(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 66 தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்
அத்தியாயம் 24 தொடர்ச்சி


“நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்” என்று அந்த அம்மாளோடு காரில் செல்லும் போது அரவிந்தன் சொன்னான். “பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழுவுகளுக்கு அழைத்துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப் பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்திலிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக்கானல் போக வேண்டியிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாள் கூறிய செய்தி அரவிந்தனுக்குப் புதியதாயிருந்தது. பூரணியின் வாழ்க்கையில் எந்தப் புகழ் ஒளி பரவ வேண்டுமென்று அவன் கனவுகள் கண்டு கொண்டிருந்தானோ அது பரவுகிற காலம் அருகில் நெருங்கி வருவதை அவன் இப்போது உணர்ந்து பூரித்தான்.

மதுரை நகரத்து வீதிகளின் வழியெல்லாம் ஒளி வெள்ளம் இறைந்து கிடந்தது. கார் அவற்றிடையே புகுந்து விரைந்து கொண்டிருந்தது. நகரத்துக்குப் பல்லாயிரம் வாய்கள் முளைத்துத் தாறுமாறாகக் குரலெழுப்பிப் பாடிக் கொண்டிருப்பதுபோல் ஒலிபெருக்கிகளும், சினிமா வசன இசைத் தட்டுகளும் மூலைக்கு மூலை ஒலித்துக் கொண்டிருந்தன. ஒன்றரை நாள் இந்த நகரத்துச் சந்தடிகளிலிருந்து விலகி இராமநாதபுரம் சீமையின் வறண்ட கிராமம் ஒன்றில் இருந்துவிட்டு வந்த அரவிந்தனுக்கு இப்போது நகரமே சிறிது புதிதாய்ப் பெரியதாய் மாறியிருப்பது போல் பிரமை தட்டியது. வெளியூர் சென்றுவிட்டு மதுரை திரும்பும் போதெல்லாம் இந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

தானப்ப முதலித் தெருவில் மங்களேசுவரி அம்மாள் வீட்டு வாயிலில் கார் நின்றதும் அரவிந்தன் இறங்கினான்.

“உள்ளே வாங்க அரவிந்தமாமா!” என்று மங்கையர்க்கரசி அவனைத் தன் பூங்கையால் பிடித்து இழுத்தாள். இந்தச் சிறுமியிடம் அரவிந்தனுக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு. பூரணியின் தங்கை என்பதற்காகவோ, பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் கடைசிப் பெண் குழந்தை என்பதற்காகவோ மட்டும் ஏற்பட்ட பிரியமில்லை. அது உயிர் பெற்று நிற்கும் தங்கக் குத்துவிளக்குப் போல் முகமும், கண்களும், சிரிப்பும், கைகளும், கால்களும் எல்லாம் பூக்களாலேயே படைத்துப் பூக்களின் மணமூட்டினாற் போல மாயக் கவர்ச்சி வாய்ந்த சிறுமி இவள். எந்நேரமும் மருட்சியும் வியப்பும் கலந்து கனிந்து, கவிந்து, வெள்ளை அல்லி இதழில் கருப்புத் திராட்சை உருள்வது போல் இந்தச் சிறுமியின் கண்களுக்கு ஓர் அழகு வாய்த்திருந்தது. பெண் குழந்தைகளின் கண்களிலிருந்து இந்த மருட்சியும் வியப்பும் மாறிக் கள்ளத்தனம் குடிகொள்கிற வயது வந்தாலும் மங்கையர்க்கரசிக்கு இந்த அழகு மாறாதது போல் அவ்வளவு நிறைவாகவும், பதிவாகவும் இருந்தது. ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும்’ என்று குழந்தை அழகைப் பற்றி வருணித்திருக்கிறார்களே, அந்த அழகுக் குறுகுறுப்பு, சிறுமியான பின்பும் இந்தப் பெண்ணிடமிருந்து போகவில்லை. அதுதான் அரவிந்தனைக் கவர்ந்தது. பூரணியின் விழிகளிலும் இந்த அழகு உண்டு. ஆனால் அது அறிவொளி கலந்த அழகாயிருந்தது.

வெகு நாட்களாகவே சந்திக்க வாய்ப்பின்றிப் பிரிந்து விட்ட சொந்தத் தம்பியை அன்போடு உபசாரம் செய்தாள் மங்களேசுவரி அம்மாள். செல்வச் செழிப்புக்குரிய ஆணவமே சிறிதும் இல்லாமல் இந்த அம்மாள் எப்படி இவ்வளவு அன்பு மயமாக நெகிழ்ந்துவிட முடிகிறதென்று அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பழகுகின்றவர்களோடு ஒட்டிக் கொள்ளும்படி செய்து விடுவதன் காரணமாக அன்புக்குத் தமிழில் ‘பசை’ என்று ஒரு பெயர் உண்டு. மனிதர்களுடைய மனங்களை இணைத்துத் தொடுத்து விடுகிற சக்தி அன்புக்கு இருப்பதால் ‘நார்’ என்றும், அன்புக்கு ஒரு பெயருண்டு. அந்த அம்மாள் அன்பு மயமாகப் பழகிய விதத்தைக் கண்டபோது ‘பசை’, ‘நார்’ என்னும் சொற்களுக்கு அன்பு என்னும் பொருள் அமைந்த நயம் பற்றிப் பூரணி எப்போதோ தன்னிடம் கூறியிருந்த விளக்கம் அரவிந்தனுக்கு நினைவு வந்தது.

சாப்பாட்டுக்குப் பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டு மங்கையர்க்கரசியும் செல்லமும், சம்பந்தனும் தூங்கிப் போனார்கள். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தாள். ஒளிவு மறைவு இல்லாமல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான மனிதர்களிடம் எல்லாவற்றையும் சொல்லுவது போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்னவோ, பித்துப் பிடித்த மாதிரி இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நெருக்கமும், உறவும் கொண்டாடிக் கவலையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள் இங்கே! நீங்கள் இருக்கிறீர்கள். பூரணி இருக்கிறாள். நீங்கள் இருவரும் தான் எனக்கு அந்தரங்கமானவர்கள் என்று மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டேன். பணத்தையும், செல்வாக்கையும், புகழையும் பகிர்ந்து கொள்ள மனிதர்கள் கிடைப்பார்கள். துன்பங்களையும், வேதனைகளையும் பங்கு கொண்டு தாங்கி நிற்கத்தான் யாரும் கிடைக்கமாட்டார்கள். ஆனால், நீங்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. கடவுள் உங்கள் இருவருக்கும் தங்கமான மனத்தைக் கொடுத்திருக்கிறார். உலகத்தை எல்லாம் ஒரு குடும்பமாக எண்ணி அன்போடும், அனுதாபத்தோடும் பழகுகிற பக்குவம் உங்கள் இரண்டு பேருடைய மனத்துக்கும் ஒற்றுமையாக அமைந்திருக்கிறது. பூரணிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டதே ஒரு விசித்திரமான நிகழ்ச்சி. அவள் அதையெல்லாம் உங்களிடம் சொல்லியிருப்பாள் என நினைக்கிறேன். அவளை முதன் முதலாக நான் சந்தித்த தினத்திலிருந்து என்னுடைய மூத்த பெண்ணாக வரித்துக் கொண்டு விட்டேன். அவள் மூலமாகத் தான் நீங்கள் எனக்குப் பழக்கமானீர்கள் அரவிந்தன். நீங்கள் வித்தியாசம் வைத்துக் கொண்டு பழகக்கூடாது. பூரணி இந்த வீட்டின் மூத்த பெண்ணானால், நீங்கள் இந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை. இந்த வீட்டிலும், இதன் சுகபோகங்களிலும் என் வயிற்றில் பிறந்த வசந்தாவுக்கும் செல்லத்துக்கும் எத்தனை பாத்தியதை உண்டோ அவ்வளவு உங்களுக்கும் உண்டு. நான் பணத்தோடு பிறக்கவில்லை, நான் பணத்தோடு போகப் போவதும் இல்லை. இப்படியெல்லாம் வாழ நேரும் என்று கனவில் கூடச் சின்ன வயதில் நான் எண்ணியதில்லை. ஏழைக் குடும்பத்திலிருந்து ‘அவருக்கு’ வாழ்க்கைப்பட்டேன். இலங்கை மண்ணில் போய் உழைப்பினாலும் முயற்சியினாலும் உயர்ந்து இத்தனை பணத்தையும், இத்தனை துக்கத்தையும், இந்தப் பெண்களையும் எனக்குச் சேர்த்து வைத்துச் சென்று விட்டார் அவர். பணமும் பெருமையும் இருந்து என்ன செய்ய? இந்தப் பெண் வசந்தாவுக்கு ஒரு ‘நல்ல இடம்’ அகப்படாமல் தவிக்கிறேன்” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் மங்களேசுவரி அம்மாள்.

அந்த அம்மாள் கூறியவற்றைக் கேட்ட போது அரவிந்தன் மனம் குழைந்தான். அந்த அபூர்வமான அன்பும், பாசமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. ‘பருமாக்காரர் போல் இதயமே இல்லாதவர்கள் வாழ்கிற உலகத்தில் இவ்வளவு அற்புதமான பெருமனம் படைத்த இந்தத் தாயும் அல்லவா இருக்கிறாள்’ என்று நினைத்தான் அவன். முருகானந்தம்-வசந்தா தொடர்பை அந்த அம்மாளிடம் குறிப்பாகச் சொல்லி சம்மதம் பெற வேண்டிய சமயம் அதுதான் என்று அரவிந்தனுக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் பரந்த மனம் அந்த மணத்தை மறுக்காமல் ஒப்புக்கொள்ளும் என்று அவன் உள்ளம் உறுதியாக நம்பியது. அரவிந்தன் அந்த அம்மாளிடம் கேட்டான்.

“அம்மா! உங்கள் பெண் வசந்தாவின் திருமணத்துக்காக சிரமப்படுவதாகக் கூறுகிறீர்களே! சிரமப்பட வேண்டிய காரணம் என்ன?”

“உங்களுக்குத்தான் தெரியுமே! அசட்டுத்தனமாகச் சினிமாவில் சேர்கிறேன் என்று போய் எவனுடனோ அலைந்துவிட்டு ஏமாந்து திரும்பினாள். ஊரில் அது கை, கால் முளைத்து தப்பாகப் பரவியிருக்கிறது. பெண்ணின் தூய்மையில் நமக்கெல்லாம் நம்பிக்கை நன்றாக இருக்கிறது. ஆனால் ஊரார் அதிலேயே சந்தேகப்படுகிறார்கள். எங்காவது ஒரு வரன் முடிவாகும் போலிருந்தால் யாராவது இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் குறுக்கே புகுந்து கலைத்து விடுகிறார்கள். இதைச் செய்வதில் அவர்களுக்கு என்னதான் பெருமையோ தெரியவில்லை” என்று ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கூறினாள் அந்த அம்மாள். அரவிந்தன் ஆறுதல் கூறினான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்