(அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 27

எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார்.

“எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன்.

மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது? நெல் ஆலை வேகமாக முன்னேறிப் பணம் நிறையக் கிடைத்தது என்று எண்ணுவதா? அல்லது சாமியாரின் இரசவாத வித்தை பலித்து வீட்டில் உள்ள செம்பு இரும்பு எல்லாம் பொன்னாகி விட்டன என்று எண்ணுவதா? என்ன என்று தெரியாமல் வியப்போடு அவன் அதில் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன்.

“அன்புள்ள நண்பா! மன்னிக்க மன்னிக்க மன்னிக்க என்று பல முறை கேட்டுக் கொள்கிறேன். பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பிக் கொடுக்காமல் உன்னைப் பார்ப்பதும் இல்லை என்று நோன்பு கொண்டிருந்தேன். அதனால்தான் இதுவரையில் மறைவும் மவுனமும். பணம் சேர்த்துக் கவலை தீர்ந்துவிடவில்லை; மனம் திருந்திக் கவலை தீர்ந்து விட்டது. கடிதத்தில் விரிவு, அன்புள்ள, மாலன்” என்று எழுதியிருந்தான். அதில் கையெழுத்து இட்டுத் தபால்காரரிடம் கொடுத்தேன்.

அவர் கொடுத்த நூறு உரூபாயும் எண்ணி வாங்கும்போது என் மகள் மாதவி ஓடி வந்து, “அப்பா! அம்மா கூப்பிடுகிறாங்கோ” என்றாள். அவளுடைய பாவாடையும் சொக்காயும் பளபள என்று மின்னுவதையும், அவளுடைய சின்ன நெற்றியில் செந்நிறத் திலகம் பட்டொளி பரப்புவதையும், வாயின் புன்சிரிப்பு என் உள்ளத்தை கொள்ளைக் கொள்வதையும் உணர்ந்தபடியே, “இந்தா! கண்ணு! இதைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு” என்றேன். அவள் அதை எண்ணுவது போல் விரல்களால் புரட்டிக்கொண்டே நடந்தாள். அவளுடைய தலையின் சின்ன கூந்தல் அழகாகப் பின்னப்பட்டிருந்ததையும் தாழம்பூவும் மல்லிகையும் அதற்குத் தூய அழகு தந்து விளங்கியதையும் கண்டேன். “அம்மா! அம்மா! அப்பா ரொம்ப உரூபா கொடுத்தாங்கோ” என்று அவள் சொன்னது கேட்டது.

உடனே அங்கிருந்து என் மனைவி அந்த நோட்டுக்களுடன் விரைந்து வந்து பல்லெல்லாம் தெரிய என் எதிரே நின்று, “பணமே இல்லை, சம்பளம் வந்தால்தான் உண்டு என்று ஏமாற்றினீர்களே? இப்போது மட்டும் எந்தச் செடியிலிருந்து முளைத்தது?” என்றாள்.

மாலன் பணம் அனுப்பியதாகச் சொன்னேன். அயர்ந்து நின்றாள். “அப்படியானால் கற்பகத்துக்கு ஏதோ நல்ல காலம் வரப் போகிறது. வரட்டும். நல்ல பெண் நல்ல படியே வாழ’ணும்” என்று உளமார வாழ்த்தி நின்றாள்.

அன்று அவளை ஊருக்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால் மாதவிக்கு அணிவன எல்லாம் அணிவித்து, தானும் புதிய சேலை உடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இரண்டாம் குழந்தைக்குத் தாய் ஆகும் நிலையில் இருந்தபடியால், வாலாசாவுக்கு அனுப்பும்படியாகப் பெற்றோர் வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். அவர்களுடைய விருப்பப்படியே அன்று பகல் ரயிலில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து, கையில் கொடுத்தனுப்பப் பணம் இல்லாமல் திகைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் தபால்காரர் மணியார்டரோடு வந்து நின்றது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக மகிழ்ந்தேன். மனைவியோ அதில் கற்பகத்தின் நல்வாழ்வையும் கண்டு மகிழ்ந்தாள்.

அவள் மகிழ்ந்ததற்கு ஏற்பவே மாலன் மனம் திருந்திக் கடிதம் எழுதியிருந்தான். அவள் ஊருக்குப் போவதற்கு முன் அந்தக் கடிதம் வந்திருந்தால், அவளுடைய மகிழ்ச்சி பலமடங்கு மிகுதியாகியிருக்கும்.

“நெல் ஆலையை என்னால் தனியே நடத்தமுடியாது என்று தெரிந்து கொண்டேன். அந்த இலாரிக்கார நண்பன் முன்வந்து பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இப்போது கூட்டு முயற்சியாக நடைபெறுகிறது. இருந்தாலும் பொறுப்பு அவருடையதே. நான் சம்பளக்காரன் போல் இருந்து அவர் சொன்னபடியே உழைக்கிறேன்.

மாதம் நூற்றைம்பது உரூபாய் குடும்பச் செலவுக்கும் ஐம்பது ரூபாய் பழைய கடன் அடைப்புக்கும் என்று கொடுக்கிறார். அவர் கிழித்த கோட்டை விட்டு விலகாமல் நடக்கிறேன். அதனால் கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு நன்மையாகச் சில மாறுதல்களும் ஏற்பட்டுவிட்டன. மற்றொரு நெல் ஆலைக்காரரின் போட்டி வேகம் தணிந்துவிட்டது. இலாரிக்கார நண்பரோடு பகைத்துக் கொள்ள அவரால் முடியாது. ஆகவே வீம்புக்குச் செய்யும் போட்டியை விட்டுவிட்டார்.

நானும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் கவனம் செலுத்துகிறேன். மாமனாரும் கடைசியில் இரண்டாயிர உரூபாய் தருவதற்கு உடன்பட்டுச் சொல்லியனுப்பினார். நீ முதலில் எழுதிய கடிதத்தை நினைவில் வைத்துக்கொண்டு நான் வேண்டா என்று சொல்லிவிட்டேன். ஆனால் கற்பகத்தை இங்கே அழைத்து வருவதற்காகப் பெருங்காஞ்சிக்கு வரப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். ஊருக்கு வந்து நிலபுலங்களைப் பார்த்துக்கொண்டு அங்கேயே வாழுமாறு மாமனார் எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை.

உன்னுடைய அறிவுரையும் எனக்கு வேண்டும். நான் இன்னும் பெருங்காஞ்சிக்கு போகவில்லை கற்பகத்தின் பிடிவாதமான வெறுப்புக்காக அஞ்சி நிற்கிறேன். உன்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போக எண்ணியிருக்கிறேன். நீதான் என் திருமணத்திற்கும் தொடக்கத்தில் உதவியாகக் கடிதம் எழுதியவன். எங்கள் இல்வாழ்க்கை இனிமேல்தான் செம்மையாகத் தொடங்க இருக்கிறது. இதற்கும் நீ முன்வந்து உதவி செய்யவேண்டுகிறேன். நீ வந்து சொன்னால் தான், அவள் பழைய வருத்தத்தை எல்லாம் மறந்து என்னை வரவேற்பாள். நீ மறுக்காமல் வரவேண்டும். அடுத்த வாரத்தில் வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ அங்கே வந்து உன்னை அழைத்து கொண்டு பெருங்காஞ்சிக்குப் போக எண்ணியிருக்கிறேன். வருவேன். மற்றவை நேரில். உன் அன்பன் மாலன்.”

இந்தக் கடிதம் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாக்கியது. அதனால் அன்று பிற்பகல் நான் அலுவலகத்தில் வேலையும் அவ்வளவாகச் செய்யவில்லை. பெரிய விருந்து உண்டு மயங்கியவன்போல் பொழுதைப் போக்கிவிட்டு மணி நாலரை ஆனதும் அலுவலகத்தை விட்டு புறப்பட்டேன். முன் வாயிலருகே வந்தபோது, “அய்யா சாமி” என்பதுபோல் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலே வந்தேன். “வேலு” என்பது போலவே இரண்டு முறை கேட்டது.

யாரோ இந்தப் பெயருடையவன் ஒருவனை அழைக்கும் குரல், இதற்காக நம்மைப்போன்ற ஓர் அதிகாரி திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நகர்ந்தேன். மறுபடியும் அதே குரல் இரண்டு முறைகேட்கவே சிறிது திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டே இருந்தேன். “வேலய்யா! வேலு!” என்றதும் நின்றேன். மறுபடியும் நடந்தேன். “அய்யோ மறந்து விட்டாயா? கடவுளே மறந்து விட்டாயா? வேலு!” என்றதும் திகைத்து நின்றேன். சிறிது தொலைவில் ஒருவன் தொப்பென்று தரையில் விழுந்தது கண்டேன்.

எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த ஒருவர், “உங்களைப் பார்த்துத்தான் கூப்பிட்டுக் கொண்டே வந்து கால் தடுக்கி விழுந்துவிட்டார். யாரோ, பாவம்” என்றார். உற்றுப் பார்த்துக்கொண்டே விழுந்தவனை நோக்கி நடந்தேன். குப்புறவிழுந்திருக்கவே யார் என்று தெரியவில்லை. அப்போது அலுவலகத்து வேலையாள் ஒருவன் அந்தப் பக்கம் வந்தான். அவனை நோக்கி, “யார் பார்” என்றேன். அவன் குனிந்து பார்த்து, “யாரோ நோயாளி” என்றான். அதற்குள் பத்துப் பதினைந்து பேர் அங்கே கூடிவிட்டார்கள்.

விழுந்தவனுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு புத்தகம் சிறிது வெளியே வந்திருந்தது. அதை எடுத்துப் பார்க்குமாறு வேலையாளிடம் சொன்னேன். அவன் தயங்கித் தயங்கி எடுத்தான். “திருவருட்பா. சந்திரன் என்று பெயர் எழுதியிருக்கிறான்” என்று அவன் சொன்னவுடனே, “ஆ” என்று திகைத்து அலறினேன். “சந்திரா” என்று குனிந்து அழைத்தேன். குரல் இல்லை.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு