ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! – ஊர்திப்பேரணி
ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்!
அனைத்துக் கட்சி இயக்கங்கள் பங்குபெறும் பேரணி!
செய்யாத குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் இருக்கும் நம் உறவினர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்பயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரிலிருந்து சென்னைக் கோட்டை வரை ஊர்திப்பேரணி!
- 25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்…
- விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்…
- ப.சீ.ந.த.ச. (‘தடா’) சட்டம் பொருந்தாது என முடிவுக்கு வந்த நிலையில் ப.சீ.ந.த.ச.(தடா) ஒப்புதல் வாக்குமூலத்தின் கீழ்த் தண்டித்த முரண்…
- ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த காவல் அதிகாரியே தான் தவறு இழைத்துவிட்டதாகவும், பேரறிவாளன் குற்றமற்றவர் என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பின்பும் தொடரும் சிறைவாச அவலம்…
- பல்நோக்குக் கண்கணிப்புக் குழுவின் (MDMA) உசாவல் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தண்டனை துய்க்கும் கொடுமை…
- வழக்கை உசாவி ஓய்வு பெற்ற அதிகாரிகள் தியாகராசன், இரகோத்தமன், மோகன்ராசு ஆகியோர் உசாவல்(விசாரணை) முறையாக நடைபெறவில்லை எனச் செவ்விகள்(பேட்டிகள்), புத்தகங்கள் வடிவில் வெளிப்படையாக அறிவித்த பின்பும் உடையாத கை விலங்குகள் …
- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே விடுதலை அறிவிப்பு வெளியிட்ட பின்பும் நீடிக்கும் மருமம்…
- தமிழக ச் சட்டப்பேரவையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றிய விடுதலைத் தீர்மானம் அதன் பின்பும் நீடிக்கும் துன்பம்…
எனவே, நீதி காண
வேலூர் சிறை அருகிலிருந்து
சென்னை(கோட்டை)யை நோக்கி…25 ஆண்டுகளாகச் சிறைப்பட்டிருக்கும்
7 தமிழர்கள் விடுதலை கோரி ஊர்திப்பேரணி
வழித்தடம்: வேலூர், காஞ்சி, பூந்தமல்லி, போரூர், கிண்டி, அடையாறு,
பட்டினப்பாக்கம், கடற்கரைச் சாலை, கோட்டை (தலைமைச் செயலகம்)
நாள்: வைகாசி 29, 2047 / 11-6-16, காலை 8.00 மணி
தமிழ் இராசேந்திரன்
இரவிகாளிதாசு
பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்தப் பேரணிக்குத் தமிழக அரசு இசைவு அளித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், அரசியலாளர்கள், திரையுலகினர் எனப் பல தரப்பட்டாரும் பேரணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். பேரறிவாளனின் விடுதலைக்காக நடத்தப்படும் பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விசய் சேதுபதி, ” பேரறிவாளன் 25 வருடங்களாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனைச் சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். ‘இன்று வரையில் தான் குற்றமற்றவன்’ எனப் பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை உசாவிய காவல்அதிகாரியும், ‘பேரறிவாளன் குற்றமற்றவர்’ எனச் சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாழ்ச்சி என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு இசைவு கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஊர்திப்பேரணியில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்களுக்குப் பேரறிவாளன் வேண்டுகோள்
அனைவரும் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், பாதுகாப்பாகப் பயணத்தை மேற்கொண்டு பேரணியில் எந்தவித விரும்பத்தகா நிகழ்விற்கும் இடந்தராமல் முடித்துத்தரவேண்டும்..
பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்
கீழ் வரும் எண்களை தொடர்பு கொள்ளவும்:
இராமு பழனியப்பன் – 99621 44458
இரவி பாரதி – 99401 61279
நீதிக்குக் குரல் கொடுக்க குற்றம்புரியாதவர்களை மீட்டெடுக்க…கூடுவோம் வேலூரில்…
கம்பிகளுக்குப் பின்னால்…
கால் நூற்றாண்டாய்…
கை விலங்குகள் உடைக்க…
தமிழகமே ஒன்று சேர்…
அனைவரும் ஒருங்கிணைவோம்!
ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்!
- மக்கள் பெரும் படையாகத் திரளட்டும்
மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
எழுவர் விடுதலைக்கு வழி வகுக்கட்டும்
சாதி மத வேறுபாடுகளை மறந்து
அரசியல் மாறுபாடுகளை மறந்து
தமிழ் இன உணர்வுடன் அனைவரும் ஓரணியாய்த் திரள்வோம்.
மக்களால் மட்டுமே எழுவர் விடுதலை பெற முடியும்
மக்கள் எந்தளவு பெரும் படையாக அணி திரள்கிறார்களோ
அந்தளவு விரைவாக எழுவரை விடுதலை செய்ய முடியும்.
இதை உணர்ந்து அனைவரும் திரள வேண்டிய தருணம் இது.
மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது
மக்கள் ஆற்றலே மகத்தான ஆற்றலே
மக்களால் மட்டுமே எழுவரை விடுதலை செய்ய முடியும்.
– பாலன் தோழர்
தமிழகத்தின் நீதியின் பெயரிலான அணிதிரண்டு எழும் போராட்ட உணர்வுக்குக் கிடைத்த இன்னொரு அரிய வாய்ப்பு…
தமிழகத்தின் ஒற்றுமையைப் பார்க்க எமக்கு கிடைத்த மற்றுமொரு களம்!
வரலாற்று எழுச்சியைப் படைக்க தமிழக மக்கள் பிரிவினைகள் கடந்து அணி திரண்டு ஒன்று பட்டு எழுவர் நீதிக்காக – விடுதலைக்காகப் போராட முன் வர வேண்டும். செய்வார்களா?
வரலாற்றைப் படியுங்கள்! வரலாற்றைப் படையுங்கள்!
ஒவ்வொரு மனிதரும் மாற்றங்களை உருவாக்கும் வரலாற்றுப் புள்ளிகளாக உருமாறி நீதி பிழைத்த மக்களுக்கு நீதியை மீட்டுக் கொடுக்க போராடுவது மாந்த நேயத்தின் அறமுறைக் கடனாகும்.
காலம் கையில் தந்த கடனை மாபெரும் வரலாற்று எழுச்சியாகப் போராடி ஆற்றிடுமா அன்னைத் தமிழகம் ?
அநீதியாக இந்தியத்தால் வஞ்சிக்கப்படும் எழுவருக்கு தமிழகத்தால் நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும்! மக்களால் மட்டுமே வரலாற்றை மாற்ற முடியும்! விடுதலையை வென்றெடுக்க முடியும்.
- அயலகத்தமிழர்கள் சார்பில் செந்தமிழினி பிரபாகரன்
வருகிறவர்கள் எல்லாரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். வண்டியைப் பொறுமையாக ஓட்ட வேண்டும். உடல்நலம்குன்றிய தோழர்கள் வண்டியை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டுப் பின்னால் உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள் …….
இப்படி எல்லாம் வேண்டுகோள் விடுத்தது காவல்துறை அல்ல …..
வேறு யார் இவ்வளவு அக்கறையாக வீட்டில் இருக்கும் தாய்போலச் சொன்னது என்கிறீர்களா?
நமது அண்ணன் பேரறிவாளன் அவர்கள் தான்
இத்துணை அன்பு வேண்டுகோள்களை முன்வைத்து இருக்கிறார்…..
கால் நூற்றாண்டுத் தனிமைச் சிறைக்கொடுமையைக் கூடப் பொருட்படுத்தாமல் நம்முடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டு பேசும் தன்னலமற்ற நம் வீட்டு உடன்பிறந்தவனின் முகம் காண அவர் விடுதலையை வென்றெடுக்க, பிற அறுவரின் விடுதலையைக் காண வாருங்கள்! ……
பயணத்தில் சந்திப்போம்
சண்முகப்பிரியன் சிவகுமார்
(பெரும்பான்மைக் கட்சிகளும் இயக்கத்தினரும் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். பலரும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.)
Leave a Reply