எழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன?
இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார்.
உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு உவகையுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். எனினும் வழக்கம்போல் மனநோயாளிகள் சிலர் எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பாராட்டிவிட்டு இதற்கான காரணமாகக் கட்சி அரசியலையும் தேர்தலையும் கூறுகின்றனர். காரணங்கள் எவையாயிருப்பினும் நமக்குக் கவலை இல்லை!
தமிழக முதல்வர் புரட்சித்தலைவி துணிவுடன் எடுத்த இம் முடிவு மனித நேயச் செயற்பாடாக உள்ளது. உண்மைக் குற்றவாளிகள் உலவிக் கொண்டிருக்கையில் எழுவரும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றனர். அடைந்த இன்னல்களை ஈடு செய்ய முடியாது என்றாலும், இத் துயரத்தைத் தணிக்கும் வகையில், விடுதலைச் செய்தி அமைந்துள்ளது. எனவே, விடுதலையை வரவேற்பவர்கள் காரணம் குறித்து ஆராய வேண்டா. முழு மனத்துடன் தமிழக அரசைப்பாராட்டி விடுதலை ஆகப்போகிறவர்களை வரவேற்போம்!
அதுவே, முதல்வரின் விடுதலை அறிவிப்பிற்கான நன்றியாக அமையும்.
எழுவரின் அமைதியான மகிழ்வான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அமைத்துத்தர உதவுவதே நம் கடமை! அதில் கருத்து செலுத்துவோம்!
11.02.2045 / 23.02.2014
Leave a Reply