(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

20 தொடர்ச்சி

 ‘உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதுதான். உடல்நிலைப் பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக் கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால ஓய்வு உனக்கு இருக்கிறது. அது போதுமென்று நினைக்கிறேன். நீ இவற்றில் கலந்து கொண்டால் உனக்கு மட்டுமல்லாமல் நமது கழகத்திற்கும் பெருமை கிடைக்கிறது. ‘பாசுபோர்ட்டு‘ (வெளிநாட்டுப் பயண அனுமதி), ‘விசா‘ முதலியவற்றுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய தாள்களும் இவற்றோடு அனுப்பியுள்ளேன். அவற்றை நிறைவு செய்து கையொப்பமிட்டு அங்கேயே சிறிது அளவில் உனது புகைப்படமும் எடுத்து உடன் அனுப்பினால் மற்ற ஏற்பாடுகளை நாங்கள் கவனித்துக் கொள்வோம். இந்தச் சந்தர்ப்பங்களை நீ இழக்கக்கூடாது. நன்றாகச் சிந்தித்து முடிவு செய். இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு மீனாட்சி அச்சகத்திலிருந்து உனது கோடைக்கானல் முகவரியைப் பெற்றுக் கொண்டேன்’ என்று காரியதரிசி அம்மாள் எழுதி இருந்தாள்.

இரண்டு மூன்று முறை அந்தக் கடிதங்களைத் திரும்பத் திரும்பப் படித்தாள் பூரணி. சிந்தனையில் ஆழ்ந்தாள். கடுமையான பின்னக்கணக்கில் ஒழுங்காகவும் முழு எண்ணாகவும் விடை கிடைக்காதது போல் அவள் சிந்தனை ஒரு முழுமையான முடிவுக்கு வராமல் சுழன்றது.

‘வாய்ப்பு வரும் போது உலகத்து வீதிகளில் தமிழ் மணம் பரப்பி முழக்கமிட உங்கள் குரல் தயாராயிருக்க வேண்டும்‘ என்று எப்போதோ அரவிந்தன் சொல்லியிருந்ததையும், அப்போது தான் அவனுக்கு மறுமொழி கூறியதையும் நினைத்தாள். இதை நினைத்த போது அவளது மாதுளை மொட்டுப் போன்ற இதழ்களில் நளின மென்னகை மெல்லெனத் தோன்றி மறைந்தது. அந்தச் சமயத்தில்தான் வசந்தா வந்தாள்.

“என்ன அக்கா, நீங்களாகவே சிரித்துக் கொள்கிறீர்கள்! எங்கே கொஞ்சம் முழங்கையை நீட்டுங்கள். அளவெடுத்துக் கொள்கிறேன். ‘சீசனு‘க்காகப் புதிது புதிதாய் வளையல் கடைகள் வந்திருக்கின்றன. நான் போய் வளை அடுக்கிக் கொண்டு வரப் போகிறேன். உங்கள் கைக்கும் அளவு கொடுத்தீர்களானால் வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்” என்று அளப்பதற்காகப் பட்டு நூலை நீட்டிக் கொண்டே பூரணிக்கு அருகில் வந்து அமர்ந்தாள் வசந்தா. பூரணி அவள் ஆர்வத்தை மறுக்கக்கூடாது என்பதற்காகத் தன் முழங்கையை நீட்டினாள். மஞ்சள் கொன்றை நிறம் மின்னும் அந்த வனப்பான முன்கையும் வெண்ணெயைத் தீண்டினாற் போல் மென்மையான வெண்ணிற உள்ளங்கையில் சிவப்பு இரத்தினம் பதித்தாற்போல மருதோன்றிச் சிவப்பும் வசந்தாவுக்கே பொறாமையூட்டுவது போல் அழகு பொலிந்தன. ஒவ்வொரு விரல் நுனியும் ஒரு பவழ மணியாகி விட்டாற்போல் மருதோன்றி நிறம் பற்றியிருந்தது பூரணிக்கு.

“உங்கள் கையில் நன்றாக நிறம் பற்றியிருக்கிறதே அக்கா! இதோ என் கையைப் பாருங்கள்! நிறமே பற்றவில்லை” என்றாள் வசந்தா. பூரணிக்கு அதைக் கேட்டுச் சிரிப்பு வந்து விட்டது. “சில தேகவாகு அப்படி! மருதாணி பற்றாது” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.

வசந்தா வளைக்கடைக்குப் புறப்பட்டுப் போனபின் பூரணி மீண்டும் தன் நினைவுகளால் சூழப் பெற்றாள். கண்களை மெல்ல மூடிக்கொண்டு அரவிந்தனுடைய முகத்தை மனத்தில் நினைத்தாள். கண் முன் நிற்கிற உருவத்தைத்தான் திறந்த கண்களால் பார்க்க முடியும். கண் முன் நிற்காத உருவத்தைக் கண்களை மூடிக் கொண்டால்தான் காணமுடியும். கண்களை மூடிக்கொண்டு கண்முன் இல்லாத உருவத்தை மானசீகமாகக் காண முயல்வதற்குத்தான் தியான ஆற்றல் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தத் தியான ஆற்றல் எல்லாருக்கும் அமைவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு அபூர்வமாகக் கிடைக்கிற ஆற்றல் அது. பூரணிக்கு இந்த ஆற்றல் அதிகம். இன்று கூடக் கண்களை மூடிக்கொண்டு அம்மாவின் முகத்தை நினைத்தால் நினைத்தவுடன் அச்சுப்போல் அப்படியே அம்மாவின் முகம் உருவெளியில் தோன்றும். அப்பாவின் முகமும் அப்படித்தான். வேறுபட்ட கருத்துள்ள பலப்பல நூல்களைப் படித்து அவ்வளவையும் நினைவு வைத்துக் கொண்டு சிந்திக்கிற அறிவாளி போல் முகங்களை நினைவு வைத்துக் கொண்டு மனத்திற்குள்ளேயே அவற்றைப் புரட்டிப் பார்க்கும் அற்புத சக்தியுள்ளவள் பூரணி.

ஒளியரும்பி மலர்ந்த கண்களும், நகையரும்பிச் சிரிக்கும் இதழ்களும், கூர்மையரும்பி நீண்ட எழில் நாசியுமாக அரவிந்தனின் அழகு முகம் அவளுடைய மூடிய கண்களுக்கு முன் உருவொளியில் தோன்றியது. பாலும் வெண்மையும் போல் சிரிப்பிலிருந்து தன்னையும், தன்னிலிருந்து சிரிப்பையும் பிரித்துக் கொள்ள முடியாத அரவிந்தனின் இதழில் இளநகை ஊறி வழிகிறது. சிவப்பு மொட்டு மலர்வது போல் அந்த வாய் மலர்கிறது.

“பூரணி! நீ உலகத்து வீதிகளில் உன்னுடைய புகழையும், நீ பிறந்த தமிழ்நாட்டின் புகழையும், பரப்புவதற்குப் பிறந்தவள்” என்று அவளை நோக்கிக் கூறுகிறான் அவன். ‘எனக்கு அவ்வளவு சக்தி உண்டா?’ என்று மலைக்கிறாள் அவள். “உன்னைப் பற்றி நீ நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் உன் ஆற்றல் பெரிதுதான். பூவின் வாசனை பூவுக்குத் தெரியாது” என்கிறான் அவன்.

நெஞ்சில் வந்து தைக்கும் அழகான புன்சிரிப்பு மட்டும்தான் அரவிந்தனுக்குச் சொந்தமென்பதில்லை. அழகான வாக்கியங்களில் அழகாக உரையாடும் திறமையும் அவனுக்கே சொந்தம் போலும்.

“அரவிந்தன்! நீங்கள் தீர்க்கதிரிசிதான். என்னைப் பற்றி எனக்கு எவ்வளவு அதிகமாகத் தெரியுமோ அதை விட அதிகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. பூவின் வாசனை பூவுக்குத் தெரியாதிருக்கிறது. நான் பூவா? அப்படியானால் நீங்கள் யார்? அப்பப்பா! எத்தனை பெரிய குறும்புக்காரராக இருக்கிறீர்கள் நீங்கள்? சில வார்த்தைகளில், சிறிய வார்த்தைகளில் இவ்வளவு அர்த்தம் வைத்துப் பேசுகிற வித்தையை நீங்கள் எங்கே கற்றீர்கள்? நீங்கள் கவியல்லவா? எதையுமே சாதாரணக் கண்களால் உங்களுக்குப் பார்க்கத் தெரியாது. சாதாரணமாகப் பேசத் தெரியாது! சாதாரணமாக நினைக்கவும் தெரியாது!”

பூரணி கண்களைத் திறந்து பார்த்தாள். எதிர்ச் சுவரில் சுவரையே அடைத்துக் கொண்டு பெரிய நிலைக் கண்ணாடி. அதில் தெரிவது அவளுடைய அழகுதானா? எண்ணெய் நீராடியிருந்தாள். கூந்தலை விரித்து நுனி முடிச்சுப் போட்டிருந்தாள். கருமேகக் காடு விரிந்தாற் போல் கூந்தல் தரையினைத் தொடுகிறது. அந்தப் பெண் வசந்தா விளையாட்டாக ஒரு சிகப்பு ரோஜாவைப் பறித்து வலது பக்கத்துக் காதுக்கு மேல் விரித்த குழலில் சொருகி விட்டிருந்தாள். அந்தச் சிவப்புப் பூ கருங்கூந்தலில் எடுப்பாகத் தெரிந்தது. பூரணி இனம் புரியாததொரு பூரிப்பை உணர்ந்தாள். தான் இத்தனை பெரியவளாக இவ்வளவு அழகுகளை நிறைத்துக் கொண்டு எப்போது எப்படி வளர்ந்தோம் என்று அவளுக்கே மலைப்பாக இருந்தது. தனக்குத் தெரியாமலே தான் வளர்ந்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. மனம் வளரவும் அறிவு பெருகவும் உழைத்துப் படித்ததும் கவலைப்பட்டதும் அவளுக்கு நினைவிருந்தன. உடம்பைப் பற்றி அவள் நினைத்ததில்லை; கவலைப்பட்டதில்லை. ஆனால் மனத்தையும் அறிவையும் போல அதுவும் வளர்ந்து செழுமையடைந்திருக்கிறதே! அவள் படாத கவலையைத் தானே எடுத்துக் கொண்டு வளர்ந்தது போல் வளர்ந்து வளமாகியிருக்கிறதே. செழிக்க வேண்டுமென்ற நினைப்பில்லா விட்டாலும் ஆற்றங்கரை மரம் தானாகச் செழிப்பது போல் தன் உடல் செழித்திருப்பதை உணர்ந்தாள் அவள்.

சமீபகாலத்தில், அப்பாவின் மறைவுக்குப் பின் இத்தனை பெரிய கண்ணாடியில் இத்தனைப் புதிய நினைவுகளோடு இவ்வளவு தனிமையில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பே அவளுக்கு ஏற்பட்டதில்லை. உடம்பைப் பொறுத்தவரையில் அப்பாவின் மடியில் உட்கார்ந்து, ‘ஆத்திசூடி’ சொன்ன காலத்துச் சிறுமியாகவே இன்னும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள். ‘அப்படி இல்லை? நீ வளர்ந்திருக்கிறாய்’ என்கிறது இந்தக் கண்ணாடி.


(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்