66vaigaianeesu-name

பிணைக்கையொப்பம் இடுவோர் விழிப்பாக இருங்கள்!

  “பனை மரத்தில் பாதி தூரம் ஏறுவதும் பிணைக் கையெழுத்திடுவதும் ஒன்று” என்பது முதியோர் வாக்கு. “நுங்கு தின்றவன் ஓடிப்போய்விட்டான். மட்டையை நோண்டித் தின்றவன் அகப்பட்டுக்கொண்டான்” என்பது பழமொழி. அவ்வாறு பிணைக் கையெழுத்திட்டு ஓய்வூதியக்காலத்தில் நிம்மதியாகக் காலத்தை ஓட்டாமல் மிகுந்த மனஉளைச்சலடைந்து, பணத்தையும் இழந்து, மனநிம்மதியையும் கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.

  திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டியின் மகன் சடையாண்டி. இவர் அஞ்சல்துறையில் உதவி அஞ்சல் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அஞ்சல் துறையில்   இராசராசன்(குசிலியம்பாறையில் உதவி அஞ்சல் தலைவர்) என்பவரும் பணிபுரிந்துள்ளார். இருவரும் ஒரே துறையில் அலுவலகத்தில் பணிபுரிவதால் தங்களுடைய வீட்டுச்செலவு, மருத்துவச்செலவு உள்ளிட்டவற்றிற்குக் கடன் வாங்க முயன்றுள்ளனர். அதன்பின்னர் இருவரும்   ஒருவருக்கொருவர் பிணையாக – அஃதாவது சடையாண்டிக்கு இராசராசனும், இராசராசனுகு்குச் சடையாண்டியும் காப்புறுதியொப்பமிட்டு ஓர் இலட்ச உரூபாய்த் தொகை கடனாகத், திண்டுக்கல்லில் யாதவ மேட்டுராசாபட்டி, ஆர்த்தி திரையங்கு சாலையில் உள்ள சாந்தா வளாகத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் அஞ்சல்-தந்தி கடன் சங்கத்தில் பெற்றுள்ளனர்.

  திண்டுக்கல் தலைமை அஞ்சல் தலைவரிடம் சம்பளச் சான்று பெற்று ஒவ்வொரு மாதமும், இராசராசனின் சம்பளத்தில் பிடித்தம் செய்து 5 ஆம் நாளுக்குள் கட்டிவிடுகிறேன் என்று அஞ்சலகத்தலைவர், சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதன் பேரில் கடன் வாங்கியுள்ளார்கள். ஆனால், இராசராசன் சம்பளத்திலிருந்து கடன் தவணைப் பிடித்தம் செய்யப்படவில்லை. அப்போது சங்கத்தில் செயலராகப் பணிபுரிந்த சோமசுந்தரமும், இராசராசனிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு கடன் தவணைகளைத் திரும்பப் பெறவில்லை.. இந்நிலையில் இராசராசனின் சொத்துக்குக்கு ஆசைப்பட்ட இராசராசன் மனைவி சகாய சாந்த சீலா, மாமியார் நிர்மலாதேவி(தற்பொழுது நாகல்நகர் உதவி அஞ்சல் தலைவர்) ஆகியோர் தூண்டுதலின் பேரில் அவர் மருமமான முறையில் 19.2.2005 அன்று இறந்துவிட்டார்.

  கணவர் இறந்த பின்னர் அவருடைய மனைவியை மரபுரிமையராக நியமிப்பது அரசின் விதிமுறை. அவ்விதிப்படி திண்டுக்கல் ஆர்.எம். குடியிருப்பில் உள்ள எண்.165 முல்லைத் தொகுதியில் வசித்து வரும் இராசராசனின் மனைவி சகாய சாந்த சீலாவுக்கு 24.11.2006 ஆம் ஆண்டு அஞ்சலகப் பணிப்பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  மருமமான முறையில் இறந்த இராசராசனுக்கு அடியனூத்து சிற்றூர், நல்லாம்பட்டி அருகில் உள்ள காவேரி நகரில் பல இலட்சம் மதிப்புடைய (எண் 485-1,486-1 ) இரண்டு வீடுகள் உள்ளன. கடன் நிலுவையை முறைப்படி இறந்தவரின் மரபுரிமையர்தான் கட்டவேண்டும். ஆனால், அதற்கு முன்னர்; 23.11.2005 ஆம் ஆண்டு இராசராசனுக்காகக் காப்புறுதி அளித்ததாகக்கூறி இராசராசனின் கடன் நிலுவையைக் கட்டுமாறு (சங்கத்தின் சார்பாக) பழனிச்சாமி என்ற தனிஅலுவலர் சடையாண்டியை வற்புறுத்தி உள்ளார்.

  இதே போன்று இச்சங்கத்தில் கடன்பெற்ற ரேவதி என்பவர் திம்மராயப்பெருமாளுக்குக் காப்புறுதி அளித்ததில் திம்மராயப்பெருமாளின் மனைவிதான் வங்கிக் கடனை அடைக்கவேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பு எண் 2811-12 நாள். 4.7.2014 ஆகும். இந்நிலையில் செயலர் சோமசுந்தரம்இராசராசன் மனைவியிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு கடனைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

  இந்நிலையில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சடையாண்டி, கடனாளியின் மரபுரிமையர்தான் பணத்தைக் கட்டவேண்டும் என வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அவ்வழக்கு ( முல வழக்கு எண் 7-2007, / ஐ.ஏ. எண் 15-2007)   நிலுவையில் உள்ளது.

  கூட்டுறவு வங்கி சட்டப்படி அஞ்சலகத் தலைவர் மாதாமாதம் ஒவ்வொரு 5 ஆம் நாளுக்குள்   கடன் பெற்ற இராசராசனின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து இருக்கவேண்டும். அப்படி அவர் கட்டத்தவறினால் சங்கச் செயலர், கோட்டக் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எதுவும் செய்யவில்லை.

  மருமமான முறையில இறந்த இராசராசனின் மனைவி சகாய சாந்த சீலாவுக்கு 3.3.2008 அன்று வங்கி சார்பில் கடனை கட்ட அறிவிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. இதற்குச் சகாய சாந்த சீலா அந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற-மதுரை கிளையில் வழக்க தொடுத்துள்ளார். அதனுடைய எண் 2883 -2008 ஆகும். அதில் ஒரு இலட்சம் உரூபாய் மட்டும் கட்டுகிறேன். வட்டித்தொகையாக உள்ள 69,155 ஐத் தள்ளுபடி செய்யவேண்டும் என நீதியரசர்களிடம் முறையிட்டுள்ளார். அதற்கு நீதியரசர் சந்துரு அவர்கள் 27.8.2008 அன்று மூலத்தொகையையும் வட்டியையும் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

  அதன்பின்னர் 26.6.2012 அன்று சடையாண்டி கடன் வாங்கியதில் வெறும் உரூ.236 மட்டுமே இருந்துள்ளது. ஆறுவருடங்களுக்குப் பின்னர் 24.11.2006 ஆம் அன்று உரூ.16,189 நிலுவை உள்ளதாகவும், அதற்கு 20.5% வட்டியுடன் கட்டவேண்டும் என்றும் தவறான அறிவிப்பைச செயலர் சோமசுந்தரம் துணைப்பதிவாளர் மூலம் அனுப்பி உள்ளார். இதன் தொடர்பாகச் சடையாண்டி கூறுகையில், “நானும் இராசராசன் என்பவரும் கூட்டுறவு வங்கியில் 5 ஆண்டு காலத்தில் திங்கள்தோறும் தவணைத்தொகையைச் செலுத்துவதாக ஆளுக்கு ஓர் இலட்சம் உரூபாய் கடன் வாங்கினோம். நான் கடன் முழுவதையும் அடைத்துவிட்டேன். இராசராசனுக்கு உரூ1,69,655 நிலுவை உள்ளது. அவர் கடந்த 19.2.2005 அன்று இறந்துவிட்டார். அவர் இறந்தவுடன் அவருடைய அஞ்சலகப் பணிப்பயன்கள் மூலம் நிலுவைத்தொகையைக் கட்டவேண்டும் எனக்கூறி 16.8.2005 ஆம் ஆண்டு திண்டுக்கல் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளருக்குக் கூட்டுறவு சங்கத்திலிருந்து பதிவஞ்சல் அனுப்பபட்டுள்ளது.

  மேலும் சடையாண்டியும் 23.1.2006, 21.11.2006 மற்றும் பல நாள்களில் அஞ்சலக அதிகாரிகளுக்கு விதிப்படி மரபுரிமையரிடம் பணம் பெறுமாறு மடல் அனுப்பி உள்ளார். அப்போது குருசாமி என்பவர் கண்காணிப்பாளராக இருந்தார். அவர் இராசராசனின் மனைவிக்குப் பணிக்கொடைகள் வழங்கும்போது அந்தப்பணத்தை பிடித்தம் செய்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் 31.10.2013 அன்று நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஓய்வு பெற்ற பின்னர் இராசராசனின் கடனுக்காக எனது ஓய்வு பணிக்கொடைத் தொகையாக உரூ.2,64,504 ஐ வழங்குமாறு சென்னை அஞசல் கணக்கு அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளருக்கு உத்தரவு வந்தது. அந்தப்பணத்தில் இராசராசனின் மேற்படி கடன் சங்க நிலுவை உரூ.1,69,655 ஐயும் பிடித்துக்கொண்டு மீதியைக் கொடுக்குமாறு நிலக்கோட்டை அஞ்சலகத்தலைவருக்குத் திண்டுக்கல் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளர் உத்தரவு இட்டுள்ளார்.

  திண்டுக்கல் தலைமை அஞ்சலகத்தலைவர் இராசராசனின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யாதது முதல் தவறு. இராசராசன் இறந்ததும் அஞ்சலக பணப்பயன்கள் வழங்கும்போது மேற்படி கடன் சங்க நிலுவை உரூ.1,69,655 ஐப் பிடிக்காமல் கையூட்டு பெற்றுக்கொண்டு கொடுத்ததது அடுத்த தவறு. எனக்கு மனநலம் பாதித்த மகன் ஒருவர் உள்ளார். எனக்கு நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் உள்ளன. இதனால் மருத்துவச்செலவிற்கும், என்னுடைய மகனைப் பேணவும் பணம் தேவைப்படுகிறது” என்றார்.

  இதன் தொடர்பில் சகாய சாந்த சீலா எண்ணில் தொடர்பு கொண்டோம். அணைத்துவைக்கப்பட்டுள்ளதாகவே குரல் வந்தது. இராசராசனின் மாமியார் நிர்மலா தேவி எண்ணான 98420-19885 மற்றும் 0451-2420248 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோம். அலுவலக வேலையில் இருப்பதாகவும் அலுவலகம் முடிந்தவுடன் விபரம் கூறுகிறேன் என்றும்கூறி இணைப்பைத் துண்டித்துக்கொண்டார். எனவே காப்புறுதிக் கையெழுத்திட்ட சடையாண்டிக்குக் கொடுக்கப்படவேண்டிய ஓய்வூதியப்பலன்களை விரைந்து அவருக்கு வழங்கவேண்டும் என்றும் கடன் பெற்றவர் இறந்த பின்னர் அவருடைய மரபுரிமையரான மனைவிதான் பணம் கட்டவேண்டும் என்றும் மருமமான முறையில் இறந்த இராசராசன் உடலைக் காவல்துறையினர் மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், சோமசுந்தரத்தின் மோசடிகளை மத்தியப்புலனாய்வுப்பிரிவு(சி.பி.ஐ.) விசாரணை செய்யவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர் முறையீட்டின் நீதியை உணர்ந்து மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். .

  துணைத்தகவல்கள்: சோமசுந்தரம் தற்பொழுது மதுரை மாவட்டம், செக்காணுரானி அருகே உள்ள க.வடக்கம்பட்டியில் புறநூலகத்தில் பணிபுரிகிறார். சோமசுந்தரம் பணியின்போது பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளார். மேலும் பணம் அதிகமாக இருந்த காரணத்தினால் பெண்களிடம் சோரம் போய் உள்ளார். இதனையறிந்த அவருடைய மனைவி மணவிலக்கு பெற்றுவிட்டார். மேலும் சோமசுந்தரம் செய்த பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் சம்பந்தமாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 30.10.2014 அன்று வழக்கு ஒன்றைப் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்துள்ளனர். அவ்வழக்கு எண் 17466-2014. அவ்வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.