61salai02

அடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை

நிலையான தீர்வுகாண சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

  தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையிலிருந்து டம்டம்பாறை வழியாகக் கொடைக்கானல் சென்றடையலாம். இச்சாலைகள் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.

  மலைப்பாதையிலிருந்து கொடைக்கானல், பூம்பாறை, பூலத்தூர் முதலான மலை யூர்களுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். கடந்த 50 முன்னர்களுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் பெரியகுளம் வழியாகவும், தேவதானப்பட்டி வழியாகவும் குதிரைகள் மூலம் சென்று வந்தனர். தற்பொழுது வாகனப் பெருக்கம் மற்றும் சாலை வசதிகளினால் குதிரைகளை விட்டு விட்டுப் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

  கடந்த சில வருடங்களாக அதிக வாகனங்களும், அதிகமான சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச்சாலையில் சரியான பாதுகாப்பற்ற தன்மை உள்ளது. கனமழை பொழிந்தாலும், கனமாக காற்று வீசினாலும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைகிறது. இதனால் மாற்றுவழியாக தாண்டிக்குடி வழியாகவும் பழனி வழியாகவும் கொடைக்கானலுக்குச் சென்றுவருகின்றனர்.

  அண்மைக்காலமாகப் பெய்து வருகின்ற கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைகிறது. இதன் தொடர்பாகப் பூலத்தூரைச்சேர்ந்த கோகுலக் கிருட்டிணன் கூறுகையில், “கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்திகளும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மலைச்சாலையைத் தாண்டிவிட்டால் அடுத்தபடியாக ஊத்து என்ற இடத்தில்தான் நிலநெய் நிரப்பவேண்டும். மேலும் கொடைக்கானல் செல்லும் சாலையின் இருபுறமும் வனத்துறைக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. இதனால் வழிநெடுக வாகனங்கள் நிறுத்துவற்கு இடமில்லை. வாகனங்கள் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றால் அடுத்து வருகின்ற வாகனங்கள் நின்று கொண்டுதான் இருக்கும். மேலும் ஏதாவது இன்னல் ஏற்பட்டாலோ நேர்ச்சி(விபத்து) ஏற்பட்டாலோ உடனடியாகத் தகவல் கூறவோ முதலுதவி செய்யவோ எந்த ஒரு வசதியும் இம்மலைப்பகுதியில் இல்லை.” என்றார்.

  கடந்த சில வருடங்களாகக் கனமழை பெய்து வருவதால் இயற்கையாக நீருற்றுகளும், ஆறுகள், அருவிகளும் உருவாகின்றன. இதனால் சாலைகள் பழுதடைந்து வருகின்றன. இதற்காக நெடுஞ்சாலைத்துறையோ போக்குவரத்து சார்பிலோ அவசர நிதி என்று எதுவும் ஒதுக்கவில்லை. தொடர்ந்து நிலச்சரிவு, மலைப்பாதையில் பெருகிவரும் ஊற்றுகளினால் பாதைகள் பழுதடைகின்றன. இதற்கு நிலையான தீர்வு ஏற்படக்கூடிய வகையில் முன்னேற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டும்.

   எனவே மலைச்சாலையிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து வசதிகளையும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள பிற நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.