கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது
கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது
கீழடி அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க 5000த்திற்கும் அதிகமான தொல்லியல் பொருட்களைத் தமிழக மக்கள் எளிதில் கண்டுணரும் வண்ணம், கீழடித் தொல்லியல் பொருட்களைத் தமிழகத்தில் வைத்து பாதுகாக்கும் நோக்கோடு கடந்த புரட்டாசி 16, 2047 / 02.10.2016 அன்று பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து “கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம்” உருவாக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் கிடைக்கபெற்ற ஏறக்குறைய 5000 தொல்லியல் பொருட்களை முறையாக ஆவணம் செய்து, அதனை மக்கள் காணும் வகையில் கீழடிச் சுற்றுவட்டாரப் பகுதியில் உடனடியாக கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே மைசூருக்குக் கொண்டு சென்ற கீழடித் தொல்லியல் பொருட்களை முழுமையான ஆய்வுக்குட்படுத்தி கீழடிச் சுற்றுவட்டார பகுதியில் அமைக்கப்படும் அருங்காட்சியத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
கீழடியில் கண்டறியப்பட்டுள்ள ஏறத்தாழ 110காணி(ஏக்கர்) தொல்லியல் மேடு முழுவதையும் தமிழக அரசின் தொல்லியல் துறையும் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காகத் தொல்லியல் அறிஞர்கள், தமிழறிஞர்கள், நிலவியல் அறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் முதலான அறிஞர்கள் அடங்கிய ஆய்வு அவை உருவாக்கப்பட வேண்டும். முறையான பயிற்சி வழங்கித் தொல்லியல் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு ஆய்வு நடைபெற வேண்டும். தொல்லியல் சான்றுகளின் வழியாகத் தமிழக வரலாற்றை மக்கள் அறியும் வண்ணம் கீழடி ஆய்வுகளையும், தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளையும் முறையாக ஆவணப்படுத்தித் தமிழக அரசு தொல்லியல் இதழ் ஒன்றைத் தொடங்கி, அதில் வெளியிட வேண்டும்.
தமிழக அரசிடம் மேல் சொன்ன கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வேலைகளைச் செய்வதாகத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தமிழகத் தொல்லியல் அறிஞர்களைக் கொண்டு, வருகிற ஐப்பசி 07, 2047 / 23.10.2016 அன்று மதுரையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கருத்துரைகள், செயல்கள் வழியாக மக்கள் இயக்கங்கள், தனியர்கள், கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து கொண்டு இந்த இயக்கத்தை வலுப்பெறச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம்.
கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம்
8608266088, 9789789270
இந்த முயற்சி இன்றைய காலத்தின் கட்டாயம்! அரசு கூட அக்கறையெடுக்காத இந்த விவகாரத்தில் தானுவந்து பொறுப்பேற்றிருக்கும் நல்லுள்ளங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!
கீழடி அகழ்வாராய்வுக் கட்டடங்களில் காணப்பெறும் செங்கற்களைப் பார்க்கும்போது இதே வகையிலான செங்கற்கள் ஆழிப்பேரலையால் வெளிக்கொணரப்பட்ட சாளுவன்குப்பத்து சங்ககால முருகன் கோவிலில் ( https://ta.wikipedia.org/s/k04 ) பார்த்ததாக நினைவு.