ஆளும்கட்சியினர் வன்முறையைக் கண்டித்துப்

பல்வேறு இடங்களில் சாலைமறியல்!

காவல்நிலையம் முற்றுகை!

பதற்றம்!

  தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரவை, கலவை, விசிறி, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  தேவதானப்பட்டியில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி, காவல்நிலையம், பள்ளிவாசல் சமாஅத்து திருமண மண்டபம் முதலான பல இடங்களில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும், தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களும் தங்களுடைய ஆளும்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதற்காக, அடுத்தவர்களுக்குக் கொடுத்த விலையில்லா மின்னுரல், மின்னரவை, மின்விசிறி போன்றவற்றை வலுக்கட்டாயமாக எடுத்துச்சென்றனர். இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் தங்கள் உறவினர்களுக்கு அடையாளச்சீட்டு இல்லாமல் வேண்டிய அளவிற்கு மின்னுரல் முதலான பொருள்களை அள்ளிச்சென்றனர். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டது.

  இந்நிலையில் தொகுதி வாரியாக முறையாக வழங்காமல் சில குறிப்பிட்ட தெருக்களை புறக்கணித்து மின்னுரல் முதலானவற்றை வழங்கினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டணம்பட்டி, டி.வி.நகர் பொதுமக்கள் அரிசிக்கடைப் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதன்பின்னர் காந்திநகர்ப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கப்படாததைக் கண்டித்துத் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கிப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதன்பின்னர் தெற்குத்தெருவைச்சேர்ந்த சிலருக்கு வழங்கப்படாததைக் கண்டித்துக் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன்பின்னர் வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோர்   அமைதிப்பேச்சில் ஈடுபட்டு மறியலைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டதன்பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

இதனால் மதுரை-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து 1 மணிநேரம் பாதிக்கப்பட்டது; இப்பகுதியில் பதற்றம் நிலவியது.

73vaigaianeesu