eezham-genocide32karunanidhi-meeting02

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல்

குழியும் பறித்துவிட்டது!

கலைஞர் மு.கருணாநிதி

” ‘தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும்’ என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஆதிக் குடி மக்களான ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்குமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், திகைப்புத் தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நேற்று (௨-௧௦-௨௦௧௫ ) நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம்.

  அதில், அமெரிக்கா தொடக்கத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில் இருந்த ‘பன்னாட்டு’ என்ற சொல் இந்தத் தீர்மானத்தில் நீக்கப்பட்டுள்ளது.   உலகத்தின் பல்வேறு உசாவல் அமைப்புகளாலும் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட இனப் படுகொலைபற்றி இந்தத் தீர்மானத்தில் எதுவும் இடம் பெறவில்லை.

  மேலும், அந்தத் தீர்மானத்தில் இந்த உசாவலை ‘இலங்கை’ அரசே நடத்த வேண்டுமென்று குறிப்பிட்டிருப்பது, குற்றம் சாட்டப்பட்டவரிடமே குற்ற உசாவல் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு இணையாகும்.   நீதி விசாரணையைப் பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளைச் சேர்ந்த நீதியாளர்களைக் கொண்டு நடத்தினாலும், அவர்கள் இலங்கை அரசின் நேரடிப் பார்வையில் இலங்கையிலே இருந்து கொண்டு உசாவல் நடத்தினால், அதன் முடிவு எப்படியிருக்கக் கூடும் என்று ஐயம் கொள்ள இடம் வருமில்லையா?   மேலும், பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பீடத்தில் தற்பொழுது இலங்கைதான் இருந்து வருகிறது என்பதையும் ஒதுக்கி விட முடியாது.

  கொடுமையிலும் கொடுமையாக, அந்தப் போர்க்குற்றங்களைச் செய்த சிங்களப் பேரினச்சார்பு இலங்கைக்குத் துணையாக நம்முடைய இந்தியாவும் அமைதி காத்துள்ளது. நாடற்றவர்கள் நாதியற்றவர்களாகி விட்ட நிலைதான் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை என்ற நாட்டுக்குச் சார்பாகத்தான் அமெரிக்காவும் இருக்கிறது, இங்கிலாந்தும் இருக்கிறது, சீனாவும் இருக்கிறது, அந்த நாடுகளோடு இந்தியாவும் இருக்கிறது.   இலங்கையில் இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரின்பொழுது, ௪௦ (40) ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையக் குழு உசாவல் நடத்தியது. அந்தக் குழுவின் அறிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த சனவரியில் இலங்கை அரசின் வேண்டுகோளின்படி, அறிக்கை அளிப்பது ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அறிக்கை கடந்த ௧௬ (16)ஆம் நாளன்று அளிக்கப்பட்டது.

  “குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது” என்பதைப் போல நடுவண் அரசு தனியே தீர்மானமும் கொண்டு வரவில்லை;   மாறாக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரித்து விட்டது. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நிறைவேற்றப்பட்டுள்ள நீர்த்துப் போன தீர்மானத்தையாவது இலங்கை அரசு முழு மனத்தோடு நேர்மையான முறையிலே நிறைவேற்றுமா என்பது பெரும் ஐயப்பாட்டுக்கு உரியதுதான்.   ஏனெனில், இலங்கை சிங்கள அரசின் கடந்த கால வரலாறு யாருக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

  இந்த நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேறியுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு முழுமையான அளவுக்கு நிறைவையோ, நம்பிக்கையையோ தரக்கூடிய ஒன்றில்லை.   ஆனால், இது பற்றி அக்கறையோடு, ஆதரவாக இருந்திருக்க வேண்டிய இந்திய நடுவண் அரசும் தமிழர்களுக்கு உகந்த நிலை எடுக்கவில்லை என்பதையும், தமிழக அரசின் தீர்மானத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.   ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஈழத் தமிழர்கள் பட்டுள்ள ஆழமான காயங்களுக்கு உரிய மருந்தாகாது.”

– கலைஞர் மு.கருணாநிதி

– செய்தியாளர் இ.பு.ஞானப்பிரகாசன்

[தகவல்கள்: நன்றி மாலைமலர், ஒன்இந்தியா – தமிழ், தினமணி]

kanneerthuli_eyedrops