thiravidathamizharperavai-muthirai-madaledu

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்!

 இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள்.  யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள்  அனைத்தையும் தாண்டி,மதவாத வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய நேரமும், நெருக்கடியும் இப்போது வந்துள்ளது.

 எங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், கிருத்துதாசு காந்தி அவர்களுக்கும் கூட எல்லா நிலைகளிலும் ஒத்த கருத்துகள் இல்லை. திராவிடம் என்னும் கோட்பாட்டை – ஏன் – அந்தச் சொல்லையே கூட அவர் ஏற்பவர் இல்லை. தந்தை பெரியார் மீதும் அவருக்குக் கனத்த விமர்சனங்கள் உண்டு. எனினும் அவற்றை எல்லாம் அவருடைய தனிப்பட்டகருத்து உரிமையாகவே நாம் பார்க்கிறோம். அது குறித்து விவாதிக்க வேறு தளங்கள் நமக்கு இருக்கின்றன. ஆனால்இன்று, கருத்துஉரிமைக்கும், மனித உரிமைகளுக்கும் விடப்பட்டுள்ள   அறைகூவல்களை நாம் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதில் எங்கள் பேரவை உறுதியாக உள்ளது.

  எனவே இத்தருணத்தில், சனநாயகத்திலும், மதச் சார்பின்மையிலும், மனித உரிமைகளிலும் நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட அனைவரும், வரும் 3 ஆம் நாள்  ஐப்பசி 18, 2047 (03.11.2016) காலை 10 மணிக்கு, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர்பேரவையின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். உரிய நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் மதச் சார்பின்மை இயக்கத்திற்கு  எங்கள் நன்றி!

 

சுப.வீ. ; su-ba-vee

சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை