகிறாள். அவளை மிருகம் போல் நடத்துகிறான், அடிக்கிறான், உதைக்கிறான். அதை எல்லாம் கண்ணால் பார்த்துக்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. சாப்பிடவும் மனம் வரவில்லை.
நாங்கள் வந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியே வாழும்போதாவது அன்பாக இருக்கட்டும் என்றுதான் வந்துவிட்டேன். அந்தப் பெண்ணோ, நாங்கள் புறப்பட்ட போது கதறிக் கதறி அழுதாள். தானும் எங்களோடு வருவதாகச் சொல்லி அழுதாள். எங்கள் குடும்பம் இப்படி இந்த நிலைக்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லையே” என்று அவர் கண்ணீரோடு கூறினார். பிறகு “மருமகன் செய்தி எல்லாம் சொல்லியிருப்பார்கள். நான் வேறு சொல்ல வேண்டியதில்லை. நல்ல பிள்ளை என்று எல்லாரும் சொன்னார்கள். நீயும் எழுதியிருந்தாய். அவன் இப்படி மாறிவிட்டான். எல்லாம் நான் வந்தவழி” என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினார்.
சிறிது நேரம் பேசியிருந்து ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினேன். அவருடைய மனத்தில் மகளைப் பற்றிய கவலையைவிட மகனைப் பற்றிய கவலையே மிகுதியாக இருந்ததை அறிந்தேன். கற்பகம் முதலானவர்களுக்குச் சந்திரனுடைய வாழ்க்கை இயற்கையாகிப் பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் சாமண்ணாவின் மனத்தில் அது இன்னும் ஆறாப் புண்ணாகவே இருந்து வருத்தி வந்தது.
மறுநாள் சோழசிங்கபுரத்துக்குப் போய் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். புறப்பட்டபோது அம்மா என்னைப் பார்த்து, அப்படியே தங்கை வீட்டுக்குப் போய் வா. அங்கிருந்து ஏழெட்டு மைல்தான் இருக்கும்” என்றார். சில அடி நடந்தபிறகு “அப்பா! அவள் வருவதாக இருந்தால் நீயே அழைத்துக் கொண்டு வா” என்றார்.
சோழசிங்கபுரத்தில் இறங்கி மாலனுடைய பெயரைச் சொல்லிக் கேட்டேன். நெல் ஆலை பற்றிச் சொன்னவுடனே வழி காட்டினார்கள். அங்கே சென்று கேட்டபோது அவன் ஊரில் இல்லை என்று அறிந்தேன். யாரோ ஒரு சாமியாருடன் காலையில்தான் திருத்தணிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாள் கழித்துத் திரும்பக்கூடும் என்பதாகவும் சொன்னார்கள். காணமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் தோன்றியது. “அவருடைய நண்பர் ஒருவர் இங்கே இலாரி வைத்திருக்கிறாராமே. அவர் யார்? எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன். சொன்னார்கள். அவரைத் தேடிச் சென்றேன்.
அவரிடம் சென்று மாலனுடைய நண்பன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “ஆமாம், ஆமாம் நினைவு வருகிறது. சொல்லியிருக்கிறார். எங்கேயோ பெரிய வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக இருக்கிறீர்களாமே, உட்காருங்கள்” என்றார்.
“அவரைப் பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். ஊரில் இல்லையாம்” என்றேன்.
“அப்படியா? மறுபடியும் வெளியூர்க்குப் போய்விட்டாரா? எனக்குச் சொல்லவில்லையே. அவர் ஊரில் இருப்பதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. பார்த்தீர்களா? நெல் ஆலை நடத்துகிற முதலாளி இப்படி அடிக்கடி வெளியூர்க்குப் போனால் தொழில் எப்படி நடக்கும்?”
“உண்மைதான்.”
“உங்கள் வேலை போல் ஒரு பெரிய வேலையாக அவருக்கும் வாங்கி கொடுத்திருக்கக் கூடாதா? பேசாமல் வேலையைச் செய்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவலை இல்லாமல் இருக்கலாமே. ஏன் இந்த வம்பு?”
“பெரிய வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லையே.”
“உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?”
“முதல் வகுப்பில் தேறியிருந்தேன். முதல் முறையிலேயே தேறியிருந்தேன். அப்போது சில வேலைகளும் காலியாகியிருந்தன. எனக்குக் கிடைத்தது ஒரு குருட்டு வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். நானே இப்போது முயற்சி செய்வதாக இருந்தால் கிடைக்காது.”
“போகட்டும் என் இலாரி கம்பெனியில் நூறு நூற்றைம்பது சம்பளம் தருகிறேன் என்று அழைத்தேன். அதையும் மறுத்துவிட்டார்.”
“இப்போது என்ன? இந்த நெல் ஆலையை நன்றாக நடத்தலாமே.”
“நடத்தலாம், நடத்தினால்தானே? அந்த நூறு நூற்றைம்பது ரூபாய் இதில் ஒழுங்காய் கிடைக்காதுபோல் இருக்கிறதே.”
“அய்யோ! ஏன் அப்படி? நல்ல வரும்படி கிடைக்கும் என்று சொன்னாரே!”
“இவர் அந்தப் புது ஆலை தொடங்கியவுடன், பழைய நெல் ஆலைக்காரர் இருவரும் போட்டிக்காகக் கூலியைக் குறைத்து விட்டார்கள். அவர்கள் முன்னமே இலாபம் தேடிக் கொண்டவர்கள். கையில் பணம் இருக்கிறது. ஆகவே புது ஆலை வளராதபடி கெடுப்பதற்காக இப்போது இலாபம் இல்லாமல் வேலை செய்யத் துணிந்துவிட்டார்கள். வேண்டும் என்றே கூலியைக் குறைத்து நெல் ஆடித் தருகிறார்கள். இன்னும் போனால், கூலி இல்லாமலே இலவசமாகவே நெல் ஆடித் தந்தாலும் தருவார்கள். முன்னமே பணம் சேர்த்திருக்கிறார்கள். அதில் கொஞ்சம் போனால் போகட்டும் என்று, துணிந்து செய்வார்கள். நம் நண்பர் என்ன செய்ய முடியும்? ஆலையை மூடவேண்டியதுதான்.”
“மூடினால், கடன்காரருக்கு வட்டி கொடுக்கவேண்டுமே அதற்கு எங்கே போவது” என்றார் பக்கத்தில் இருந்து எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்.
“மாமனாரிடத்தில் கொஞ்சம் பணம் எதிர்பார்த்திருக்கிறார். மாமனாரோ பணத்தில் அழுத்தமானவர் போல் தெரிகிறது. ஒரு பைசாவும் கொடுக்கவில்லை” என்றார் இலாரிக்காரர்.
“சே! அப்படிச் சொல்லக்கூடாது. நல்ல நன்செய் நிலமாக ஐந்து காணி மகள் பேரில் எழுதி வைத்திருக்கிறாராம்” என்றார் பக்கத்தில் இருந்தவர்.
“அதுசரி. நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு வேண்டிய களாக்கனி எங்கே?” என்றார் இலாரிக்காரர். மறுபடியும் அவரே, “வந்த பெண்டாட்டியாவது இவருடைய மனம் தெரிந்து நடப்பவராகத் தெரியவில்லை. நான் ஒன்று சொல்கிறேன். மனைவி சரியாக இருந்தால் யாருக்குமே சாமியார் பைத்தியம் பிடிக்காது. இந்த ஆள் சாமியார் சாமியார் என்று யார் யார் பின்னாலோ சுற்றுகிறார். இந்த அளவுக்கு அந்த அம்மா இவரை விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மாவே வீட்டிலே பூசை பண்டிகை சடங்கு மந்திரம் தந்திரம் என்று பலவகையான அமர்க்களங்கள் செய்து கொண்டிருந்தால், இவருக்கு அதிலே சலிப்பு ஏற்பட்டுப் போயிருக்கும். இப்போது இவரே அல்லவா அவற்றை எடுத்துக்கொண்டு அலைகிறார்.”
Leave a Reply