(அகல் விளக்கு – மு.வரதராசனார். 66. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 26 தொடர்ச்சி

“என்ன தெரிந்துவிட்டது?” என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். “சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?” என்றேன்.

மனைவி சிரித்தாள். “சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்” என்றாள். “உங்கள் வீட்டுக்காரர் பேர் என்ன என்று கேட்டார். பேரைச் சொன்னவுடன், சற்று விழித்துப் பார்த்தபடி இருந்துவிட்டு, ஊர் எது என்று கேட்டார். வாலாசா என்று சொன்னவுடன், திகைத்தாற்போல் இருந்தார். உடனே உங்கள் வீட்டுக்காரருக்குச் சந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறாரா என்று கேட்டார்.

அப்போது அவருடைய திகைப்பு முழுவதும் எனக்கு வந்துவிட்டது. ‘ஆமாம் இருக்கிறார். உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்?’ என்றேன். ‘சொல்கிறேன். நீ வேலய்யாவுக்கு மனைவியாக வருவதற்கு முன்னிருந்தே அவரை எனக்குத் தெரியும்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு, பிறகு தம் தங்கையைப் பார்த்து, ‘தெரியுதா’டி உனக்கு நினைவு வருகிறதா’டி’ என்று கேட்டார். ‘யார்? நம் சந்திர அண்ணாவா!’ என்று பச்சைமலையின் மனைவி உடனே அக்காவைக் கேட்டார். ஆமாம் என்றார் அந்த அக்கா.

‘அவர்தான் அப்போதே எங்கோ போய் விட்டாரே அவரைப் பற்றி அப்புறம் ஒன்றுமே தெரியாதே’ என்றார் தங்கை. எனக்குத் திகைப்பு மிகுதியாயிற்று. ‘அவர் எங்கோ போய்விட்ட செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும் அம்மா?’ என்று கேட்டேன். ‘நேற்றுத் திருமணமாகி வந்த உங்களுக்கு அவர் போய்விட்டது எப்படித் தெரியும்?’ என்று அக்கா என்னையே திருப்பிக் கேட்டார்.”

இந்த அளவிற்கு மனைவி சொல்லியவுடன், என் கலக்கம் தீர்ந்து உடனே இமாவதியின் நினைவு வந்துவிட்டது. “அடடா!” என்றேன்.

“ஓ ஓ! உங்களுக்கு இப்போதுதான் யார் என்று தெரிந்ததா?” என்றாள் மனைவி.

“ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இமாவதி என்று ஒரு பெண். அவளாகத்தான் இருக்க வேண்டும்” என்றேன்.

“பெண்ணா? எனக்கு மேல் வயதில் பெரியவர். நான்கு பிள்ளைகளுக்குத் தாய்.”

“இருக்கலாம் அப்போது பெண்தானே? நானும் சந்திரனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் ஆகாத பெண். சரி சொல்லிமுடி. அப்புறம் தான் விரிவாகச் சொல்வேன்.”

“அப்புறம் என்ன? உனக்கு எப்படித் தெரியும் என்று அவர் கேட்க, நான் கேட்க, வேடிக்கையாக இருந்தது. அவர் முன்னமே ஒருமுறை ஓடிப்போய் வந்தவர் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பிறகு நான் எல்லாம் சொன்னேன். அவருக்குத் திருமணம் ஆனது. மனைவியோடு அன்பாக வாழாதது. அந்த அம்மா கிணற்றில் விழுந்து செத்தது. பிறகு அவர் ஓடிப்போனது எல்லாவற்றையும் நான் சொன்னேன். வியப்போடு கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவருக்காக மிகவும் வருத்தப்பட்டார். அழாத குறையாக அந்த அம்மாவின் முகம் வாடிப்போய்விட்டது” என்றாள்.

இவ்வளவு செய்திகளையும் இமாவதிக்குச் சொல்லி இருக்கத் தேவையில்லையே என எண்ணினேன். “இதை எல்லாம் ஏன் சொன்னாய்? அந்த அம்மா சந்திரனைப் பற்றித் தவறாக நினைப்பாரே” என்றேன்.

“அதுதானே இல்லை! இவ்வளவு சொன்ன பிறகும் அந்த அம்மா சந்திரனுக்காக வருத்தப்படுகிறார். இரக்கத்தோடு பேசுகிறார். தமக்குத் தெரிந்தவரையில் சந்திரன் மிக நல்ல குணமுள்ளவர் என்கிறார். அவரைப்போல் நல்ல மனம் உள்ளவர்களைப் பார்ப்பது அருமை என்கிறார். சந்திரனைப் பற்றி நீங்களும் அவ்வளவு நன்றாகச் சொன்னதே இல்லை” என்றாள்.

என் உள்ளம் குழைந்தது. “ஆமாம். அவ்வளவு நல்லவனாக இருந்தவன்தான். அந்தக் காலத்தில் அவன் மேல் ஒரு குறையும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நல்லவன்தான் பிறகு இப்படி மாறிக் கெட்டு விட்டான். அதுதான் எனக்கு வருத்தம்” என்றேன்.

“உங்களைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று அந்த அம்மா விரும்புகிறார். என்னோடு உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார். வீட்டில் இருக்கமாட்டார் என்று சொன்னதால் நின்றுவிட்டார். நாளை மறுநாள் அவர்களுடைய ஊருக்கே திரும்பிப் போகிறபடியால் நீங்கள் நாளைக்கே போய்ப் பார்த்துவிடுங்கள். நீங்கள் போகாவிட்டால் அந்த அம்மா தவறாமல் இங்கே வந்துவிடுவார்” என்றாள்.

“அப்படியானால், பச்சைமலையின் மனைவியின் பெயர் என்ன? திருமகளா?” என்றேன்.

“ஆமாம். உங்களுக்கு இவ்வளவு நன்றாகத் தெரிந்திருந்தும் நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே. பெயரும் நினைவில் வைத்திருக்கிறீர்களே, கணவர் தம் மனைவியைக் கூப்பிடும் போது “திரு” என்று அழைப்பார்” என்றாள்.

“நான் சின்ன வயதில் பார்த்தது உண்டு. அப்போதிருந்தே பெயரும் தெரியும். ஆனால் இந்தக் குடும்பம் என்று எப்படித் தெரியும்?” என்றேன்.

பிறகு, சந்திரன் படித்துக் கொண்டிருந்தபோது இமாவதியின் குடும்பத்தோடு பழகியதும், இமாவதியின் திருமண அழைப்பைப் பார்த்தவுடன் கலங்கி அழுததும், உடனே சொல்லாமல் ஓடிப் போனதும், பிறகு தேடிப் போய் அவனை அழைத்து வந்ததும் எல்லாம் விரிவாக மனைவிக்கும் சொன்னேன்.

“அப்படியானால், அடிப்படையிலேயே அவருடைய மனத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது” என்றாள் மனைவி.

“மெய்தான். அவனுடைய மனமே இன்னொருவரை நம்பாத மனம். யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம்பிக்கை வைத்து மனத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது, ஒத்த உரிமையோடு யாரிடமாவது திறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும். நண்பனாகிய என்னிடமும் அப்படிப் பழகவில்லை. வந்த மனைவியிடமும் அவ்வாறு பழகவில்லை. அதனால் உலகமே அவனுக்கு இருண்ட குகையாக இருந்தது. வழி தெரியாமல் தடுமாறித் தடுமாறிக் கெட்டான். மருண்ட போதெல்லாம் வெருண்டு வெருண்டு ஓடினான்” என்றேன்.

காலையில் எழுந்தவுடன் இமாவதியைப் பற்றி மனைவி நினைவூட்டினாள். நானும் அதே நினைவாக இருந்தேன். கடமைகளை விரைந்து முடித்து, பச்சைமலையின் வீட்டுக்குச் சென்றேன். போய் நின்று கதவைத் தட்டியவுடன் “வாங்க! நானும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்” என்று சொல்லிக் கொண்டே இமாவதி வந்தார்.

“என்ன அய்யா! முன்னமே பழகிய பழக்கம் இருந்தும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே இருந்தீர்கள். இப்போது நான் தான் அந்நியனாக, புதியவனாக நிற்கிறேன்” என்றார் பச்சைமலை.

அவருடைய மனைவி, “வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

இமாவதியும் நானும் எங்கள் பழைய பேச்சை எடுத்தவுடன் ஒவ்வொருவராக நீங்கினார்கள். இமாவதியின் தங்கை திருமகள் மட்டும் ஒருமுறை வந்து குறுக்கிட்டு, “சந்திர அண்ணா வந்து வாழ்ந்து மறுபடியும் அப்படிப் போய்விட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது” என்றார்.

நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

“அவர் திரும்பி வந்த பிறகு எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா? நான் வந்து பார்த்து உண்மையைச் சொல்லியிருப்பேனே! எனக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். அவருக்கும் ஆறுதலாக இருந்திருக்குமே” என்றார் இமாவதி ஓரிடத்தில்.

மற்றொரு முறை பேச்சின் இடையே, “வந்த அவராவது பழைய அன்பை நினைத்து எட்டிப் பார்த்திருக்கக் கூடாதா?” என்றார்.

இன்னொரு முறை குறுக்கிட்டு, “நீங்களும் அவரைப் போலவே நடந்து கொண்டீர்கள். எங்கள் முகவரி நன்றாகத் தெரிந்திருந்தும், சென்னையிலேயே தொழில் இருந்தும் எங்களை அடியோடு மறந்து விட்டீர்கள். கல்லூரி நட்பு இவ்வளவுதான் போல் இருக்கிறது” என்றார்.

“சந்திரனுக்கு விருப்பமான பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கவில்லை போல் இருக்கிறது” என்றார் வேறொரு பேச்சின் இடையே.

“எங்கள் அம்மாவிடத்தில் சந்திரன் எவ்வளவு பணிவோடு மரியாதையோடு இருந்தார். சொந்தத் தாய் தந்தையாருக்கு வருத்தம் உண்டாகும்படியாக நடந்தார் என்றால் நம்ப முடியவில்லையே” என்றார் மற்றோர் இடத்தில்.

நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்த போது இமாவதி இப்படி இடையிடையே வியப்புடனும் திகைப்புடனும் பெருமூச்சுவிட்டுச் சில கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தார். எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு, “அய்யோ! கடவுள் ஏன் இப்படி அன்பானவர்களை – நல்லவர்களைக் – கெடுக்கிறார்?” என்று மிக மிக வருந்தினார். “எங்கேதான் போயிருப்பார்? தெரிந்தால் நானும் தேடுவேனே! நீங்கள் யாரும் தேடவே இல்லையா? அவ்வளவு தொலைவு நம்பிக்கை இழந்து விட்டதா குடும்பம்?” என்று துன்பப்பட்டார்.

சிறிது நேரம் தரையையே உற்றுப் பார்த்தபடி இருந்து ஒரு பெருமூச்சு விட்டார். அந்தப் பெருமூச்சு, சொல்லாத வேதனையை எல்லாம் சொல்வதுபோல் இருந்தது. வலமும் இடமும் முன்னும் பின்னும் மெல்லத் திரும்பிப் பார்த்தார்.

“என்னால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் அவருடைய மனமே கெட்டுப்போவதற்குக் காரணமாக இருந்ததோ என்று இன்னமும் என் நெஞ்சம் என்னைச் சுடுகிறது. என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?” என்றாள்.

அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது.

ஆனாலும் அந்த வினா இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு