ஆயுதப் போராட்ட எழுச்சியால்விடுதலை பெற்றோம் – கவிஞர் மு.முருகேசு
ஆயுதப் போராட்ட எழுச்சியால் விடுதலை பெற்றோம் –
70-ஆம் ஆண்டு விடுதலைநாள் விழாவில்
கவிஞர் மு.முருகேசு பேச்சு
வந்தவாசி: ஆடி 30, 2047 / ஆக. 14 அன்று, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கம், ஆசிய மருத்துவக்கழகம் இணைந்து வந்தவாசியில் விடுதலைநாள்விழா-கருத்தரங்கம் நடத்தின. இதில் வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்க அறிவுரைாயளர் கவிஞர் மு.முருகேசு பங்கேற்றுப்பேசினார்.
இவ்விழாவிற்கு வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் மொழிப்போர் ஈகையாளருமான அ.மு.உசேன் தலைமையேற்றார். செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர் இரா.சிவக்குமார், ஆசிய மருத்துவக்கழக இயக்குநர் பீ. இரகமத்துல்லா, பாரத்துப் பள்ளித் தாளாளர் ச.காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சு.அசோக்குமார், அறிவியல் ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். விடுதலைநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவரும் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் அறிவுரையாளருமான கவிஞர் மு.முருகேசு, ‘சும்மாவா வந்தது சுதந்திரம்..?’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
”ஆங்கிலத் தனிவல்லாண்மையை எதிர்த்துப் போராடி, நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்றது. இந்திய விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையில் அமைதி வழியில் போராடியதால் மட்டும் கிடைத்ததல்ல. ‘கத்தியின்றி, இரத்தமின்றி’ நடைபெற்ற போராட்டத்தைக் காந்தி வழி நடத்த, இன்னொருபுறம் நேதாசி சுபாசு சந்திரபோசு தலைமையில் இந்திய தேசியப் படை உருவாக்கப்பட்டு ஆயுதமேந்திய போராட்டமும் நடைபெற்றது. மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் தவிர்க்க முடியாத சூழலில்தான் இந்தியாவை விட்டு, வெளியேறினார்கள்.
இந்தியத் தேசம் விடுதலை பெற்ற நாளில், காந்தி யாரோடும் பேசாமல் தனிமையில் இருந்தார். விடுதலைநாள் வாழ்த்துச் செய்தி கேட்டபோது, “என் மனம் இருண்டு கிடக்கிறது…” என்றார். காந்தியை அன்றைக்கு அப்படிச் சொல்ல வைத்தது எது, விடுதலைக்குப் பின்னான நம் தேசம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் நாம் சேர்த்தேதான் சிந்திக்க வேண்டும். அன்று ஆங்கிலேயர்கள் நம் தேசத்தை விட்டு வெளியேறினார்கள். இன்றைக்கு வணிகத்தின் பேரால், மீண்டும் நம் தேசத்தில் கால் பதித்து, நம் வளங்களையும் செல்வங்களையும் வெகுசுதந்திரமாய் சூறையாடிப் போகிறார்கள்.
இன்றைய தலைமுறையினருக்கு நம் தேசத்தின் நீண்ட நெடிய போராட்ட வரலாறு தெரியாத காரணத்தால், பெப்சியும், கொக்கோ கோலாவும் குடித்தபடி, வெளிநாட்டுப் பயணக் கனவுகளில் திளைத்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் வரலாற்றையே அறிந்துகொள்ளாமல் ஒரு தலைமுறை வளருமானால், நிச்சயம் அந்தத் தேசம் மீண்டுமொரு அடிமை நிலைக்குச் சென்று விடும். அந்நிலை வராமல், நாம் தற்சார்போடு வாழ்வதற்கு, நம் இந்திய தேசத்தின் அடிமை விலங்கொடிக்க நடைபெற்ற போராட்ட வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்” என்றார்.
பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.
(படங்களை அழுத்திப் பெரிதாகக் காணலாம்.)
-வந்தை அன்பன்
Leave a Reply