மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82
குறிஞ்சி மலர் 29
புண்ணிய நல்வினை திரண்டனைய
பொன்னொளிர் பொலிவினை
கண்ணிற்கரந்தானே மறுபடி
கண்ணுள் கலந்தானே!
விமானம் மேலே உயரச் சென்று பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள். ‘உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்’ என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக் கொண்டே கூறினானே அரவிந்தன். அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு இப்போது உருவெளியில் நினைத்துப் பார்க்க முயன்றாள் அவள். விமானம் புறப்பட்டு மேலெழுந்ததுமே கீழே நின்று கொண்டிருந்த அரவிந்தன் அவள் கண்களின் பார்வைக்கு மறைந்துவிட்டான். ஆனால் அவனை நினைத்துப் பார்ப்பதற்குத்தான் எப்போதும் அவள் சிரமப்பட வேண்டியதே இல்லையே. கண்ணில் கரைந்து போனாலும் கண்ணுள் கலந்து நிறைந்தவனாயிற்றே அவன். சிவப்பு வெல்வெட்டு துணியில் முத்து மாலை சரிவது போல் நகைத்தவாறே விமானத்துப் படியினருகில் நின்ற அரவிந்தனின் முகம் அவளுக்கு நினைவு வந்தது. ‘அரவிந்தன்! உங்கள் சிரிப்பில் அமுதம் இருக்கிறது. அமுதத்துக்குத்தான் உயிரை வளர்க்கும் ஆற்றல் உண்டு’ என்று அவன் முகம் நினைவுக்குள் வந்த போது தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் பூரணி. அரவிந்தனின் இந்தச் சிரித்த முகத்தை நினைவிலிருந்து அழியாமல் வைத்துக் கொண்டாலே போதும். உலகம் முழுவதும் சுற்றிப் புகழ் மாலை சூடிவரும் துணிவை இந்த முகத்தின் நினைவிலேயே நான் அடைய முடியும் என்று எண்ணிக் கொண்டாள் அவள். விரைவாகச் செல்லும் ஊர்திகளில் பயணம் செய்ய நேரும் போதெல்லாம் தன் மனத்தில் தனித்தன்மை வாய்ந்த தூய நினைவுகள் குமிழி குமிழியாகப் பொங்கி மேலெழுவதை அவள் உணர்ந்திருக்கிறாள். சிந்தனைத் துடிப்பும், புதுச்சட்டை போட்டுக் கொண்டிருக்கும் குழந்தையின் உற்சாகமும், பெரிய சாதனைகளை உடனே சாதித்து விட வேண்டும்போல் ஒரு தவிப்பும், வேகமான வாகனங்களில் உட்கார்ந்து செல்லும்போது தவிர்க்க முடியாமல் அவளுக்கு ஏற்படும். வாழ்க்கையில் அவள் செய்கிற முதல் விமானப் பயணம் இது. எனவே அவளுக்கு அத்தகைய நேரங்களில் ஏற்படும் இயல்பான மன எழுச்சி இன்று இரு மடங்காயிருந்தது.
ஈழ நாட்டைப் பற்றியும், யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் சிறப்பைப் பற்றியும் அப்பா எப்போதோ கூறியிருந்த செய்திகளெல்லாம் அவளுடைய நினைவில் பசுமையாகத் தோன்றின. ஆறுமுக நாவலர், குமாரசாமிப் புலவர், சி.வை. தாமோதரம் பிள்ளை, கதிர்வேல் பிள்ளை, விபுலானந்தர், பண்டிதமணி கணேச ஐயர் போன்று ஈழநாட்டில் தோன்றித் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்துக்கும் முடிசூடா மன்னர்களாக விளங்கிய பெரும் புலவர்களை நினைத்துக் கொண்டபோது பயபக்தியினால் மெய் சிலிர்த்தது அவளுக்கு. ‘தமிழும், சைவமும், பழைய நற்பண்புகளும் குன்றாமல் வாழும் ஒரு சூழ்நிலையைக் காண முடிந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்’ என்று நினைப்பதற்கே பெருமையாக இருந்தது. ‘விபுலானந்த அடிகளைப் போல் துறவியாகி தமிழுக்கும் சமய ஒழுக்கங்களுக்கும் எனது முழு நேரத்தையும் கொடுத்துத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இளமையில் இருந்தது அம்மா! அந்த ஆர்வம் நிறைவேறாமல் செய்தது உன் தாய்தான்’ என்று அம்மா இறந்த பின் பலமுறை பூரணியிடம் ஏக்கத்தோடு கூறியிருக்கிறார் அவள் தந்தை. உலகம் முழுவதும் தமிழும் தமிழ்ப் பண்புகளும் வாழும்படி செய்துவிட வேண்டும் என்று அப்பாவுக்கு ஒரு பேராசை உண்டு. அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் சிலர். இந்த இலட்சியப் பேராசையை வெறி என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். வெறிக்கும் அவருக்கும் வெகுதூரம். “பூரணி தமிழ் மொழி பேசுகிற இனம் உலகம் முழுவதும் தன் உறவுகளைப் பரவ விட்டிருக்கும் பெரிய குடும்பம் அம்மா! நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒவ்வொருவராக வளர்ந்து ஆளாக்கித் தகுதியான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் மட்டும் தாய்மைப் பெருமிதத்தோடு இருந்த இடத்திலே தெய்வமாக மாறிக் கொண்டிருப்பது போல் உலகத்து மூலை முடுக்குகளுக்கு எல்லாம் தன் மக்களை வாழ்வதற்கு அனுப்பியிருக்கிறவள் தமிழ்த்தாய். அருகில் இருக்கும் மக்களைவிட அவளைப் பிரிந்து தொலை தூரத்துக்குச் சென்றிருக்கிறவர்கள் தாம் அவளுடைய அருமை பெருமைகளை நன்றாக உணர்ந்து வாழ்கிறார்கள். இந்த வகையில் தமிழ்த்தாயைப் போல் பெருமைப்படத்தக்க நிலை வேறு யாருக்கும் கிடையாதம்மா” என்று அப்பா சமயம் வாய்த்தபோதெல்லாம் கூறுவார். ‘நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும், குன்றியவர்களை யாழ்ப்பாணத்தாருடனாவது வங்காளிகளுடனாவது ஆறு திங்கள் பழகச் செய்ய வேண்டும்’ என்பார் அப்பா. ‘நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் இல்லாமல் சமயம், ஒழுக்கம், பண்பாடு எதிலும் பற்று ஏற்பட இயலாது’ என்று பலரிடம் அவர் கடுமையாக வாதங்கள் புரிந்திருப்பதைப் பூரணி அருகிலிருந்து கண்டிருக்கிறாள்.
விமானத்தில் பயணம் செய்துகொண்டே யாழ்ப்பாணத்தையும், தமிழையும், தமிழ்த் தொடர்புடையவர்களளயும் நினைக்கும் போது தந்தையின் பண்புகளும் பெருமைகளும் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவளுக்குத் துணிவு அளித்தன. அடிக்கடி அவள் உள்ளத்தில் உண்டாகும் ஒரு தன் விழிப்புத் தவிப்பு – அது இப்போதும் உண்டாயிற்று. உயரத்தில் விமானமும், விமானத்தில் தானுமாகப் பறந்து கொண்டிருந்த பூரிப்பின் ஊடே, தன்னைச் சுற்றி எல்லாமும் எல்லாரும் ஒழுங்காகவும், நிறைவாகவும், இனிமையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பது போல் ஒரு திருப்தி அவளுள் பரந்து விரிந்து நிறைந்து நிலைத்துக் கொண்டிருந்தது. பெரிதாகவும் இணையற்றதாகவும் சிறந்ததாகவும் எதையோ நினைக்கவும், பேசவும், செய்யவும் வேண்டும் போல் மனமும் புலன்களும் கிளர்ந்தன. இந்தப் பரவச மனநிலை நீடித்தது. கம்பீரமான இலட்சியக் கனவுகளோடு பறந்து சென்றாள் அவள்.
மங்களேசுவரி அம்மாள் விமானப் பணிப் பெண்ணை அழைத்து ஆங்கிலத்தில் ஏதோ விசாரித்தாள். பூரணி தீவிரமான சிந்தனையில் இருந்ததனால் அந்த அம்மாள் விசாரித்ததைக் கவனமாகக் கேட்க இயலவில்லை.
“இன்னும் சிறிது நேரத்தில் யாழ்பாணத்து விமான நிலையத்தில் இறங்கிவிடுவோம் பூரணி!” என்று விசாரித்து அறிந்து கொண்ட செய்தியைப் பூரணியிடம் அந்த அம்மாளே கூறினாள். விமானம் சிறிது சிறிதாகக் கீழே இறங்கலாயிற்று. கண்மூடித் திறப்பதற்குள் விரைவாக யாழ்ப்பாணம் வந்துவிட்டதைப் போல் பூரணிக்கு வியப்பாக இருந்தது. ‘தமிழ்நாடும் ஈழநாடும் மொழியால் தான் நெருங்கியிருக்கின்றன என்று எண்ணினேன்; இடத்தாலும் நெருங்கியிருக்கின்றனவே’ என்று அதிசயப்பட்டாள் அவள்.
மங்களேசுவரி அம்மாள் பின் தொடரப் பூரணி விமானத்திலிருந்து கீழே இறங்கினாள். ‘ஆறுமுக நாவலர் தமிழ் மணம் பரப்பிய மண்ணில் இறங்கப் போகிறோம்’ என்று எண்ணிய போது இறும்பூது கொண்டாள். தமிழ் இலக்கிய விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அவளை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். ஆண்களும், பெண்களுமாக கைகளில் மாலைகளோடு தன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தமிழன்பர்களின் கூட்டத்தைக் கண்டு மலைத்தாள் பூரணி. “இவ்வளவு பேர்கள் வந்திருக்கிறார்களே” என்று அவள் மங்களேசுவரி அம்மாவிடம் மெல்லச் சொன்னாள். “இதைவிட அதிகமான கூட்டம் வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, பூரணி! அன்பும், விருந்தோம்பலும், மரியாதையும் உலகத்துக்காகப் பள்ளிக்கூடம் வைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அளவு இங்குள்ளவர்களிடம் நிறைந்திருக்கின்றன. இவர்களிடம் ஒருநாள் பழகினாலும் இதை நீ விளங்கிக் கொள்ளலாம் அம்மா!” என்று பூரணிக்கு அந்த அம்மாள் பதில் கூறினாள்.
தமிழ் இலக்கிய விழாவின் செயலாளர் திரு. இராசநாயகமும் அவருடைய மனைவி கனகம்மாள் இராசநாயகமும், மலர்ந்த முகமும் கூப்பிய கரமுமாக எதிர்கொண்டு வரவேற்றார்கள். முன்பு இலங்கையில் வசித்திருந்த பழக்கத்தால் மங்களேசுவரி அம்மாளுக்கு இராசநாயகம் தம்பதிகளை நன்றாகத் தெரிந்திருந்தது. பூரணியை அவர்களுக்கும், அவர்களைப் பூரணிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் மங்களேசுவரி அம்மாள்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி, குறிஞ்சி மலர்
Leave a Reply