ஒட்டன்சத்திரம் அருகே கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆறுமுகம், பெருமாள், மனோசு குமார் ஆய்வு மேற்கொண்டனர்
அப்போது, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், ஆயுதங்கள், பானைகள், ஓடுகள் என மொத்தம் 64 கற்காலக் கருவிகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியில், அஃதாவது ஏறத்தாழ 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 6 கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய வேட்டை ஆயுதங்களாகும். மேலும், புதிய கற்காலத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த 58 கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 26 செவ்வக வடிவக் கருவிகளும்,19 சதுர வடிவக் கருவிகளும்,10 நீள்செவ்வக வடிவக் கருவிகளும் அடங்கும்.
புதிய கற்காலத்தின் தொடக்கமான, ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு விதமான அளவுகளில் வேட்டையாடும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில், சதுர, செவ்வக வடிவிலான கருவிகளை எடைக் கற்களாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும், மூலிகைகளை அரைக்க விசிறி போன்ற கருவிகளும், தேய்ப்புக் கல்லும் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் தெரிகிறது.
புதிய கற்காலத்தின் தொடக்கமும், தமிழின் முதல் சங்கக் காலமும் ஏறத்தாழ சமகாலக் கட்டத்தைக் கொண்டிருப்பதால், முதல் சங்கக் காலத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இந்தக் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கலாம்.
ஆராய்ச்சியில், மூன்றாம் சங்கக் காலத்தைச் சேர்ந்த பானை, ஓடுகள், ஆட்டுக் கற்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பாறையில் 12 கற்குழிகள் (உரல்கள்) காணப்படுகின்றன. இவை, சங்க கால மக்கள் தினை, கேழ்வரகு, சாமை போன்ற உணவு தானியங்களை குத்தவும், அரைக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.
இதுபோன்ற கற்குழிகளை உருவாக்கிப் பயன்படுத்தும் வழக்கம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்துள்ளது.
எனவே, ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில் பச்சை மலையில் மனிதர்களின் நடமாட்டமும், வாழ்க்கையும் பழைய கற்காலத்திலிருந்தே அதாவது ஏறத்தாழ 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது தெரியவந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
Leave a Reply