கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்!
கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற
தன்னம்பிக்கையின் சிகரம்!
அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர்!
முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர்!
வராததை வரவழைத்த வெற்றி மனிதர்!
கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும்! அதற்கான செயலும் இருக்க வேண்டும்! உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்! நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான்! – இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்திய வருமான வரித் துறையின் இணை ஆணையாளர் நந்தகுமார், மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறீ சேவுகன் அண்ணாமலை கலை-அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். இந்திய வருமான வரித் துறையின் இணை ஆணையாளர் நந்தகுமார் மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியதாவது:
படிப்பு சடங்காகக் கூடாது!
“நாம் படிக்கும் படிப்பு சடங்கு மாதிரி இருக்கக்கூடாது. என்ன காரணம் என்று தெரியாமல் செய்யும் செயலுக்குப் பெயர் மூடநம்பிக்கை ஆகும். ஏனோதானோ என்று படிக்கக் கூடாது. புரிந்து படிக்க வேண்டும். தெரிந்து படிக்க வேண்டும். கவனித்துப் படிக்க வேண்டும். பள்ளியில் பலகையில் எழுதிப் போடுவதைப் பார்த்து என்னால் எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பாக எழுதுவேன். இதற்கெல்லாம் காரணம் ‘திசுலெக்சியா’ எனச் சொல்லப்படுகிற ‘கற்றல் குறைபாடு’தான் என்று குடிமைப் பணிக்கு(சிவில் சர்வீசு) ஆயத்தமான பொழுதுதான் தெரிய வந்தது. 5ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்து வந்தேன். அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்து முடிப்பதற்குள்ளாகவே நான் பலமுறை மனத்தால் காயப்படுத்தப்பட்டேன். மக்குப் பையன் என்றும் சோம்பேறி என்றும் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டேன். அதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால், தாங்கிக் கொள்ள முடியாதது “இவனோடு சேர்ந்தால் உருப்பட மாட்டீர்கள்” என்று சொல்லி உடன் பயிலும் மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியதுதான்.
இந்தக் கொடுமையால் ஆறாம் வகுப்பிற்குப் போகவும் இல்லை, பள்ளியில் அழைக்கவும் இல்லை. உங்களைப் போன்று படிக்கும் மாணவர்களைப் பள்ளிக்கு வெளியே வாசலில் துயரத்துடன் நின்று 6ஆம் வகுப்புப் படிக்கும்பொழுது பார்த்துக் கொண்டு இருப்பேன். ஆனால், அந்தப் படிப்பைப் புரிந்து படித்து, பள்ளிக்குச் செல்லாமலேயே இன்று வெற்றி பெற்று விட்டேன். எனவே, படிப்பு சடங்காக இருக்கக் கூடாது!
வெற்றிக்கான காரணம்
எண்ணூறாயிரம்(8 இலட்சம்) பேருடன் போட்டியிட்டு, எங்கள் அணியில்(பேட்ச்சில்) வெற்றி பெற்றவர்களில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வந்த உடன், எனது ஒளிப்படம் செய்தித்தாளில் வந்த பிறகுதான் எனது தெருவிலே, நான் படித்து உள்ளேன், என்னால் படிக்கவும், எழுதவும் முடியும் என்பதே தெரியும். உங்கள் வெற்றியின் மூலம் உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். என்னைத் திரும்பிப் பார்த்தது; பார்த்துக் கொண்டு உள்ளது. சிலர், படிக்கும்பொழுதே ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். “நீ நன்றாக வருவாய்” என்பார்கள். “எனக்கு அப்பொழுதே தெரியும்; இவன் இப்படி ஆவான் என்று” எனச் சொல்வார்கள். அவற்றை நம்பாதீர்கள்! என்னை யாரும் அப்படிச் சொல்லவில்லை. ஆனால், இன்று நான் அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும் (நிருவகிக்கும்) அரசுப் பணியில் உள்ளேன். இந்திய அரசில் தனித் துறை உருவாக நானும் ஒரு காரணமாக இருந்துள்ளேன். இன்று என்னுடைய அட்டையைக் காட்டினால் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கதவுகளும் திறக்கும். அதற்கு ஒரே காரணம் என்னுடைய படிப்பு மட்டும்தான். என்னை யாரும் சிறிய வயதில் “இப்படி வருவாய்” என்று சொல்லவில்லை. என் நண்பர் நான் சிறு வயதாக இருந்தபொழுது, கம்மியர் (மெக்கானிக்) கடையில் வேலை பார்த்தபொழுது இருந்த அந்தோணி. அவர் இப்பொழுதும் அதே கடையில்தான் உள்ளார். அவருக்கு உ.வ.ப1., (ஐ.ஆர்.எசு.) என்றால் என்ன என்று தெரியாது. என் இன்றைய நண்பர்கள் இந்திய நாட்டின் தலைமையமைச்சர் (பிரதமர்), குடியரசுத்தலைவர். இந்த வெற்றிக்குக் காரணம், எனக்கு வராது என்று சொன்ன படிப்பைப் பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய நான் விரட்டிச் சென்று அதனை வர வைக்க வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்துப் படித்தது. சிறிது படித்த எனக்கே இவ்வளவு வெற்றி என்றால், நன்றாக இருக்கக்கூடிய நீங்கள் அனைவரும் இன்னும் நன்றாகப் படிக்கலாம்; மிகப் பெரிய பதவிகளுக்குச் செல்லலாம்.
உ.வ.ப., தேர்வில் நான் வெற்றி பெற்றபொழுது என்னுடன் பணி ஆணை பெற வந்த அனைவரும் தாங்கள் இ.மே.ப2., (ஐ.ஐ.எம்.), இ.தொ.ப3., (ஐ.ஐ.டி.) போன்றவற்றில் படித்ததாகச் சொன்னார்கள். முதுநிலை மெய்யியல் (எம்.பில்) படித்ததாகப் பெரிதாகப் பேசினார்கள். ஆனால், சென்னை ஆவடியில், விளிம்புக் குடும்பத்தில் பிறந்து, ஒவ்வொரு நகர்விலும் தடுக்கி விழுந்து, பள்ளிக்கே செல்லாமல், பள்ளியினால் புறக்கணிக்கப்பட்ட நான் அவர்களை விட முதல் மாணவனாக வெற்றி பெற்று, கிழிந்த அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு, கம்மியர் கடையில் எடுபிடி வேலை பார்த்தவனும் வெற்றி பெற முடியும் என்று சொல்வதற்குக் கடவுள் எனக்கு வாய்ப்புக் கொடுத்ததை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.
அப்பா படித்திருக்க வேண்டும், அம்மா படித்திருக்க வேண்டும் எனத் தேவை இல்லை. இ.ஆ.ப4 (ஐ.ஏ.எசு) போன்ற குடிமைப் பணித் தேர்வுகள் எழுதுவதற்கு இளங்கலைப் பட்டம் ஒன்று இருந்தால் போதுமானது. நீங்கள் பெரிய படிப்புகள் எதுவும் படிக்கத் தேவை இல்லை. படிப்பதைப் புரிந்து படித்தால் போதும். எப்படி நீங்கள் கையில் வைத்துள்ள ஊதுபையில் (பலூனில்) காற்றை ஊதுகிறீர்களோ அதே மாதிரிதான் உங்கள் வாழ்க்கையும் அமையும். எனவே, படிப்பதைப் புரிந்து படியுங்கள்! கவனித்துப் படியுங்கள்! உங்கள் ஆளுமையினை வளர்த்துக் கொள்ளுங்கள்!
எளிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, ‘நான் இருக்கும் இடத்திலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் மட்டுமே என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்’ என்று கனவு காணாதீர்கள்! உங்கள் கனவுகளைப் பெரியதாக்குங்கள். நீங்கள் எழுதும் போட்டித் தேர்வுகளில் பெரிய பதவிகளுக்குப் புரிந்து படித்துத் தேர்வு எழுதுங்கள். தமிழ்நாடு இல்லை, இந்தியா இல்லை, உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றியாளராக மாறுங்கள்! அதற்கு நீங்கள் நினைக்கும் பெரிய கனவைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருங்கள்! விடாமல் அதனைத் துரத்தி ஓடுங்கள்! நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதனை நினைக்கிறீர்களோ அவ்வளவு தொலைவுக்கு அது உங்களை நோக்கி வரும். அதற்கான வாய்ப்புகள் உங்களுக்குத் தானாகக் கிடைக்கும். நான் கம்மியர் கடையில் வேலை பார்த்தபொழுது எனது சிந்தனை பெரியதாக இல்லை. படித்து வெற்றி பெற வேண்டும் என்று எனது உள்ளுணர்வு சொன்னபொழுது படிப்பதற்கான அனைத்து உதவிகளும் போராடினாலும் கிடைக்கத்தான் செய்தன. எனது எண்ணம் பெரிதாகப் பெரிதாக அதற்கான வாய்ப்புகளும் உதவிகளும் தொடர்ந்து கிடைத்தன. எனக்கு அப்பொழுதுதான், ‘நாம் முயற்சி செய்தால் கண்டிப்பாக உலகம் நமக்கும் உதவி செய்யும். நம்மாலும் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும்’ என்கிற உண்மை தெரிந்தது. நான் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்து விட்டேன். எனவே, உங்களை உலகம் நல்லதற்காகத்தான் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து முயலுங்கள்! கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும்!
வாழ்க்கையில் பெரிய ஆள் ஆவதற்கு, பெட்டிக் கடை வைத்தால் கூட நன்றாகப் பணம் ஈட்டி விடலாம். பணம் இன்று இருக்கும், நாளை போகும். ஆனால், படிப்பு மட்டுமே உங்களை நல்ல நிலைமைக்குக் கொண்டு செல்லும். இன்று நான் பல ஆயிரம் பேருக்கு இணையம் வழியாக இ.ஆ.ப., ஆவதற்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டுள்ளேன். எனது அரசுப் பணியில் மிகப் பெரிய செயல்களை என்னால் செய்ய முடிகிறது. நன்றாக எழுத வராத, படிக்க வராத நான் திரும்பத் திரும்ப எனக்கு வராதவற்றைத் தேடித் தேடிச் சென்று செய்தேன். வராததை வர வைத்தேன். நல்ல நிலையில் ஊர்ப்(கிராமப்) பகுதியில் உள்ள நீங்கள் “எனக்கு அஃது இல்லை, இஃது இல்லை, அப்பா சரியில்லை, அம்மா சரியில்லை” எனப் புலம்பிக் கொண்டு இருக்காமல் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள். கொஞ்சமாகப் படித்த எனக்கே இவ்வளவு வெற்றி கிடைத்துள்ளபொழுது உங்களுக்கு இன்னும் நிறைய வெற்றிகள் கிடைக்கும். எப்பொழுது என்றால் நல்லது வராதபொழுது அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதனை உங்களுடையது ஆக்கிக் கொள்ளும்பொழுதுதான் வெற்றி கிடைக்கும். என்னுடைய பெயரைக் கூட எழுதத் தெரியாத, படிக்கத் தெரியாத நிலையில் இருந்த நானே அருவினை ஆற்றியிருக்கிறேன் (சாதித்திருக்கிறேன்)! நீங்களும் அருவினையாற்றலாம்! இதற்காகத்தான் ஆண்டில் முந்நூறாயிரம் (மூன்றரை இலட்சம்) மாணவர்களைச் சந்தித்து ஊக்கத்துடன் நம்பிக்கை ஊட்டுகிறேன்” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னை வருமான வரித் துறையின் இணை ஆணையாளராக உள்ள நந்தகுமாருடன் சென்னையைச் சார்ந்த கோபிநாத்து, அரங்கநாதன் ஆகியோரும் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் வெங்கடராமன், காயத்திரி, சாய் புவனேசுவரன், செகதீசுவரன், தனலெட்சுமி, இராசேசுவரி, சின்னம்மாள், திவ்வியசிறீ, சீவா, நித்திய கல்யாணி, பரமேசுவரி ஆகியோர் கேள்விகள் கேட்டு விடை பெற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர் செல்வ மீனாள் நன்றி கூறினார்.
கற்றல் குறைபாடு (திசுலெக்சியா)
இந்திய வருமான வரித்துறை இணை ஆணையாளர் நந்தகுமார் அவர்கள் கற்றல் குறைபாடு பற்றி மேலும் தெரிவித்ததாவது:
“இது குழந்தைப் பருவத்தினருக்கு ஏற்படக்கூடிய குறைபாடு. பள்ளிக்கூடம் போகும்பொழுதுதான் இது தெரிய வரும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எழுத்துகளைப் படிக்கவும், அவற்றிற்குரிய பலுக்கல்களைத் (உச்சரிப்புகளை) தொடர்புபடுத்திப் பார்க்கவும் இடர்ப்படுவார்கள். ஆனால், இது மனநோய் இல்லை. உடன் பயிலும் மாணவர்களைப் போல எழுத, படிக்க இயலாமல் தடுமாறுவார்கள். இதனால் மக்குப் பையன் எனவும், சோம்பேறி எனவும் ஒதுக்கப்படுவர். எழுத்துகள், எண்கள், சொற்கள் இவற்றைப் படிப்பதிலும் பகுத்துப் பார்ப்பதிலும் பல குழப்பங்கள் இருக்கும். முழுமையான சொற்றொடர்கள் அமைத்துப் பேச மிகவும் சிரமப்படுவார்கள். இவர்களின் குறைகளைச் சரியாகக் கண்டறிந்து, சரியான முறையில் கற்பித்தால் குமுகாயத்தில் (சமுதாயத்தில்) சிறப்பான இடத்தைப் பிடிப்பார்கள். ஆனால், இவர்களைக் கண்டறிந்து சரியான முறையில் கற்றுத் தர யாருக்கும் பொறுமையும் இல்லை, நேரமும் இல்லை. ‘தாரே சமீன் பர்’ படத்தில் சிறுவனுக்கு இருக்குமே, அதே சிக்கல்தான். இது நோயில்லை; உளவியல் சிக்கலும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சிக்கல். இதற்கு மருத்துவத்துறை இன்னும் தீர்வு கண்டுபிடிக்கவில்லை” என்றார்.
இப்பேர்ப்பட்ட குறையை வென்று தான் அருவினையாற்றியது எப்படி என்று அவர் மேலும் விவரித்ததாவது:
கம்மியர் கடைப் பையன் இன்று வருமான வரித் துறை இணை ஆணையாளர்
பள்ளியில் படிக்க வாய்ப்பில்லாததால் “படிப்புதான் வரவில்லை. குலுக்கல் பரிசுச் (lottery) சீட்டு விற்றாவது பிழைத்துக் கொள்” என்று ஆவடியில் இருந்த கடையில் என் அப்பா உட்கார வைத்து விட்டார். தெருக்களில் போய் விற்பேன். கடையையும் பார்த்துக் கொள்வேன். வயது ஆக ஆக, பள்ளிக்குப் போகும் பிள்ளைகளைப் பார்க்க ஆவலாக இருக்கும். இன்னொரு பக்கம், “அவன் கூடப் பழகினால் நீயும் ஊர்சுற்றிப் பயலாகி விடுவாய்” என்று சொல்லி என்னுடன் பழகும் சிறுவர்களை அவர்களுடைய பெற்றோர் அடிப்பார்கள். படிக்காமல் இருப்பது தவறு என்று உணர்ந்தேன். ஆனால், திரும்பவும் பள்ளிக்கூடம் போக மிரட்சியாக இருந்தது. அப்பொழுதுதான் அமல்ராசு என்னும் நண்பன் ஒருவன், “பள்ளிக்கூடம் போய்தான் படிக்க வேண்டும் என்று இல்லையடா. வீட்டில் இருந்து கொண்டே தேர்வு எழுதலாம்” என்று சொன்னான். அதுதான் முதல் பொறி. உடனடியாக விண்ணப்பித்தேன். கடையில் இருந்து கொண்டே எட்டாவது தேர்ச்சி அடைந்தேன்.
அடுத்து பத்தாவது… கம்மியர் கடையில் படித்தால் அடிப்பார்கள். எனவே, இரண்டு இரண்டு தாளாகக் கொண்டு சென்று கடை முதலாளிக்குத் தெரியாமல் படிப்பேன். எழுதி எழுதிப் பார்ப்பேன். நான்கு தடவை தவறாக எழுதினால், ஐந்தாவது தடவை சரியாக எழுதி விடுவேன். மற்றவர்கள் மாதிரி வேகமாக எழுத வராது. எல்லாரும் இரண்டரை மணி நேரத்தில் 50 கேள்விகளுக்குப் பதில் எழுதினால் என்னால் 20 கேள்விக்குத்தான் எழுத இயலும். கையெழுத்தும் சரியாக இருக்காது. ஆனால், விடையைச் சரியாக எழுதுவேன். இப்படித்தான் பத்தாம் வகுப்பை முடித்தேன். திடீரென்று பரிசுச் சீட்டைத் தடை செய்து விட்டார்கள். கடையை மூடிவிட்டுச் சிற்றாள் வேலைக்குப் போனேன். என் உடல்வாகுக்குச் செங்கல்லும், மண்ணும் சுமக்க முடியவில்லை. படியெடுக்கும் (செராக்சு) கடைக்குப் போனேன். அதுவும் சரியாக வரவில்லை. அப்புறம் ஒலிபெருக்கிக் கடை. அங்கிருந்து தொலைக்காட்சிப் பொறிவினைஞர் மையம். வாழ்க்கையில் நிலையான இடத்தைப் பிடிக்க அலையாய் அலைந்தேன். கடைசியாகப் பொறிவினைஞர் கடை. அங்கே வேலை செய்து கொண்டே மேனிலை இறுதி வகுப்புக்கு விண்ணப்பித்தேன். அந்த ஆண்டு பொருளியல் பாடத்திட்டம் மாறி விட்டது. அது தெரியாமல் பழைய நூலையே படித்ததால் அந்தப் பாடத்தில் தோல்வி அடைந்து, அடுத்த முயற்சியில் தேறினேன். அடுத்து, கல்லூரி போக வேண்டும்.
இப்பொழுது அப்பாவின் மனநிலையும் மாறி விட்டது. “சரி… வேலைக்குப் போக வேண்டா! படியடா” என்று சொல்லி விட்டார். எனக்கு இளநிலை அறிவியலில் கணிதம் படிக்க விருப்பம். ஆனால், தனித் தேர்வராக எழுதியதால் எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. வியாசர்பாடி அம்பேத்துகர் கல்லூரியில், “ஆங்கில இளங்கலை (B.A English) இருக்கிறது. சேர்ந்து கொள்கிறாயா” என்று கேட்டார்கள். சேர்ந்து விட்டேன். கல்லூரியில் சேர்ந்த ஒரே கிழமையில் (வாரத்தில்) என் ‘ஆங்கில அறிவைப்’ பார்த்து மிரண்டு போன பேராசிரியர்கள், “நீயெல்லாம் படித்துத் தேற முடியாது. பொறிவினைஞர் கடைக்குப் போய் ஒழுங்காகத் தொழிலைக் கற்றுக் கொள்” என்று அறிவுரை சொன்னார்கள். “போகப் போகச் சரி செய்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினேன். முதல் பருவம் (semester)… தேர்வுக்கு முதல் நாள் அம்மை கண்டு விட்டது.
எழுந்து உட்காரக் கூட முடியவில்லை. தட்டுத் தடுமாறிக் கல்லூரிக்குப் போய் விட்டேன். ஆனால், உள்ளே விடவில்லை. போராடி ஒப்புதல் பெற்றுத் தனியாக உட்கார்ந்து எழுதினேன். அடுத்த பருவத் தேர்வு நேரத்தில் பெரிய நேர்ச்சி (விபத்து). அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.
என் அணியில் படிப்பில் நிலுவை (அரியர்) இல்லாமல் பட்டம் வாங்கிய ஒரே ஆள் நான் மட்டும்தான். இளநிலை முடித்ததும் முதுநிலைக்கு நிறையக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். அலுவலர் பயிற்சிக் கழகம் (Officers Training Academy) நடத்திய ஒரு தேர்வை எழுதினேன். கல்லூரியில் தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) இருந்ததால் அந்த வாய்ப்புக் கிடைத்தது. அதில் தேர்ச்சி அடைந்து, இந்தியப் படையில் இரண்டாம் நிலைத் துணைநிலைப் படை அலுவலர் (செகண்டு இலெப்டினென்ட்) வேலைக்குத் தேர்வானேன். ஆனால், பயிற்சிக்குப் போகும் முன் திரும்பவும் பெரிய நேர்ச்சி. மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். 54 புதுநிறையாக (கிலோவாக) இருந்த எடை 38 புதுநிறையாக ஆகி விட்டது. மருத்துவர்களுக்கே புரியாத புதிர். ஆனால், நான் மனம் தளரவில்லை. அதிலிருந்தும் மீண்டு வந்தேன். ஆனால், வேலை கைவிட்டுப் போய் விட்டது.
அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபொழுது இ.ஆ.ப., (ஐ.ஏ.எசு), இ.கா.ப5., (ஐ.பி.எசு), இ.வன.ப6., (ஐ.எப்.எசு), இ.வ.ப., (ஐ.ஆர்.எசு) போன்ற மத்திய அரசின் குடிமைப்பணியில் சேர்வது என்று முடிவு செய்தேன். அதையும் இளநிலை, முதுநிலை போல மூன்றாண்டு படிக்க வேண்டும் போலும் என்ற அறியாமை நிலையுடன் அதற்கான பயிற்சி மையங்களை அணுகினேன்.
“இ.தொ.ப., (ஐ.ஐ.டி), இ.மே.ப., (ஐ.ஐ.எம்) படித்தவர்களே படாதபாடு படும்பொழுது, நீங்கள் என்ன செய்ய முடியும்” என்று அந்தப் பயிற்சி மையம் என்னைப் புறக்கணித்தது. அப்பொழுதுதான் என் நண்பர் ஒருவர், “இது போட்டித் தேர்வுதான். வழக்கம்போல நீயே படித்து முயற்சி செய்” என்று சொன்னார்.
அதற்கான முயற்சியில் இறங்கித், தேர்வு எழுதினேன். அகில இந்திய அளவில் முதல் மாணவனாக, என்னுடன் போட்டி இட்ட எண்ணூறாயிரம் மாணவர்களை வெற்றி கண்டு இந்திய அளவில் முதல் மாணவனாக வெற்றி பெற்றேன். இ.வ.ப அலுவலர் ஆனேன். பயிற்சி மையம் சொன்ன இ.தொ.ப., இ.மே.ப மாணவர்கள் எல்லாம் தேர்ச்சியில் என்னை விட வெகு தொலைவில் இருந்தனர்.
குறிப்புகள்:
- இ.வ.ப. – இந்திய வருமான வரிப் பணி;
- இ.மே.ப. – இந்திய மேலாண்மைப் பயிலகம்;
- இ.தொ.ப. – இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம்;
- இ.ஆ.ப. – இந்திய ஆட்சிப் பணி
- இ.கா.ப. – இந்தியக் காவல் பணி
- இ.வன.ப. – இந்திய வனப் பணி
Leave a Reply