(குறிஞ்சி மலர்  80 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்  28 தொடர்ச்சி



தொழிற்போட்டிகளையும், பொறாமை, பகைகளையும் கூடியவரை நியாயமாகவும், கண்ணியமாகவும் தீர்க்க முயன்றான் அரவிந்தன். அனாவசியச் சண்டைகளை முன்கூட்டியே தவிர்த்தான். தான் கிராமத்தில் நிலம் விற்றுக் கொணர்ந்த பணத்தில் அச்சகத்துக் கடன்களை அடைத்தவை போக எஞ்சிய பகுதியை தேர்தல் செலவுக்கென ஒதுக்கி வைத்தான். தன்னுடைய திறமையான நிருவாகத்தினாலும் நாணயமான நடவடிக்கைகளாலும் மீனாட்சி அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்த எந்த வேலைகளும் குறையாமல் பார்த்துக் கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் புதிதாக ஏற்பட்டிருந்த அச்சகம் அவனையோ, அவனுடைய தொழிலையோ எந்த வகையிலும் கெடுத்துவிட முடியவில்லை. கெடுக்க முடியாவிட்டாலும் கெடுப்பதற்காக அரவிந்தனுக்கு எதிராக அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். எந்நேரமும் அவர்களை நினைத்துக் கவலைப்படவோ, போட்டி போடவோ அரவிந்தன் தயாராயில்லை. தனது விலை மதிப்பற்ற நேரத்தைப் பல நல்ல காரியங்களுக்குச் செலவிட வேண்டியிருந்தது அவனுக்கு. வசந்தா முருகானந்தம் திருமணம் நிச்சயமாகி முகூர்த்த நாளும் பார்த்துவிட்டார்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பொது மனிதனாக இருந்து அவன் தான் திருமண ஏற்பாடுகளையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது. மீனாட்சிசுந்தரத்தின் இறுதிச் சடங்குகளுக்காக வந்தபின் பூரணியோ, மற்றவர்களோ திரும்பவும் கோடைக்கானலுக்குப் போகவே இல்லை. பதினைந்து இருபது நாட்கள், திருப்பரங்குன்றத்து வீட்டில் ஓய்வாக இருந்தாள் பூரணி. ஓதுவார்க்கிழவர் வீட்டுக் காமுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. போய்ப் பார்த்துவிட்டு வந்தாள். கமலா பிள்ளைத்தாச்சியாகப் பிறந்து வீட்டுக்கு வந்திருந்தாள். சில நாட்களில் மாலையில் அவளுடைய வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தாள். மங்களேசுவரி அம்மாளின் பெண்ணுக்குத் திருமணம் நெருங்கிய போது மதுரையிலேயே அந்த அம்மாவோடு வந்து தங்கி உதவியாக இருக்கலானாள். நகைக்கடை, புடவைக்கடை என்று மங்களேசுவரி அம்மாளோடு அலைய வேண்டிய இடங்களுக்கு எல்லாம் அலைந்தாள்.

திருமணம் நடக்க இருந்த நாளுக்கு அப்பால் பூரணி இலங்கை புறப்பட ஒரு வாரமோ, என்னவோ இருந்தது. வெளிநாட்டுப் பயண அனுமதி வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் தமிழ் இலக்கிய மகாநாட்டிலும், இலங்கையில் பிற பகுதிகளிலும் அவள் சொற்பொழிவாற்றுவதற்காகப் புறப்பட இருந்தாள்.

வசந்தாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஊரே வியக்கும் அதிசயத் திருமணமாக அமைந்தது அது. திருமண நாளன்று திரும்பத் திரும்ப எப்போது நினைத்தாலும் மனத்தில் மகிழ்ச்சி ஊறும் அனுபவம் ஒன்று பூரணிக்கு ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூட்டத்தில் பெண் குழந்தை ஒன்று வாயாடியாகவும், படு சுட்டியாகவும் இருந்தது. மாலையில் முன்புறம் பந்தலில் யாரையோ வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தான் அரவிந்தன். ‘பண்டக அறை’ சாவி அவனிடம் இருந்தது. மங்கையர் கழகத்துப் பெண்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து வந்திருந்தது. அவர்களுக்கெல்லாம் தாம்பூலப்பை கொடுப்பதற்காக பண்டக அறை சாவி வேண்டியிருந்தது பூரணிக்கு. பக்கத்தில் பட்டுப் பாவாடை புரளச் சிரித்துக் கொண்டே நின்ற அந்த வாயரட்டைச் சிறுமியிடம், “வாசலிலே அதோ உயரமாக, சிவப்பாக, அழகாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே ஒருத்தர், அவரிடம் பண்டக அறை சாவி இருக்கிறது. நான் கேட்டேனென்று போய் வாங்கிக் கொண்டு வா!” என்று அரவிந்தனை அடையாளம் காண்பித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. அந்தச் சுட்டிப் பெண் திருமணத்துக்கு வந்த நாளிலிருந்து அரவிந்தனையும் பூரணியையும் நன்றாகக் கவனித்து வைத்திருந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி சிரித்துப் பேசிக் கொள்வதையும், சேர்ந்து கடைகளுக்குச் செல்வதையும் பார்த்து இருவரும் கணவன், மனைவி என்று தானாக நினைத்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. இயல்பாகவே குறும்பும், சுட்டித்தனமும் நிறைந்த குழந்தை அது. பூரணி அனுப்பியதும் சிறிது கூடக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் துள்ளிக் குதித்து வாயிற்புறம் ஓடிப்போய் அங்கே பல பேருக்கு நடுவே நின்று கொண்டிருந்த அரவிந்தனை நோக்கி, “மாமா! மாமா, உங்க வீட்டுக்காரி உங்களைக் கூப்பிடறாங்க. நீங்க அழகா, உயரமா, சிவப்பா இருக்கீங்கன்னு அவர்களுக்கு ரொம்பத் தற்பெருமை. எங்கிட்டச் சொல்லி அனுப்பிச்சாங்க. பண்டக அறை சாவி வேணுமாம் உங்க வீட்டுக்காரிக்கு. . . தரப்போறீங்களா இல்லையா! எனக்கு நேரமாவுது” என்று வெடிப்பாகப் பேச ஆரம்பித்தது. சுற்றியிருந்த நண்பர்களும் மாப்பிள்ளைக் கோலத்தில் வீற்றிருந்த முருகானந்தமும் அந்தச் சிறுமி கூறியதைக் கேட்டு அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்கள். அரவிந்தன் ஒன்றும் புரியாமல் நாணித் தயங்கி நின்றான். தன் பிஞ்சுக் கையை அவனது வலது கையில் கோர்த்துக் கொண்டு உள் இழுத்துச் செல்லத் தொடங்கிவிட்டது அந்தக் குழந்தை. அது இழுத்துக் கொண்டு சென்ற வேகத்தில் தொடர்ந்து அவன் நடந்து செல்லத் திணறினான். கூட்டத்தில் அத்தனை பெண்களின் கூட்டத்துக்கு நடுவே அரவிந்தனைப் பூரணிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தி, “அழகா, உயரமா, சிவப்பா என்று பெருமையடிச்சிக்கிட்டிங்களே! இதோ உங்க வீட்டுக்காரரைக் கொண்டாந்து நிறுத்தியாச்சு. சாவியோ, பூட்டோ எது வேணுமோ வாங்கிக்குங்க” என்று கூறி இரண்டு கைகளையும் கொட்டிக் குதித்துச் சிரித்தது அது! சின்னஞ்சிறு பவழ இதழ்களை அழகாகக் கோணிக்கொண்டு சுழித்துச் சுருக்கிக் குறும்பாக அது சிரித்த சிரிப்பில் கூடியிருந்த பெண்களும் கலந்து கொண்டார்கள். பூரணியும் அரவிந்தனும் நாணித் தலை குனிந்தார்கள் ஒரு கணம். அந்தத் திருமண வீட்டில் மணந்து கொண்டிருந்த மல்லிகை மணமும், சந்தன மணமும், ஒன்றாகிக் கலந்து அவர்கள் இரண்டு பேருடைய இதயத்துள்ளும் புகுந்து இடம் காணாமல் நிறைந்து கொண்டு மணம் பரப்புவது போல் இருவருமே உணர்ந்தனர். அந்த ஒரே ஒரு கணத்தில் அவனும் அவளும் மூப்பு முதிர்வற்ற கந்தர்வக் காதல் வாழ்வை எண்ணற்ற பிறவிகளில் மனங்களிலேயே வாழ்ந்து வாழ்ந்து நிறைவு கண்டுவிட்டாற் போன்றதொரு பரிபூர்ணமான உணர்வை எய்தினர். பரிபூரணமானதொரு சிலிர்ப்பை அடைந்தனர். அவற்றில் மெய் மறந்து நின்றனர்.

“ஐயையே, வீட்டுக்காரரும் வீட்டுக்காரியும் வெக்கப்படறாங்கடோய்!” என்று மீண்டும் பந்து எழும்பித் தணிவது போல் துள்ளிக் குதித்துக் கைகொட்டிச் சிரித்தாள் சிறுமி. அரவிந்தன் அந்தச் சிறுமியை எட்டிப் பிடிக்கக் கையை நிட்டிக் கொண்டு பாய்ந்தான். சிறுமி சிட்டாகப் பறந்து ஓடிவிட்டாள். பெண்களுக்கு நடுவில் மணக்கோலத்தில் புத்தழகும் பூரிப்புமாக அடக்கத்தோடு உட்கார்ந்திருந்த வசந்தா மெல்லத் தலை நிமிர்ந்து ‘அண்ணனுக்கு நல்லா வேணும்’ என்று சொல்லிச் சிரித்தாள். “குழந்தை வாக்கு தெய்வ வாக்கு மாதிரி, இல்லாததை அது ஒன்றும் சொல்லிவிடவில்லை? என்றாவது ஒருநாள் நடக்க வேண்டியதுதானே?” என்று மங்களேசுவரி அம்மாள் புன்னகையோடு கூறினாள். அந்த சிறுமி செய்த வம்பினால் விளைந்த சிரிப்பும் கலகலப்பும் அடங்க சில விநாடிகள் ஆயின. அரவிந்தன் தன் நினைவுக்கு வந்து பையிலிருந்து பண்டக அறை சாவியை எடுத்து, “இந்தா சாவியை வாங்கிக் கொள்” என்று பூரணியிடம் நீட்டினான். ஒதுங்கி நாணித் துவண்டு நின்ற பூரணி மெல்லத் தலை நிமிர்ந்து நெஞ்சைக் கொள்ளையிடும் எழில் விழிகளால் நோக்காதது போல் நோக்கி முல்லைச் சிரிப்பில் நெகிழும் கொவ்வை இதழ்களில் குழைவு கனிய அவன் கையிலிருந்து சாவியை வாங்கிக் கொண்டாள். அப்போது தன் கண்கள் பருகிச் சிறைப்பிடித்த அவள் முகத்தின் ஒப்பிலா வனப்பை அவன் தன் இதயத்தில் பதிய வைத்துக் கொண்டான். ‘நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகமல்லவா அது?’ தன்னுடைய பழைய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. அத்தர், புனுகு, சவ்வாது எல்லாம் இணைத்துக் கலந்து பூசின மாதிரி நினைவுகளிலும் உடம்பிலும் சுற்றி இலங்கிடும் சூழ்நிலையிலும் ஏதோ மணந்தது அரவிந்தனுக்கு. ஆனால் மறுவிநாடியே, கையில் தீபத்தையும் கண்களில் கண்ணீரையும் ஏந்திக் கொண்டு இருளடைந்த மனிதக் கும்பலின் நடுவே, ஒளி சிதறி நடந்து செல்லும் வன தேவதை போன்று பூரணி நினைவில் வந்து அவன் நினைவைச் சிலிர்க்க வைத்தாள். மனத்தைக் கோவிலாக்கினாள்.

பெண்ணுக்குத் திருமணம் நன்றாக முடிந்த திருப்தியில் மங்களேசுவரி அம்மாளும் பூரணியோடு இலங்கைக்குப் புறப்பட்டு விட்டாள். அந்த அம்மாளிடம் பாசுபோர்ட்டு ஏற்கெனவே இருந்தது. ‘விசா’ மட்டும் அவசரமாக ஏற்பாடு செய்து அரவிந்தன் வாங்கிக் கொடுத்தான். சென்னையிலிருந்து திருச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் ‘ஏர் சிலோன்’ விமானத்தில் அவர்கள் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். பிரயாண நாளிலே திருச்சி விமான நிலையத்துக்கு மங்கையர் கழகத்துக் காரியதரிசி, அரவிந்தன், முருகானந்தம், வசந்தா எல்லாரும் வழியனுப்பச் சென்றிருந்தார்கள். பூரணி விமானத்தின்மேல் ஏறும் பெட்டி ஏணியின் கடைசிப் படியில் நின்று கைகூப்பியபோது, “உயரத்தில் ஏறிச்செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்” என்று நகைத்துக் கொண்டே தரையிலிருந்து இரைந்து கூறினான் அரவிந்தன். அதைக் கேட்டுப் பதிலுக்கு அவள் சிரிக்க முயன்றாள். ஆனால் அவள் கண்களில் நீர் திரண்டு விட்டது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்