திருவள்ளுவர் சிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் மாகாணக் கல்வி அமைச்சின் ஊடாகக் கல்வி அமைச்சில்  ஆடி 10, 20417 / 25.07.2016 மாலை 3.00மணிக்கு வழங்கப்பட்டன.  தமிழ் நாட்டில் உள்ள வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சி.சந்தோசம் இந்த 16 சிலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன், வி.சி.சந்தோசம்  முதலான பலரும் கலந்து கொண்டனர்.

இந்தத் தேசிய நிகழ்வில் பண்டாரவளை மத்திய கல்லூரி, அட்டன்  ஐலன்சு மத்தியக் கல்லூரி, தெரனியக்கலை கதிரேசன் மகாவித்தியாலயம், இரக்குவானை பரியோவான் மகா வித்தியாலயம், நாலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி, மாத்தளை இந்துக் கல்லூரி, தம்பிலுவில் மத்தியக் கல்லூரி அம்பாறை, இராமநாதன் இந்துக் கல்லூரி கொழும்பு, புத்தளம் இந்துக் கல்லூரி, மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி, முல்லைத்தீவு முல்லியவளை வித்தியாநந்தா கல்லூரி, வவுனியா புளியங்குளம் ம.வி, கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம், தென்மராட்சி கலை மன்றம் சாவகச்சேரி, மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம்,கட்டபறிச்சான் தமிழ் ம.வி ஆகியவற்றுக்கு இந்த சிலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

திருவள்ளுவருடைய குறள்களையும் அதனை அடியொட்டி மாணவர்கள் செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் முகமாகவே இந்தச் சிலைகள் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மீதமாகவுள்ள பாடசாலைகளுக்கும் இந்தச் சிலைகளை வழங்க ஏற்பாடு செய்ய முடியுமா எனச் சிந்தித்து வருகின்றோம்.

இந்தச் சிலைகளை அன்பளிப்பாக வழங்கியதன் மூலம் தமிழ் நாட்டிற்கும் எமது நாட்டிற்கும் இடையிலான நட்பு இன்னும் வலுப்பெறும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் மேலும் தெரிவித்துள்ளார். இப்பொழுது 16 சிலைகளும் கல்வி அமைச்சின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்

தரவு: பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02