கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும்

      – ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவில்

                               வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் உரை –

  வந்தவாசி.அக்.12.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டுஊரில் உரேகா கல்வி இயக்கமும் இலயா அறக்கட்டளையும் இணைந்து  ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவை நடத்தின.

  மன்பதையில் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றமே ஒரு நாட்டில் வளர்ச்சியை உண்டாக்க முதன்மைக் காரணமாக அமையும் என்று வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர்  அம்பேத்குமார் பேசும்போது குறிப்பிட்டார்.

     இவ்விழாவிற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார்.

  உரேகா கல்வி இயக்க ஒன்றியக் கருத்தாளர் மு.சீவா அனைவரையும் வரவேற்றார். நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு, இலயா அறக்கட்டளை செயலாளர் மா. உவராசு(யுவராசு), ஒன்றிய  ஒருங்கிணைப்பாளர் க.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      மாலை நேரக் கற்றல் மைய ஆசிரியர்களுக்கு நாட்குறிப்பு, குழந்தைகளுக்கு இலவச தண்ணீர்க் குப்பிகளை ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.எசு.தரணிவேந்தன் வழங்கினார்.

      கடந்த கல்வியாண்டில் சிறப்பான முறையில் கல்விப் பணியாற்றிய செம்பூர், அம்மையப்பட்டு, மருதாடு, கன்னிகாபுரம்  ஆகிய ஊர்களைச் சேர்ந்த உரேகா ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணிகளை வழங்கி வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எசு.அம்பேத்குமார் பேசும்போது,

“ஒவ்வொரு தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், குமுகாய வளர்ச்சிக்கும் கல்வி மிகவும் இன்றியமையாதது. இளைய வயதிலேயே நாம் பெறும் கல்வியானது நம்மையும் நம் சிந்தனைகளையும் வளர்க்கப் பேருதவியாக இருக்கும். நம் நோக்கம் உயர்வானதாக இருக்குமானால், நம் சிந்தனையும் செயலும் நிச்சயம் உயர்வானதாகவே அமையும்.  வந்தவாசி தொகுதியில் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு எப்போதுமே கூடுதலான ஆர்வமுண்டு. கடந்த நான்கு மாதங்களில் எனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில்  படிக்கும் குழந்தைகளுக்குத் தூய்மையான குடிநீர், நலஆதாரமான கழிப்பறை ஆகியவை கிடைக்க வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ உரூ.50 இலட்சம் செலவிலான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளேன்.

   தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் மட்டுமில்லாமல், உயர் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திடத் திட்டமிட்டு வருகிறேன்.

     எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியும் அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியை அளவீடாகக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. சிறந்த கல்வியை வழங்குவதன் மூலமாகச் சிறந்த குடிமக்களை உருவாக்க முடியும்.  ஊர்ப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கென எவ்வித  எதிர்பயனையும் எதிர்பாராமல் சேவை செய்த ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

என்றார்.

       மாநிலக் கருத்தாளர்கள் க.முருகன்,  இரா.அசோக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

      நிறைவாக, ஒன்றியக் கருத்தாளர் பு.அரிகரன் நன்றி கூறினார்.

-வந்தை அன்பன்