(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 29 தொடர்ச்சி)


குறிஞ்சி மலர் 12

எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோட
முன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்
பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய்
என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!”


உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற ஐயமும், இந்த அசதியை இரண்டு மடங்காக்கியிருந்தன. ‘அவன் ஊரில் இல்லை’ என்று தம்பி அச்சகத்துக்குப் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்லிய செய்தி அசதியோடு வேதனையையும் கலந்தது.


‘அரவிந்தன் எங்கே போயிருக்கலாம்? எங்கே போனால் என்ன? போகும் போது என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றாமலா போய்விட்டது? அப்படி ஒரு வெறுப்பும் அரவிந்தனுடைய மனத்தில் உண்டாகுமா? ஐயோ! அன்றைக்குக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே அவசரப்பட்டு ஏன் அப்படி நடந்து கொண்டேன்? யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் அல்லவா ஆகிவிட்டது என்று நோயின் தள்ளாமையோடு அன்பின் ஏக்கங்களையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பூரணியின் ஏழைச் சிறுமனம். பொருள்களின் இல்லாமையாலும் வசதிகளின் குறைவாலும், ஏழையாவதற்கு அவளுடைய உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒருபோதும் தயாராயில்லை.


அச்சகத்து வேலை நேரம் முடிந்து பூட்டிய பின் மீனாட்சி சுந்தரம் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக வந்திருந்தார். அரவிந்தனைப் பற்றி அவள் விசாரிப்பதற்கு முன் அவரே முந்திக் கொண்டு சொல்லிவிட்டார். “புதிய அச்சு இயந்திரங்கள் சிலவற்றுக்கு ‘ஆர்டர்‘ செய்திருந்தேன் அம்மா. அந்த இயந்திரங்களின் பகுதிகள் சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் ‘கம்பெனி‘க்காரர்கள் எழுதியிருந்தார்கள். அவற்றைச் சரிபார்த்துப் பேசி முடித்து வாங்கிக் கொண்டு வருவதற்காக அரவிந்தனை அனுப்பியிருக்கிறேன். அவன் கூட ஊருக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் மாலை உன்னைக் கோயிலில் சந்தித்ததாகச் சொன்னானே? அப்போது ஊருக்குப் போவது பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் என்றல்லவா நினைத்தேன்?” என்று கூறினார் மீனாட்சிசுந்தரம்.

பூரணி கேட்டாள், “என்றைக்குத் திரும்பி வருகிறார் அவர்.”

“வருகிற நாள்தான்! அநேகமாக அவன் போன வேலை முடிந்திருக்கும். நாளை அல்லது நாளன்றைக்கு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மேல் அவனும் தங்கமாட்டான். இங்கே அச்சகத்தில் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. அவன் இல்லாமல் ஒன்றுமே ஓடவில்லை” என்று மறுமொழி கூறினார் அவர். ‘அரவிந்தன் அலுவல் நிமித்தமாகத்தான் வெளியூர் சென்றிருக்கிறான். தன்மேல் ஏற்பட்ட கோபமோ, ஏமாற்றமோ அவனுடைய பயணத்துக்குக் காரணமன்று, என்று உணர்ந்தபோது பூரணியின் நெஞ்சத்தில் நம்பிக்கை உற்றுக்கண் திறந்தது.

“இப்படி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருக்கிறாயே அம்மா! உன்னைக் கவனித்துக் கொள்ள இங்கே யார் இருக்கிறார்கள்? நான் வேண்டுமானால் ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பேசி அனுப்பி வைக்கட்டுமா? பணமோ, வேறு வகை உதவிகளோ எது வேண்டுமானாலும் என்னிடம் கூச்சமில்லாமல் கேளம்மா. நான் வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன்” என்று பாசத்தோடு வேண்டிக்கொண்டார் மீனாட்சிசுந்தரம்.

“அதெல்லாம் இப்போது ஒன்றும் வேண்டாம். அவசியமானால் சொல்கிறேன். ‘அவர்’ ஊரிலிருந்து வந்ததும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அவசரம் ஒன்றுமில்லை. வந்தால் நினைவூட்டுங்கள் போதும்” என்று கூறி அவரை அனுப்பினாள் பூரணி. அரவிந்தனை வரச்சொல்லித் தானே வலுவில் வேண்டிக்கொள்ளும் போது பூரணிக்கு நாணமாகத்தான் இருந்தது. ஆனால் அன்பின் ஆற்றாமையிலும் ஏக்கத்திலும் அந்த நாணம் கரைந்தே போய்விட்டது. பச்சைக் கற்பூரம் வைத்திருந்த இடத்தில் அந்த மணம் நிலவுவது போல அரவிந்தன் அருகில் இல்லாவிட்டாலும் அவனைப் பற்றிய நினைவுகளின் மணம் அவள் நெஞ்சில் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது. அன்று இரவு அதற்கு முன் கழித்த நாட்களை விட அவள் சற்று நிம்மதியாகத் தூங்கினாள். தளர்ச்சியும் ஓரளவு குறைந்து நலம் பெற்றிருந்தாள்.

மறுநாள் காலை எழுந்திருந்தபோது சோர்வு குறைந்து உடல் தெம்பாக இருப்பதுபோல் தோன்றியது. அன்று காலை மங்களேசுவரி அம்மாளும், செல்லமும் அவளைப் பார்க்க வந்தபோது காரியதரிசி அம்மாளும் உடன் வந்திருந்தாள். காரியதரிசி அம்மாள் தன்னைப் பற்றிய தவறான கருத்துகளை மறந்து, பார்த்து அனுதாபம் விசாரிக்க வருகிற அளவுக்கு மனத்தை மாற்றிய பெருமை மங்களேசுவரி அம்மாளுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று பூரணி நினைத்தாள்.

“நானும் துணைத் தலைவியம்மாளும் அன்றைக்கு உன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே பார்த்தோம். அம்மனுக்குச் சாத்திய பூ கொஞ்சம் இருந்தது. உன்னைக் கூப்பிட்டுக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமென்று உன் பக்கம் திரும்பினேன். நீ என்னவோ என்னைப் பார்த்ததும், பேயையோ, பூதத்தையோ பார்த்துவிட்டவள் போல் பதறிக் கொண்டு எழுந்து போய்விட்டாய்! நான் என்னம்மா கெடுதல் செய்தேன் உனக்கு? ஏதோ நான் வகிக்கிற பதவிக்கு அப்படி ஒரு கடிதம் வரும்போது கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய முறை உண்டு. அதற்காக விசாரித்தேன்” என்று காரியதரிசியம்மாள் சொல்லியபோது பூரணியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. தன்னுடைய மனக்குழப்பங்களால் தானே ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் பற்றித் தப்பாகக் கணக்குப் போட்டுக் கொண்டு மயங்கி வந்திருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள். காரியதரிசி அம்மாளின் மனமாற்றத்தை முழுவதும் இயல்பாகவே விளைந்ததென்று பூரணியால் நம்ப முடியாவிட்டாலும் மங்களேசுவரி அம்மாளின் முயற்சியால் தான் விளைந்திருக்க வேண்டுமென்று அவளால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வந்தவர்கள் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து பார்த்துவிட்டு “நீ நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்” என்று கூறிச் சென்றார். அவரை அனுப்பிவிட்டுப் பூரணி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே காலையில் வந்த செய்தித்தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா ஓர் ஐந்து உரூபாய் வேண்டும்.”

முகத்தை மறைத்தாற்போல் தூக்கிப் பிடித்து வாசித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே தணித்துக் கொண்டு எதிரே பார்த்தாள் பூரணி. தம்பி திருநாவுக்கரசு தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.

“இப்போது எதற்கடா பணம்? போன வாரம் தானே சம்பளம் கட்டினாய்?”

“சம்பளத்துக்காக இல்லையக்கா. பரீட்சை நெருங்குகிறது! கொஞ்சம் நோட்டுப் புத்தகங்களும் ஒரு புதுப் பேனாவும் வாங்க வேண்டும். இப்போதிருக்கிற பேனா எழுதும்போது மை கசிகிறது…”

பூரணி தம்பியின் முகத்தை நன்றாகப் பார்த்தாள். எதையோ மறைத்து எதற்கோ தயங்கித் தயங்கிப் பேசினான் திருநாவுக்கரசு.

“ஏண்டா சட்டை இவ்வளவு அழுக்காக இருக்கிறது? குளித்தாயோ இல்லையோ? தலைவாரிக் கொள்ளாமல் இப்படிக் காடு மாதிரி ஆக்கிக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போக வேண்டுமா? என்ன தான் படிப்பு அதிகமாக இருக்கட்டுமே? அதற்காக இப்படியா இருப்பாய்? காலையில் ஒன்பது மணிக்கு முன்னாலேயே பறந்து கொண்டு ஓடுகிறாய். மாலையில் நெடுநேரம் கழித்துத் திரும்புகிறாய். நீ எங்கே போகிறாய், எப்போது திரும்புகிறாய் ஒன்றுமே தெரியவில்லை. வீட்டில் புத்தகத்தையே தொடுவதில்லை. எங்கேதான் படிக்கிறாயோ, என்னதான் செய்கிறாயோ?”

தம்பி தலையைக் குனிந்தான்! கை சட்டைப் பித்தானில் விளையாடியது. கால் தரையைத் தேய்த்தது.

அலமாரியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு போ. சாயங்காலம் புதுப் பேனாவையும், நோட்டுப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க வேண்டும். வரவர உன் போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லை உனக்கு” என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்