ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! – இராமதாசு
[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு; இறந்தவர் தன் மகன் பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்; முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு; வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு; நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம். – ஆசிரியர்]
ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! – இராமதாசு
“மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு ஊரில் உள்ள முகாமைச் சேர்ந்த இரவிச்சந்திரன் என்ற ஏதிலியர் அலுவலர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கித் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் திகைப்பும், வருத்தமும், துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த ஏதிலியர்களின் உயிரைக் காக்கத் தவறியதற்காகத் தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-
தமிழக ஆட்சியாளர்கள், சில அதிகாரிகள் ஆகியோரின் மனிதநேயமற்ற அணுகுமுறைதான் இலங்கை ஏதிலியர் இரவீந்திரனின் தற்கொலைக்குக் காரணம் ஆகும். கூத்தியார்குண்டு முகாமிலுள்ள ஏதிலியர்களைக் கணக்கெடுக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முகாமில் நேற்றுக் கணக்கெடுப்புக்காகச் சென்ற வருவாய் அலுவலர் ஒருவர், இரவீந்திரன் முகாமில் இல்லாதது குறித்து உசாவியுள்ளார் (விசாரித்துள்ளார்). அப்பொழுது அங்கு வந்த இரவீந்திரன் உடல்நலம் பாதித்த பேரனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்ததால் காலத்தாழ்ச்சியானதாகக் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அலுவலர், இரவீந்திரனின் பெயரை ஏதிலியர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். “இப்படிச் செய்தால் நாங்கள் எப்படி வாழ முடியும்” என்று இரவீந்திரன் கேட்டபொழுது, “வாழ வழியில்லை என்றால் மின்சாரக் கம்பத்தில் ஏறித் தற்கொலை செய்து கொள்” என்று திமிராகக் கூறியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த இரவீந்திரன் அங்கிருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, மின் கம்பியைக் கால்களால் மிதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
அரசின் தவறான அணுகுமுறையால் ஏதிலியர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது இது முதல் முறையில்லை. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள ஏதிலியர்கள் முகாமில் ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டும், விளக்கம் தெரியா(மருமமான) முறையிலும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எந்த உசாவலும் (விசாரணையும்) நடத்தப்படவில்லை.
காவல்துறையினரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் சசிகரன் என்ற ஏதிலியர் நஞ்சு அருந்தித் தற்கொலைக்கு முயன்றார். செந்தூரன் என்ற ஏதிலியர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் பல முறை சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் அவரது போராட்டத்துக்குப் பணிந்து ௧௭ (17) ஏதிலியர்கள் விடுதலை செய்யப்பட்டபொழுதிலும், மீதமுள்ள ஈழ ஏதிலியர்கள் மீதான கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
போர் முதலான காரணங்களால் தஞ்சம் தேடி வரும் ஏதிலியர்களை உள்நாட்டுக் குடிமக்களைப் போல நடத்த வேண்டும் என ஐ.நா கூறுகிறது. ஆனால், ஈழத் தமிழ் ஏதிலியர்களின் நலனுக்காகச் சட்டம் கூடத் தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை”
இவ்வாறு இராமதாசு தன் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
Leave a Reply