(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்  11 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 3 தொடர்ச்சி

“என் குடும்பத்திலே நீ செய்து வைத்த காரியத் துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா ! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!”

“நான் வைசிய குலம். ………..”
“நான் உப்பிரசாதி . . . . . . . . . . . .”

“உப்பிரசாதியில் பெண் கொள்ளும் வழக்கம், வைசிய குலத்தில் கிடையாதே. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடும்பம். எங்கள் குடும்பத்திலே சாதியைவிட்டுச் சாதியில் கலியாணம் செய்வதில்லையே.”

எங்கள் குலத்திலும் குடும்பத்திலும் காமப் பித்தம் பிடித்தவர்களுக்குப் பலியாவதற்காகப் பெண்களைப் பெற்றெடுக்கிறார்களா? என்ன திமிர் உனக்கு? உன்னிடம் அதிகம் பேசப்போவதில்லை. ஒரு வாரத்துக்குள், முடிவு சொல்லியாக வேண்டும் ; இல்லையானால், உன்னையும் இந்தக் கள்ளியையும் கொன்றுவிட்டு, நானும் சாக வேண்டியது தான். சொக்கன் சொன்னால் சொன்னதுதான்.”

சொக்கன் குமரியை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான் புலி போல. செட்டியார் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கதறினார்.

இச்சம்பவம், சாடை மாடையாகக் கூலியாட்களுக்குத் தெரிந்துவிட்டது. கோபத்தால் சிவந்த கண்களுடன் சொக்கன் இருந்தது கண்டு, சகலருக்கும் பயம் பிடித்துக்கொண்டது. ஒரு வார்த்தை கேலி பேசினாலும் போதும், சொக்கன் கொன்றுவிடுவான் என்று அஞ்சினர். மீனா வேலைக்கே வரவில்லை, குமரிக்கோ காய்ச்சல். செட்டியாரோ, சாவு வரவில்லையே என்று தவித்தபடி இருந்தார். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான் சொக்கன்.
ஐந்தாம் நாள் அதிகாலையில் சொக்கன் திடுக்கிட்டுப் போனான், குமரியைக் காணாமல் ; எங்கெங்கோ தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை; செட்டியாரிடம் சென்றான், “குமரி எங்கே?” என்று கேட்டான். “தெரியாதே” என்று குளறினார்.

“கற்பழித்ததுமன்றிக் கொலையும் செய்து விட்டாயா? குமரியை எந்தக் குளத்திலே தள்ளிவிட்டாய்? சொல். உன்னை விட மாட்டேன். பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்” என்று ஆத்திரமாகப் பேசிச் செட்டியாரின் கழுத்தை நெரிக்கலானான் சொக்கன். செட்டியார் ”சிவனாணை யாக எனக்கொன்றும் தெரியாதே. நான் இன்று தான், அவளைக் கலியாணம் செய்து கொள்வது, சாதி பேதத்தைப்பற்றிக் கவலை இல்லை என்று தீர்மானித்தேன்’ என்று கூறிக் கதறினார். செட்டியாரை விட்டு விட்டுச், சொக்கன் ஓடினான் வெளியே, உலகிலே எந்தக் கோடி யிலிருந்தாலும் குமரியைக் கண்டுபிடித்துவிடுவது என்ற உறுதியுடன்.

சொக்கனுடைய சுபாவம் நன்கு தெரியும் குமரிக்கு. ஆகவே, எங்காவது ஓடி விடவேண்டும், அப்போதுதான் செட்டியார் தப்புவார் என்று எண்ணிய குமரி, இரவு நடுநிசிக்குப் பிறகு, சொக்கனுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். செட்டியார் தன்னைக் கலியாணம் செய்து கொள்வதென்பது முடியாத காரியம் என்பது அவள் எண்ணம். பொழுது விடிவதற்குள், இரண்டோர் கிராமங்களைத் தாண்டி விட்டாள். பாதையிலே நடந்தால் யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று பயந்து, வயலோரம், ஒற்றை அடிப் பாதை, கொடிவழி இவையாகப் பார்த்து நடந்து, மறுதினம் இரவு ஒரு பெரிய கிராமம் போய்ச் சேர்ந்தாள். பசியால் களைத்துக் கீழே வீழ்ந்தாள். அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்ட கிராமத்தானொருவன், அவளுக்குக் கஞ்சி கொடுத்து, ‘யார், என்ன’ என்று விசாரித்தான். “ஓடிவந்து விட்டேன் – குடும்பச் சண்டை ” என்றாள் குமரி “தாலி இல்லையே’ என்று அவன் கேட்டான். “கட்ட வில்லை ” என்று குமரி கூறிவிட்டு அழுதாள்.

” அழாதே பெண்ணே, இந்தப் புத்தி முதலிலேயே இருக்க வேண்டும். போனது போகட்டும். என் வீட்டுக்கு வா; அங்கே ஊருக்கு உபகாரம் செய்யும் உத்தமர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் நியாயம் கேட்போம் வா” என்று ஆறுதல் கூறிக் குமரியை அவன் அழைத்துச் சென்றான். குமரிக்கு அவன் பேச்சும் ஒரு விதமான லேகியமோ, என்று பயமாகத்தான் இருந்தது. அவன் குறிப்பாக அதை உணர்ந்து “நான் உன் தகப்பன் போல, பயப்படாமல் வா” என்று தைரியம் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவன் வீட்டுத் திண்ணையிலும், மேடையிலும் கிராமத்து மக்கள் ஐம்பது அறுபது பேருக்குக் கூடியிருந்தார்கள். அவர்களிடம் அன்புடன் பழனி பேசிக் கொண்டிருந்தான்.

“ஐயாவுக்குத்தானே சொல்வது. உலகத்திலே நடக்கிற அநீதிகளை எல்லாம் சொல்லிவர்ரிங்களே. இதோ இந்தக் கொழந்தை சொல்ற அன்யாயத்தைக் கேளுங்க . கேட்டு விட்டு ஒரு வழி சொல்லுங்க” என்று கிராமத்தான் பழனியிடம் கூறினான். பலபேர் எதிரிலே தன் கதையைக் கூற, அவள் கூச்சமடைவது தெரிந்த பழனி, கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லிவிட்டு. குமரியின் சேதியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு திகைப்படைந்தான்.

“அம்மா, நீ எனக்குச் சிற்றன்னை” என்று பழனி சொல்லக்கேட்டு, மெய்சிலிர்த்தது குமரிக்கு . “வேடிக்கை அல்ல, அவர் என் தகப்பனார்தான்” என்றான் பழனி . “நீங்கதானே யாரோ பெண்ணுடன் . .. . .. .. .. . .. . . .” என்று கேட்டாள் குமரி “ஓடிவிட்டேன். என் மனைவி சேரிப் புறம் போயிருக்கிறாள், வந்து விடுவாள். நீ கவலைப் படாதே. நான் உன் பொருட்டு என் தகப்பனாரிடம் சென்று வாதாடத் தீர்மானித்துவிட்டேன். ‘காதல்’ என்பது மகா பாதகம், சாதிக் கட்டுப்பாடே பெரிது என்று சொல்லிவந்தவர், தனக்கே ஒரு காலத்தில் காதல்’ ஏற்படக்கூடும் என்று எண்ணியிருக்க மாட்டார். இதமாகச் சொன்னால், எல்லாம் நன்மையாகவே முடியும். நீ சோகிக்காதே, தைரியமாக இரு’ என்று கூறினான்.

மறுதினம், பழனி தன் மனைவி நாகவல்லியுடன் குமரியையும், கிராமப் பெரியவர்கள் பத்துப்பேரையும் அழைத்துக்கொண்டு, மறையூர் சென்று, தந்தையைச் சந்தித்தான். வெட்கம், துக்கம், பயம் என்னும் பலவித உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட குழந்தைவேல் செட்டியாரால் பழனியிடம் பேசவும் முடியவில்லை.

“பழனி! எனக்கு, என்ன சொல்வதென்றே புரிய வில்லை. உன்னை நான் கொடுமைப் படுத்தினேன், குமரியைக் கெடுத்தேன், நான் எவ்வளவு தண்டனைக்கும் தயாராக வேண்டியவன். அவ்வளவுதான் பேச முடியும் என்னால்” என்றார். பழனி தகப்பனாரைச் சமாதானப் படுத்திவிட்டு, சொக்கனைக் கண்டுபிடித்து வருமாறு சிலரை அனுப்பிவிட்டு. தந்தையின் கலியாணத்துக்கான ஏற்பாடுகளைத் துவக்கினான். சாதியைப்பற்றிய பேச்சையே, செட்டியார் எடுக்கவில்லை. குமரிக்கு, ஏதோ ஒரு கனவு உலகில் இருப்பது போலத் தோன்றிற்று.

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்