உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு – வி.உருத்திரகுமாரன்
உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம்
செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ?
தலைமையாளர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !
உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.
குறிக்கப்பட்ட இலக்குடன் யூலை 15வரை ஈட்டப்பட்டுள்ள 12 இலட்சம் கையெழுத்துகள் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தலைமையாளர், இக்கையெழுத்து இயக்கம் செயன்முனைப்பு குறித்து விரிவான அறிக்கையொன்றினை உலகத் தமிழர்களுக்கு விடுத்துள்ளார்.
அறிக்கையின் முழுவடிவம் :
சிறிலங்கா அரசைப்பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கு நிகரான ஒரு பன்னாட்டு உசாவல் மன்றில் நிறுத்தக்கோரி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கிய ஒரு பேராயிரம்(மில்லியன்) கையெழுத்தியக்கம் தனது இலக்கினை எட்டியிருப்பது உலகத் தமிழ் மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது.
தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டத்தை அனைத்துலகமயப்படுத்துவதிலும், உலகெங்கும் வாழும் தமிழ்மக்களையும், நீதிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலகக் குடிமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும், ஈழத் தமிழர் தேசத்தின் நீதிக்கான போராட்டத்தில் ஓரணியில் இணைப்பதிலும் இக் கையெழுத்தியக்கம் காத்திரமான பங்கை வகித்திருக்கிறது.
இக்கையெழுத்தியக்கம் வெற்றிபெற உழைத்த அனைத்து உணர்வாளர்களினதும், இதில் பங்கு கொண்ட அனைத்து மக்களினதும் கரங்களை நாம் இத் தருணத்தில் தோழமையுணர்வுடன் பற்றிக் கொள்கிறோம்.
இக் கையெழுத்தியக்கத்தில் படிவங்களில் கையொப்பம் இட்டவர்கள் உட்பட ஏறத்தாழ 12 இலட்சம் மக்கள் உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்து இதுவரை பங்கு பற்றியிருக்கிறார்கள். இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து பங்குபற்றியோர் தொகை 6 இலட்சத்தையும் தாண்டியிருக்கிறது. தமது தொப்புள்கொடி உறவுகளுக்காக நீதி கோரும் துடிப்புடன் தமிழக மக்கள் தொடர்ந்தும் இவ் இயக்கத்தில் தம்மை இணைத்து வருகிறார்கள். கையெழுத்தியக்கம் தமிழகத்தின் சிற்றூர்கள் தோறும் விரிவு கண்டு மக்கள் மயப்பட்டிருக்கிறது.
ஈழத்தாயகத்தில் இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டும் கையெழுத்தியக்கத்துடன் இது வரை தம்மை இணைத்துள்ளனர். வெளிப்படையான பரப்புரைகளைச் செய்ய முடியாதவொரு சூழலிலும், அரசியல் தலைவர்கள் இக் கையெழுத்தியக்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட முடியாதவொரு நிலையிலும், ஓர் இலட்சம் வரையிலான மக்கள் இக் கையெழுத்தியக்கத்தில் பங்குபற்றியிருக்கிறார்கள். இது ஈழத்தமிழ் மக்கள் எல்லாரும் சிங்களத்தின் இனஅழிப்புக்கெதிராக நீதி கோரும் வேட்கையுடன் உள்ளார்கள் என்பதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கிலும் மக்கள் உற்சாகத்துடன் இவ் இயக்கத்தில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கிய இக்கையெழுத்தியக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இதை மக்கள் இயக்கமாக மாற்றியதில் தமிழகத்துக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. தமிழகத்தில் இக் கையெழுத்தியக்கத்தை முன்னின்று நடத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மைய இணைப்பாளர் பேராசிரியர் சரசுவதி தலைமையிலான தோழர்கள், அரசியற்கட்சிகள், மாணவர் இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள், ஊடகவியலாளர்கள், நட்சத்திரங்கள் உள்ளடங்கலான திரைப்பட, நாடகக் கலைஞர்கள், சட்டவாளர்கள், உணர்வாளர்கள், முகநூல் பதிவர்கள் எனப் பன்முகப்பட்ட பங்குபற்றலுடன் இக்கையெழுத்தியக்கம் மக்கள் மயப்பட்டிருக்கிறது.
கையெழுத்து திரட்டச் சென்ற தோழர்களை மக்கள் மிக வாஞ்சையுடன் வரவேற்றுத் தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
தமிழகத்தில் சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கோரும் கோரிக்கைக்கு வலுவான ஆதரவு இருப்பது, இந்திய அரசுக்கும் இது குறித்து தார்மீக அழுத்தத்தை வழங்கத் துணைசெய்யும். ஈழத் தாயகத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாத வகையில் இயங்கிய அனைத்து உணர்வாளர்களும் இக்கையெழுத்தியக்கம் வெற்றிபெற தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது உழைத்துள்ளனர். ஏனைய நாடுகளிலும் மக்கள் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், முகநூல் பதிவர்கள், உணர்வாளர்கள் எனப் பரவலான பங்குபற்றலுடன் இக் கையெழுத்தியக்கம் தனது இலக்கினை அடைந்திருக்கிறது.
நாம் இக்கையெழுத்தியக்கத்தைத் தொடங்கியமைக்குச் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு. சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின் தமிழ் மக்களுக்கெதிரான போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள், இனஅழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளுக்கு மாற்றாக, எல்லாவற்றையும் உள்நாட்டு விசாரணையாகச் சுருக்கும் நிலையைத் தோற்றுவிக்கக் கூடிய ஆபத்தைக் கொண்டிருந்தமையினை நாம் உணர்ந்தோம்.
உள்நாட்டுவிசாரணையினை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத காரணத்தினால் அனைத்துலக நிபுணத்துவத்துடன் கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினைப் பரிந்துரை செய்து, அதனை ஒரு கலப்புப் பொறிமுறையாகச் சித்தரிக்கக்கூடிய நிலைமையும் உருவாகலாம் என முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் புறந்தள்ள முடியாதவையாகவே இருந்தன.
எம்மைப் பொருத்தவரையில் சிறிலங்காவில் எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையோ அல்லது ‘கலப்புப் பொறிமுறையோ’ நீதியை நிலைநிறுத்தப் போவதில்லை. அதற்கான சூழலோ அல்லது அரசியல் விருப்போ சிறிலங்காவில் இல்லை.
இத்தகையதொரு சூழலில் அரசுஅற்ற தேசமாக இருக்கும் தமிழ் மக்கள், தமதும் உலக மக்களதும் பலத்துடன்தான் தமிழின அழிப்புக் குறித்தும், அது தொடர்பான அனைத்துலக விசாரணைக் கோரிக்கை குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையினதும் அனைத்துலக அரசுகளினதும் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது.
நீதியின்பாற்பட்டு அனைத்துலக சமூகம் இலகுவில் மறுத்தொதுக்கமுடியாத கோரிக்கையினை ஒரு பேராயிரத்திற்குக் குறையாத மக்கள் ஆதரவுடன் முன்வைக்கும்போது தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு இது ஒரு வலுவான அடிப்படையைத் தரும் என்று நாம் கருதினோம். இதன் காரணமாகவே இக் கையெழுத்தியக்கத்தைத தொடங்கினோம். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தினை உருவாக்கிய உரோம் பறைசாற்றலில் சிறிலங்கா கையெழுத்து இடவில்லையென்றும், இதனால் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபைக்குரிய செய்தி என்றும், சிறிலங்காவுக்கு ஆதரவாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த அதன் ஆதரவு நாடுகள் உள்ளன என்றும்; இதனால் இக் கையெழுத்தியக்கம் பயன்தராது என்றும் சிலரால் கருத்துகள் முன்வைக்கப்படுவதனை நாம் அவதானித்துள்ளோம். சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பான அனைத்துலகப் பொறிமுறையில் உள்ள சிக்கல்களை நாம் அறிவோம். இது இலகுவானதொரு நடைமுறையல்ல என்பதும் எமக்குத் தெரியும். இது காலம் எடுக்கக்கூடியதொரு நடைமுறை என்பதனையும் நாம் அறிவோம்.
இந்த நடைமுறையில் நாம் முதலில் செய்ய வேண்டியது உலக மனிதாபிமான விழுமியங்களின் அடிப்படையிலும், அறத்தின் அடிப்படையிலும், அரசுகளால் மறுத்தொதுக்க முடியாத கோரிக்கையினை வலுவான மக்கள் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் முன் கொண்டு செல்வதுதான்.
எமது கோரிக்கையை, நிலைப்பாட்டை நாம் முதலில் தெளிவாகவும் வலுவாகவும் வைத்தாக வேண்டும். தொடர்ச்சியாக இதற்கு நாம் ஆதரவினைத் திரட்ட வேண்டும். இக் கோரிக்கைக்கு அரசுகள் உடனடியாக ஆதரவு தரத் தயங்கினும் எமது கோரிக்கையில் உள்ள நியாயத்தன்மையினை அவர்களால் மறுக்க முடியாது.
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை இனி மூடி மறைக்க முடியாத அளவுக்கு அது வெளிப்பட்டு விட்டது. இதற்கு எதிராக நீதி வழங்காமல் இதனை இனி மூட முடியாது. அப்படி மூடவும் நாம் விட மாட்டோம். சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறையினாலோ அல்லது ‘கலப்புப் பொறிமுறையினாலோ’ நீதி வழங்கப்படமுடியாது என்பதனை அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் விரைவில் உருவாகும். அவ்வேளையில் இது ஒரு அனைத்துலக விசாரணைக்குப் போக வேண்டிய நிலையை அனைத்துலக சமூகத்துக்கு ஏற்படுத்தும். வல்லரசுகளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவதில்லை. சூடான் விடயத்தில் சீனா வீட்டோவை பயன்படுத்தவில்லை. மேலும் தற்போதய உலகச் சூழலில் அரசுகளின் அனைத்துலக உறவுக் கொள்கைளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறந் தழுவிய விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகத் தம்மை ஒழுங்கமைத்துள்ள உலக சிவில் சமூகத்துக்கு அதிகரித்து வருவது எமது கோரிக்கையினை வலுப்படுத்த உதவும். இந்த சிவில் சமூக இயக்கத்தின் தர்க்கரீதியான வளர்ச்சி எமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும் வாய்ப்புக்களையும் கொண்டிருக்கிறது உண்மையே. இவை எல்லாவற்றையும் மறுப்பது ஒன்றும் சாத்தியமில்லை என்று நாம் வாளாதிருப்பதால் காரியம் எதுவும் ஆகப் போவதில்லை.
மேலும் இக்கையெழுத்து இயக்கத்தின் பயன்பாடு என்பதனை அரசுகள் எடுக்கும் முடிவுகளில் இருந்து மட்டும் நாம் மதிப்பிடக்கூடாது. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை மேலும் அனைத்துலக மயப்படுத்தவும் இப் போராட்டத்துடன் உலகத் தமிழ் மக்களை உணர்வுரீதியாக நெருக்கமாக இணைத்து வைப்பதற்கும் இக் கையெழுத்தியக்கம் மிகவும் பயன்பட்டு வருகிறது. ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் வெற்றி பெறுவதற்கு உலகத் தமிழ் மக்கள் ஒரு வலுமையமாக ஒன்றிணைவது இன்றியமையாததாகவுள்ள ஒரு சூழலில் ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துடன் உலகத் தமிழ் மக்களும் உலக சிவில் சமூகமும் கைகோத்து தமிழ் மக்களின் வலுவை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் இக் கையெழுத்தியக்கம் தந்துள்ளது.
இதுவரை திரட்டப்பட்ட ஒரு பேராயிரத்திற்கும்(மில்லியனுக்கும்) மேற்பற்பட்ட கையெழுத்துகளுடன் எமது கோரிக்கை மனுவை நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளோம். எமது கோரிக்கையை செப்டம்பர் மாதம் வெளிவர இருப்பதாகக் கூறப்படும் சிறிலங்கா தொடர்பான ஐ.நா. அறிக்கையில் கவனத்துக்கு எடுக்குமாறு நாம் கோருவோம். செப்டம்பர் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளிடமும் நாம் இக் கோரிக்கையினை முன்வைத்து ஆதரவு திரட்ட முயல்வோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் உள்நாட்டு விசாரணைக்கோ கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கோ ஆன பரிந்துரை செய்யப்பட்டால் இக் கையெழுத்து இயக்கம் தரும் அரசியல், தார்மீகப் பலத்துடன் உலகக்குடிமைச் சமூகத்தின் ஆதரவைத் திரட்டித் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடரும்.
அன்பான மக்களே!
எதிர் வரும் செப்டம்பர் மாதம் கூடும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவைப்பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கு நிகரான ஒரு பன்னாட்டு விசாரணைமன்றில் நிறுத்தக்கோரி நாம் பெரும் பரப்புரையைச் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். இக் காலக்கட்டத்தில் ஈழத் தாயகத்திலும் தமிழகத்திலும் ஏனைய நாடுகளிலும் மக்கள் போராட்டங்கள் கிளர்ந்தெழ வேண்டும். எமது கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாம் வகுத்திருந்த இலக்கை எட்டி விட்டாலும் எமது இக் கையெழுத்தியக்கத்தைச் செப்டம்பர் மாதம் வரை தொடர்வதற்கு முடிவு செய்துள்ளோம். இதனால் இக் கையெழுத்தியக்கத்தை மேலும் வீச்சாகத் தொடர்வதற்கான ஆதரவைத் தங்களிடம் வேண்டி நிற்கிறோம். எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதி எடுத்துக் கொள்கிறோம்.
இலட்சியத்துக்காக உயிர் ஈந்தோர் கனவுகள் எம்மை வழி நடத்தட்டும்! விடுதலையை வென்றெடுக்கும் வரை உலகத் தமிழினம் அணி திரளட்டும்!! இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– நாதம் ஊடகசேவை
Leave a Reply