இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட
50 ஆண்டு கடைப்பிடிப்பு:
சென்னைக் கலந்தாய்வு – விவரங்கள்
இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 மாணவர் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டை ஒரு மொழி உரிமை ஆண்டாக அறிவித்துத், தொடர்ச்சியாகப் பல கோரிக்கை நிகழ்வுகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என்று மொழி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இயக்கங்களும் நவம்பர் 30, 2015 ஞாயிறு அன்று ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளன. மக்கள் இணையம் மற்றும் பன்மொழி இந்தியாவுக்கான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதன்மை அமைப்புகளும் மொழி உரிமை ஆராய்ச்சியாளர்களும் செயல்பாட்டாளர்களும் கலந்துகொண்டார்கள்.
எதிர்வரும் 2015 இல், இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 போராட்டம் முதலான பல மொழிப்போராட்டங்களில் ஈடுபட்டு உயிரீந்த ஈகியர்களையும் அரசின் அடக்குமுறைகளில் உயிர்துறந்த மக்களையும் தமிழகமெங்கும் நினைவு கூர்ந்து நிகழ்வுகள் நடத்துவது என்றும் இந்த ஆண்டில் மொழி உரிமை குறித்த கூடுதல் இயக்கங்களை நடத்துவது என்றும் ஒரு பொதுவான கருத்து அனைவரால் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
தொடக்கத்தில் மொழி உரிமை அரசியலின் புதிய படிநிலை குறித்து நான் விரிவாக எடுத்துரைத்தேன். (முந்தைய பதிவைப் பார்க்க). இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்பிரவரி 21 இல், புது தில்லியில் கூடிய பல மாநிலங்களைச் சேர்ந்த மொழி உரிமைப் போராளிகளின் கூட்டுச் சிந்தனையில் உருவான பல எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன். இந்தித் திணிப்புக்கும் ஆங்கில மொழி தனியுரிமைக்கும் எதிராகப் போராடுவது மட்டுமல்ல, அனைத்து மொழிகளுக்கும் சமத்துவத்தையும் உரிமைகளையும் வழங்கும்வகையில், மொழி நிகரமை மற்றும் உரிமை சட்டமுன்வரைவு ஒன்றைக் குடிமைச் சமூகம் உருவாக்கி, நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான முயற்சி எடுக்கப்படவேண்டும் என்றும் பிப்பிரவரி 21 இல் முன்மொழிவு ஒன்று எங்கள் தரப்பில் வைக்கப்பட்டது. அது ஓர் அரசியல்சாசன திருத்த திட்டமாகும். அந்த முன்மொழிவுக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்புக்குப் பின், பல மாநிலங்களின் மொழி செயற்பாட்டாளர்களோடு தொடர்ந்து உறவுகொண்டு, அந்த சட்டமுன்வரைவை உருவாக்கும் பணி தொடர்ந்துவருகிறது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டில் அந்த அரசியல் யாப்பு திருத்தத்துக்கான போராட்டத்தைத் தமிழகம் தொடங்கிவைக்கவேண்டும்.
ஈகியர்களை நினைவுகூர்தல், தமிழகம் கண்ட மொழிப்போராட்டங்கள் தொடர்பாக ஆவணப்படுத்துதல், வரலாற்றுத் திரிபுகளைக் களைதல், புதிய மொழி உரிமைத் திட்டங்களையும் கோரிக்கைகளையும் உருவாக்கி அவற்றை முன்னெடுத்தல் எனப் பல கருத்துகளை எனது உரையில் முன்மொழிந்திருந்தேன்.
நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அதன் துணைப் பொதுச்செயலர் வேணுகோபால், அதன் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கத் தலைவர் சிவராமன். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி, சீவானந்தம், மக்கள் இணையத்தின் சார்பில் அதன் அமைப்புச் செயலர் தாலின், தாண்டவமூர்த்தி, சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் திருமலை தமிழரசன், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் இராசுகுமார் பழனிசாமி, இந்திய மாணவர் இசுலாமிய இயக்கத்தின் சையத்து அபுதாகீர், பீர் முகமது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் முத்து கார்த்திக்கு, கொற்றவை இலக்கியச் சங்கத்தின் இரா.. மருதுபாண்டியன், கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் சீதையின் மைந்தன் ஆகியோர் அமைப்புகள் சார்பில் கலந்துகொண்டார்கள்.
முற்போக்கு எழுத்தாளரும் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின் தளகர்த்தர்களில் ஒருவரான பா.செயப்பிரகாசம், ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வர், கணித்தமிழ் நிபுணர் மணி மணிவண்ணன், கனடாவிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் இரா. செல்வகுமார், தமிழ் உரிமைச் செயல்பாட்டாடளரும் வழக்கறிஞருமான அங்கயற்கண்ணி, இதழாளர்கள் விட்ணுபுரம் சரவணன், இராதிகா சுதாகர், கெளரி, மின்மினி இதழின் ஆசிரியர் தேவிகாபுரம் சிவா, சமூகச் செயல்பாட்டாளர் முத்துராமன், சியார்சு, ஆற்றலரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
மொழி உரிமைப் போரின் 50 ஆண்டை எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து ஒவ்வொருவரும் பல கருத்துகளை முன்வைத்தார்கள். அவற்றைக் குறித்துக்கொண்டிருக்கிறோம். இதைப் போலவே கோவையில் 7 ஆம் நாளும் மதுரையில் 14 ஆம் நாளும் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களின் பங்களிப்புகளையும் தொகுத்துக் கொள்ளவுள்ளோம். (இவற்றுக்குத் தனி முகநூல் நிகழ்வு வெளியாகும்).
இத்துடன், பல்வேறு இயக்கங்களின் தலைமைகளைச் சந்தித்து இறுதியில் அனைத்தளாவிய கலந்துரையாடல் ஒன்றை மீண்டும் ஒருமுறை சென்னையில் கூட்டவுள்ளோம். அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
மொழி உரிமைச் செயல்பாட்டுக்காக ஒரு கூட்டமைப்பு வேண்டும் என்பதிலும் இந்த ஆண்டு முழுவதிலும் நாம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்பதிலும் குறிப்பாகக் கல்வித்துறையில் நமது கவனத்தைச் செலுத்தவேண்டும் என்பதிலும் அனைவரும் கருத்தொருமித்தனர்.
எல்லாச் செயல்பாடுகளையும் நோக்கங்களையும் பணிக்குழுக்களாகப் பிரித்து உடனடித் தேவை, வாய்ப்புக்கூறு அடிப்படையில் முன்னுரிமை அளித்துச் செயல்படவேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தோம். அதன் அடிப்படையில் மொழி உரிமை ஆதரவாளர்கள் பல்வேறு குழுக்களாக இணைந்து கோரிக்கைகளையும் தீர்வுகளையும் தொகுக்கவேண்டும். அவற்றை எல்லாம் இணைத்து ஒரு பொதுக்கோரிக்கை அடிப்படையிலான மாநாடுகளையும் போராட்டங்களையும் பின்பு அறிவிக்கவேண்டும்.
தனி இணையத் தளம் ஒன்றையும் முகநூல் பக்கம் ஒன்றையும் தொடங்கி விரைவில் இதைத் தொடர்வோம். நான்கு கலந்துரையாடல்களும் முடிந்த பிறகு மாபெரும் மொழி உரிமை இயக்கம் ஒன்றை இந்தச் சமூகம் காணும் என உளமார நம்புகிறோம்.
நேற்றைய நிகழ்வைத் தொடர்ந்து இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. இரா. செழியன் அவர்களை நானும் தமிழ்நாடு மாணவர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நெறியனும் சந்தித்தோம். முன்முயற்சி குறித்து கேள்விபட்ட அவர் மிகவும் மகிழ்ந்தார். தமிழையும் பிற மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழிகளாக்கும் மொழி நிகரமை மற்றும் உரிமை சட்டமுன்வரைவு (Language Equality and Rights Bill) தொடர்பாக அறிவுரையையும் வழிகாட்டலையும் பெறவேண்டும் என்பதற்காகவும் அவரது நாடாளுமன்றப் பட்டறிவுகளை அதற்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் அவரை நாடினோம். இந்தத் தள்ளாத அகவையிலும் அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். மிகுந்த உற்சாகத்துடன் பயணத்தை நாம் தொடர்வதற்கான தெம்பையும் அளித்தார்.
தோழமையுடன்
செ.ச.செந்தில்நாதன்
9884155289
Leave a Reply