நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க!

 

  தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன்  அழைப்பு விடுத்துள்ளார்.

  எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048 / 12.06.2017 அன்று பிரித்தானியா, பிரான்சு, சுவிசு, செருமனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா முதலான நாடுகளில் இக்கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

 இது குறித்து தலைமையர் விசுவநாதன் உருத்ரகுமாரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் தாயகத்தில் இடம் பெறும் தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம் பெயர் நாடுகளில் போராட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

  இத் தீர்மானத்துக்கமையவே வைகாசி 29, 2048 / 12.06.2017 திங்கட்கிழமையன்று முதற்கட்டமான அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  இப் போராட்டங்களில் புலம் பெயர் தமிழ் மக்களும் நீதிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்களும் பெருந்தொகையில் பங்கு கொள்ளுவது அனைத்துலகக் கவனத்தை எமது தாயக உறவுகள் நோக்கி ஈர்க்க உதவும். மேலும் தமக்கு ஆதரவாகப் புலம் பெயர் நாடுகளிலும் தமது உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் எனும் செய்தி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் எமது மக்களுக்குத் தெம்பையும் உற்சாகத்தையும் வழங்கக் கூடியது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்;.

  அரசியல் அரசுதந்திர வழிமுறைகளில் தமிழீழ மக்கள் தமது தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் அறவழியிலான தொடர்ச்சியான அரசியற் போராட்டங்கள் மிகவும் முதன்மை வாய்ந்தவை.

   மக்கள் தாம் எதிர் கொள்ளும் சிக்கல்களை அனைத்துலகமயப்படுத்தவும் தமது அறக்கோபத்தினை வெளிப்படுத்தவும் இத்தகைய போராட்டங்கள் பெரிதும் துணை செய்யும். நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் செய்ய முயலும் பாசாங்கு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தவும் இத்தகைய அறப்போராட்டங்கள் துணை நிற்கும்.

  அதேபோல எந்தவொரு அரசுதந்திரச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் சாதகமான புறச்சூழலை அறப்போராட்டங்கள் உருவாக்கித் தர வல்லவை. ஆயுதப்போராட்டக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு அரசுதந்திரக் கதவுகளைத் திறந்து உதவினவையோ அதேபோல எழுச்சிகரமான அறப்போராட்டங்கள் அரசுதந்திரத் தளத்தில் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடக்கூடிய ஆற்றல் கொண்டவை.

  அறவழிப் போராட்டங்கள் எப்போது எழுச்சியுடனும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப் படுகின்றனவோ அப்போதுதான் இத்தகைய ஆற்றல்களைத் தம்மிடையே வரித்துக் கொள்ளும் தகைமை பெறுகின்றன.

  தாயகத்தில் மட்டுமன்றித் தமிழகம் மற்றும் உலகளாவிய தமிழர் எல்லோரும் தாம்வாழும் நாடெங்கும் அறவழிப் போராட்டங்கள் வளர்ச்சியடைவும் வலுப்பெறவும் உழைப்பது காலத்தின் தேவையாகவுள்ளது.

  தாயகத்தின் அறவழிப்போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்தும் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொகையில் அணிதிரள்வோமாக!

  இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்ரகுமாரன் விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.