குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வலியுறுத்தல்
மக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க,
தேவதானப்பட்டி பேரூராட்சி
வலியுறுத்தல்
தேவதானப்பட்டிப்பகுதியில் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும் எனப் பேரூராட்சி நிருவாகம் வலியுறுத்தி உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் குளம், கண்மாய், ஏரிகள், ஆறுகள் என அனைத்தும் வறண்டு கிடந்தன. இதனால் குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடியது. இருப்பினும் தேவதானப்பட்டிப் பேரூராட்சி மஞ்சளாறு அணையில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துச் சீராகக் குடிநீரை வழங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இதனால் மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் 57அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் குடிநீருக்காகவும் பாசனவசதிக்காகவும் அணை திறக்கப்பட்டது. தற்பொழுது மஞ்சளாறு அணைப்பகுதியில் உள்ள கிணறுகள் மூலம் தேவதானப்பட்டி பகுதிக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மழைத்தண்ணீர் என்பதால் மண்கலந்த நீராக வருகிறது. தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் மழையால் இருமல், சளி, காய்ச்சல், கண்நோய் எனப் பலவகை நோய்கள் குடிநீர் மூலம் பரவ வாய்ப்புள்ளது. எனவே தேவதானப்பட்டிப் பேரூராட்சிப்பகுதி மக்கள் குடிநீரைக் காய்ச்சிப் பருகவேண்டும் எனவும் திறந்த இடங்களில் உள்ள திண்பண்டங்கள், ஈ மொய்க்கின்ற பலகாரங்களை உண்ணுவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது; இந்த அறிவிப்பை ஒலிபெருக்கி வாயிலாக தெரியப்படுத்தி வருகிறது; மேலும் கழிவு நீர், வீட்டைச்சுற்றியுள்ள மழைநீர், போன்றவை தேங்கிவிடாமல் பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது.
தக்க நடவடிக்கை எடுத்து வரும் தேவதானப்பட்டி ஊராட்சியினருக்குப் பாராட்டுகள்.
Leave a Reply